விஜய்யின் தமிழக வெற்றிக் கழக முதல் மாநில மாநாடு நேற்று முன்தினம் (27-10-24) விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் ‘வெற்றிக் கொள்கைத் திருவிழா’ என்ற பெயரில் நடைபெற்றது. இந்த விழாவில் விஜய் பேசும் போது பல்வேறு விஷயங்களை தன்னுடைய பேச்சில் குறிப்பிட்டார். அதில் “பிரிவினைவாதம், ஊழல் கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும். 2026 சட்டப்பேரவை தேர்தலில் தனிப்பெரும்பான்மையோடு வெற்றி பெறுவோம். நம் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு வருபவர்களுக்கு ஆட்சி, அதிகாரத்தில் பங்களித்து அதிகாரப் பகிர்வு செய்யப்படும்” என்று விஜய் தனது பேச்சில் குறிப்பிட்டார்.
விஜய்யின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் எம்.பி மாணிக்க தாகூர் ஆதரவு தெரிவித்துள்ளார். எம்.பி மாணிக்க தாகூர் தனது எக்ஸ் தளத்தில், “சாதிவாரி கணக்கெடுப்பு, கூட்டணி ஆட்சி இரண்டும் எனக்குப் பிடித்திருந்தது” என்று பதிவிட்டுள்ளார்.
விஜய்யின் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு அளித்து வரும் நிலையில், திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. ஒருவரும் இந்த கருத்தை கூறியிருப்பது கவனிக்கத்தக்கது.