சென்னையில் நடந்த சிவ சம்போ படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழாவில் நடிகர் செந்தில், இமான் அண்ணாச்சி, இயக்குனர் பேரரசு உட்பட பலர் கலந்துகொண்டனர். பகவதி பாலா தயாரித்து, இயக்கும் இந்த படத்தில் காமெடி நடிகர் செந்தில் வில்லனாக மாறியிருக்கிறார். நட்ராஜன் ஹீரோ. இது பெண்களுக்கு முக்கியத்துவமுள்ள கதை.
விழாவில் நடிகர் செந்தில் பேசியது: ‘‘ இன்னிக்கு பல படங்கள் ஓடுவது இல்லை. நிறைய இழப்பு என்று சொல்கிறார்கள். அதற்கு முக்கியமான காரணம் கதைதான். நாம கதையை சரியாக எடுத்தால், காட்சிகளை மக்களுக்கு பிடிக்கும்படியாக சொன்னால், அந்த படம் வெற்றி படமாக அமையும். காமெடியும் அப்படிதான். குடும்பத்துடன் ரசிக்கும்படி காமெடி காட்சிகள் அமைய வேண்டும். அப்படிப்பட்ட காமெடியை அனைவரும் ரசிப்பார்கள். இன்றைக்கு கம்யூட்டர், செல்போன் யுகம் நடக்கிறது. அதற்கேற்ப நாம் மாற வேண்டும். இங்கே இயக்குனர் பேரரசு வந்திருக்கிறார். அவர் படங்கள் கமர்ஷியலாக வெற்றி பெற்றது. அவர் படத்தில் நான் நடித்தது இல்லை. ஆனால், நான் நடித்த படங்களில் அவர் உதவி இயக்குனராக பணியாற்றியிருக்கிறார். அவர் மறைந்த ராம.நாராயணன் உதவியாளர். ஆகவே, ஒரு படம் வெற்றி பெற பல விஷயங்கள் இருந்தாலும் கதைதான் முக்கியம். இதை பலரும், பல ஆண்டுகளாக உணர்ந்து இருக்கிறார்கள்’’ என்றார்
இன்னொரு காமெடி நடிகரான இமான் அண்ணாச்சி பேசுகையில் ‘‘செந்தில் அண்ணன் இந்த படத்தில் நடித்து இருக்கிறார். அவருடன் நான் நடித்தது பெரிய பாக்கியம். இந்த படத்தில் அவர் வில்லனாக வருகிறார். அதுவே ரசிகர்களுக்கு புதிதாக தெரியும்.
என்னை பொறுத்தவரையில் அவர் காமெடியில் தொடர வேண்டும். வில்லன் என்பது வேறு ஏரியா. அது வேண்டாம் .’’ என்றார்