x வளைத்தளத்தில் நமது முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடமிருந்து ஒரு பதிவு “தம் உறுப்புகளை ஈந்து, பல உயிர்களைக் காப்போரின் தியாகத்தினைப் போற்றிடும் வகையில், இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும்! ” என்று முதல்வரின் பதிவு தெரிவித்திருந்தது.
வருடந்தோறும், ஆகஸ்ட் 13 ஆம் தேதியை உலக உறுப்பு தான தினமாக கொண்டாடப்படுகிறது.
சமீபத்தில் நடந்த 13 வது இந்திய உறுப்பு தான தினத்தையொட்டி, தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு (NOTTO – National Organ and Tissue Transplant Organization) வழங்கும் சிறந்த மாநில உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்புக்கான (SOTTO – State Organ and Tissue Transplant Organisation) விருதை தமிழ்நாடு பெற்றது. இந்த விருதைப் பெற்ற சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் “நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உடல் உறுப்புகளை மீட்டெடுக்கும் உரிமம் தமிழ்நாடு உள்ளது,” என்று அவர் கூறினார்.
தமிழகத்தில், 2008ஆம் ஆண்டு முதல் இதுவரை மொத்தம் 786 இதயங்கள், 801 நுரையீரல், 1,566 கல்லீரல், 3,047 சிறுநீரகங்கள், 37 கணையம், 6 சிறுகுடல்கள், இரண்டு வயிறுகள் மற்றும் நான்கு கைகள் மாற்றப்பட்டுள்ளன. அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, மொத்தம் 3,950 சிறிய உறுப்புகள் மற்றும் திசுக்கள் மாற்றப்பட்டுள்ளன.
அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் தகுதி உள்ளவர்களாக முன்னாள், இந்நாள் குடியரசுத் தலைவர், பிரதமர், மாநில முதலமைச்சர் என ஒரு குறிப்பிட்ட உயர் பதவி வகித்தவர்கள் மட்டுமே வரையறுக்கப்பட்டிருந்தனர்.
காலப்போக்கில், இறந்துபோனவர் சமூகத்துக்கு எந்த அளவுக்கு பங்காற்றி இருக்கிறார் என்பதை அடிப்படையாக வைத்து மாநில அரசின் ஒப்புதலுடன் அரசு மரியாதை உறுதி செய்யப்படும். அரசியல், கலை, இலக்கியம், அறிவியல், சட்டம் என இதில் ஏதாவதொரு துறையில் மிகப்பெரிய பங்களிப்பையும் சமூகத்தில் தாக்கத்தையும் ஏற்படுத்தி இருந்தவர் இறந்துபோகிறார் எனில் அவரை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய மாநில அரசு முடிவெடுக்கும். இந்த வரிசையில், உடல் உறுப்புதானம் செய்பவர்களுக்கும் அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்படும் என்ற செய்தி மகிழ்ச்சியுடன் சேர்ந்து பெருமையையும் அளிக்கிறது.