ஊட்டியில் அமுதா கபே தொட்ட பெட்டா சிகரத்துக்கு அடுத்து புகழ் பெற்ற ஓட்டலாக இருக்கிறது. இதனை நிழல்கள் ரவி நடத்தி வருகிறார். அவரது மகன் கயல் சந்திரன் , சகோதரி மைனா நந்தினி, ஆகியோர் கவனித்துக் கொள்கிறார்கள். ரவி படுத்த படுக்கையாக இருந்து உயிருக்குப் போராடுகிறார். தனக்கு சென்னையில் ஒரு மகன் இருக்கிறான் அவனை கண்டுபிடித்துக் கொண்டுவா என்று இறுதி போராட்டத்தில் இருக்க, சந்திரன் அம்மா மீரா கிருஷ்ணனுக்கு தெரியாமல் சென்னைக்கு வருகிறார். சென்னையில் பரபரப்பான சாலையில் வண்டிக்கடை போட்டிருக்கும் யோகிபாபுவை சந்திக்கிறார். அதன் பிறகு நடப்பதுதான் ஊட்டி குளிர் போல மனதில் ஜில்லிட வைக்கிறது.
இயக்குனர் ராதாமோகன் இயக்கத்தில் தயாரான இந்த படத்தில் அவரது ஸ்டைலில் மென்மையான இதமான உறவுகளோடு படம் நகர்கிறது. அமுதா கபே பெயருக்குப் பின்னால் இருக்கும் ரகசியமும் அதைத்தேடி செல்லும் சந்திரனின் அவஸ்தையும் நம்மை சிரிக்க வைக்கிறது. ரவி சில காட்சிகளே வந்தாலும் கலங்க வைக்கிறார். சந்திரன் தனக்குக் கிடைத்த பாத்திரத்தை வைத்து இயல்பாக நடித்திருக்கிறார். வாணி போஜன் சமையல்கார பெண்ணாக பாத்திரத்தை கையில் எடுப்பது அவருக்கு பொருத்தமில்லா பாத்திரம். யோகி பாபு வந்தவுடன் காட்சிகள் விறுவிறுப்படைகின்றன. அவரை ஊட்டிக்கு அழைக்க நண்பர்கள் போடும் திட்டம் கலகலப்பு, குமரவேல், யோகிபாபுவை சமாளிக்க ஆங்கிலம் கலந்து ராவடி செய்யும் இடம் நகைச்சுவை. ஊட்டி வந்து அப்பா ரவியை யோகி பாபு சந்திக்கும் இடம் நெகிழ்ச்சியாக இருந்தது.
சமையல்கார பெண் வாணி போஜனுக்கும், யோகிபாபுவுக்கும் நட்பு உருவாகிறது. அவரது அப்பாவாக வரும் சார்லி கட்சிகளை நகர்த்த உதவும் பாத்திரம். கதைக்களம் ஊட்டி, அழகான ஓட்டல் சூழல் என்று ரம்யமான இடத்தில் கதை நடப்பது இதமாக இருக்கிறது. ராதாமோகன் தன் ஸ்டைல் இயக்கத்தில் கதை சொல்கிறார். ஆனால் பழைய பாணி. வெப் சீரிஸ் என்பதால் நீட்டி முழக்கி காட்சிகள் நகர்வதும், அடுத்து என்ன நடக்கும் என்பதை யூகிக்கும் திரைக்கதையும் பலவீனமாக இருக்கிறது. பீல் குட் படமாக இருந்தாலும் வேகம் இல்லை. வசனம் மட்டும் அங்கங்கே காப்பாற்றுகிறது. அது ராதாமோகனின் பலம்.
ஒளிப்பதிவும் இசையூம் சூழலுக்கு தக்கபடி ஒலிப்பது சிறப்பு. அடுத்த எபிசோடுகளைக் காண ஆர்வத்தை ஊட்டுகிறது.