சமூக நீதிக்கான அகில இந்திய கூட்டமைப்பின் முதல் தேசிய மாநாடு டெல்லி இந்தியா கேட் அருகில் இன்று மாலை 4.30 முதல் 7 மணிவரை நடை பெறுகிறது. இந்த மாநாட்டில், பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏ-க்கள் மற்றும் 24 கட்சிகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் உள்ளிட்டோர் நேரிலும், காணொலி வாயிலாகவும் பங்கேற்க உள்ளனர். இந்த மாநாட்டில் சமூக நீதிக்கான அகில இந்தியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் அமைப்பாளரும், ஓய்வு பெற்ற நீதிபதியுமான வி.ஈஸ்வரய்யா வரவேற்கிறார். ஒருங்கிணைப்பாளரும், எம்.பி.யுமான பி.வில்சன் முதன்மை உரையாற்றுகிறார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணாலி வாயிலாக தலைமை உரையாற்றுகிறார்.
சிறப்பு விருந்தினர்களாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், பிகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியப் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா, சமாஜ்வாதி கட்சித் தலைவரும், உத்தரபிரதேச மாநில எதிர்கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ், ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான பரூக் அப்துல்லா, அகில இந்திய திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை குழுத் தலைவர் டெரிக் ஓ பிரைன், தேசிய காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினரும், முன்னாள் மகாராஷ்டிரா துணை முதல்வருமான சஜன் சந்திரகாந்த் புஜ்பால், ஆம் ஆத்மி கட்சி சஞ்சய் சிங், பீகார் ராஷ்ட்ரிய ஜனதாதள எம்.பி. மனோஜ் குமார் ஜா, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் அமைப்புச் செயலாளரும், எம்.பி.யுமான இ.டி.முகமது பஷீர், பாரதிய ராஷ்டிர சமிதி கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் டாக்டர் கே.கேசவ ராவ், ராஷ்ட்ரிய சமாஜ்பக் தேசியத் தலைவரும், மகாராஷ்டிரா மாநில முன்னாள் அமைச்சருமான மகாதேவ் ஜன்கர், அசாமைச் சேர்ந்த எம்.பி. நபா குமார் சாரானியா, அரியானா லோக்தந்திர சுரக் ஷா கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. ராஜ் குமார் சயினி ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த மாநாட்டை இணையதளம் மூலம் (https://bit.ly/aifsojconference) நேரலையில் காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக – பாஜக கூட்டணி பற்றி தேசியத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை: இபிஎஸ்
சேலத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “தமிழ்நாட்டில் உள்ள மாநிலத் தலைவர்களால் அதிமுக – பாஜக கூட்டணி குறித்து முடிவு எடுக்க முடியாது. அதிமுக – பாஜக கூட்டணி பற்றி முடிவு செய்ய வேண்டியவர்கள் டெல்லியில் உள்ள தேசியத் தலைவர்கள்தான். டெல்லியில் உள்ள தலைவர்கள் அதிமுக – பாஜக கூட்டணி தொடரும் என ஏற்கனவே சொல்லிவிட்டனர். கூட்டணி பற்றி பிரதமர் மோடி, பாஜக மூத்த தலைவர் அமித் ஷா மற்றும் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்” என்றார்.
முன்னதாக சென்னையில் நேற்று நடந்த இலக்கியத் திருவிழாவில் கலந்து கொண்ட பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, “பாஜகவின் வளர்ச்சி, 2024 மக்களவைத் தேர்தல், 2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்கள் குறித்து அண்மையில் நான் உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் பேசினேன். அகில இந்தியத் தலைவர்கள் தான் இந்தக் கூட்டணியை முடிவு செய்துள்ளனர். மாநிலத் தலைவராக நான் எனது கருத்தை மட்டுமே அமைச்சர் அமித் ஷாவிடம் முன்வைத்தேன். அவர் அதிமுக கூட்டணியில் பாஜக இருக்கிறது எனக் கூறினாரே தவிர கூட்டணியை உறுதி செய்யவில்லை. கூட்டணி என்றால் அதில் தொகுதி பங்கீடு, கொள்கை என நிறைய விஷயங்கள் உள்ளன. எதுவுமே கல்லில் எழுதப்பட்ட வாக்கியம் கிடையாது. அரசியல் கூட்டணி எல்லாம் தண்ணீர் போன்றது. தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்கள் இருக்கும்போது கூட்டணி குறித்து இப்போதே முதலுரையும், முடிவுரையும் எழுத முடியாது” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
`வந்தேபாரத்‘ ரெயில் சேவையை தொடங்கி வைக்க பிரதமர் மோடி 8ஆம் தேதி சென்னை வருகை
சென்னை விமான நிலையத்தில் ரூ.2,467 கோடி மதிப்பில், 2.36 லட்சம் சதுரமீட்டரில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த விமான முனையங்களின் முதல்கட்டப் பணிகள் முடிவடைந்துள்ளன. இந்த புதிய முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி வரும் 8-ந்தேதி பிற்பகலில் திறந்து வைக்கவுள்ளார். இதுதவிர, சென்னை சென்ட்ரல்-கோயம்புத்தூர் இடையிலான வந்தே பாரத் ரெயில் சேவையையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இதற்கான விழா சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் நடக்கிறது.
இதுதவிர, பிரதமர் மோடி, தாம்பரம்-செங்கோட்டை இடையே வாரம் 3 முறை விரைவு ரெயில் சேவையைத் தொடங்கிவைக்கிறார். ரூ.294 கோடியில் திருத்துறைப்பூண்டி-அகஸ்தியம்பள்ளி இடையே 37 கி.மீ. தொலைவுக்கு முடிக்கப்பட்டுள்ள அகலப் பாதையை நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கிறார். இந்த விழாவுக்காக பல்லாவரம் அருகேயுள்ள ராணுவ மைதானத்தில் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டு வருகிறது. அதேபோல, ஏப். 8-ந்தேதி மாலை மயிலாப்பூர் ஸ்ரீராமகிருஷ்ணா மடத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். அன்று இரவு ராஜ்பவனில் தங்கும் பிரதமர், கவர்னர் ஆர்.என்.ரவி மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகளை சந்தித்துப் பேச உள்ளதாகக் கூறப்படுகிறது. சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்க இருப்பதால் அதற்கான ஏற்பாடுகளை துறை அதிகாரிகள் திட்டமிட்டு செய்து வருகின்றனர்.
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: கலாஷேத்ரா பேராசிரியர் ஹரிபத்மன் கைது
சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா அறக்கட்டளையின் கீழ் செயல்படும், ருக்மிணி தேவி கவின் கலைக் கல்லூரியில் நடனம் உள்ளிட்ட கலைகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இங்கு, மாணவியருக்கு பேராசிரியர் பாலியல் ரீதியான தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. புகாரின் அடிப்படையில் நடத்திய விசாரணை குறித்து தமிழக டிஜிபிக்கு அனுப்பிய நோட்டீஸை தேசிய மகளிர் ஆணையம் திரும்பப் பெற்றது. அதன் பின்னர், கல்லூரியில் பாலியல் துன்புறுத்தல் ஏதும் நடைபெறவில்லை என தேசிய மகளிர் ஆணைய குழு அறிக்கை அளித்தது. இதனையடுத்து குற்றம்சாட்டப்பட்ட பேராசிரியர் மீது நடவடிக்கை எடுப்பதில் அலட்சியம் காட்டப்படுவதாகக் கூறி, கல்லூரி வளாகத்தில் மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே ருக்மணி தேவி கவின் கலைக் கல்லூரிக்கு ஏப்ரல் 6-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக அடையாறு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் உதவி பேராசிரியர் ஹரி பத்மன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவர் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம், பெண்ணின் அடக்க உணர்ச்சிக்கு குந்தகம் விளைவித்தல், கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் சென்னையில் இன்று அதிகாலை பேராசிரியர் ஹரிபத்மனை தனிப்படை போலீசார் கைது செய்தனர். கடந்த 30-ம் தேதி ஹைதராபாத் சென்றிருந்த ஹரி பத்மன், இன்று அதிகாலை சென்னை திரும்பிய நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.