சென்னைவாசிகளுக்கு புதுப் புதுத் தொல்லைகள் முளைத்துக் கொண்டே இருக்கின்றன.
இப்போதைய பிரச்சினை மாடுகள்.
கடந்த பத்து நாட்களில் மட்டும் மூன்று பேர் மாடுகளால் தாக்கப்பட்டிருக்கிறார்கள். மாடுகளைப் பார்த்தாலே இப்போது அச்சம் வருகிறது.
ஆகஸ்ட் மாதம் அரும்பாக்கம் பகுதியில் பள்ளி சென்று திரும்பிக் கொண்டிருந்த சிறுமியை மாடு முட்டித் தள்ளியதில் படுகாயமடைந்தாள். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினாள்.
அதற்கு ஒரு மாதம் முன்பு சாலையில் சென்றுக் கொண்டிருந்த பைக்கை மாடு முட்டியதில் பைக்கில் பின்னால் அமர்ந்து சென்றுக் கொண்டிருந்த பெண் கீழே விழுந்து இறந்தார்.
இன்னொரு சம்பவத்தில் மாடு மீது பைக் மோதி விழுந்ததில் பைக்கில் சென்றுக் கொண்டிருந்த மூன்று வயது சிறுமி இறந்தாள்.
இப்படி ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் இது போன்ற சம்பவங்கள் நடக்க,,,இப்போது அக்டோபரில் மூன்று இடங்களில் மாடுகள் சம்பவம் செய்திருக்கின்றன. மனிதர்கள் காயப்பட்டிருக்கிறார்கள்.
கடந்த 9ஆம் தேதி திருவல்லிக்கேனியில் பெரியவர் ஒருவரை மாடு முட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கு சில நாட்கள் கழித்து திருவல்லிக்கேனி டி.பி.கோயில் பகுதியில் மற்றொரு பெரியவரை மாடு முட்டித் தள்ளி அவர் காயமடைந்திருக்கிறார்.
அதற்கு இரண்டு நாட்கள் கழித்து அதே பகுதியில் குப்பைகளை கொட்டச் சென்ற பெண்ணை மாடு ஒன்று தாக்கியது.
பத்து நாட்களுக்குள் மூன்று சம்பவஙகள்.
அரும்பாக்கத்தில் சிறுமியை மாடு முட்டிய சம்பவத்தை தொடர்ந்து தெருவில் திரியும் மாடுகளை பிடிக்கும் முயற்சியில் சென்னை மாநகராட்சி ஈடுபட்டது. ஆனால் மாநகராட்சி எடுத்த முயற்சிகள் போதுமானதாக இல்லை என்பது இப்போது தெரிகிறது.
சென்னையில் 1986 மாடுகள் கண்டறியப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவிக்கிறது. அவற்றில் 513 மாடுகள் கோயம்பேடு பகுதியிலும் 377 மாடுகள் திருவல்லிக்கேனியிலும் அண்ணாநகரில் 269 மாடுகளும் இருப்பதாக கூறப்படுகிறது.
மாடுகளை சாலைகளில் அலைய விட்டால் கடுமையான அபராதங்கள் விதிக்கப்படுகின்றன. ஐயாயிரம் ரூபாய் கட்டிதான் மாடுகளை மீட்க முடியும். மாநகராட்சி ஊழியர்களால் மாடுகள் பிடித்துச் செல்லப்படுகின்றன.
ஆனால் மாடுகளை பிடிக்க விடாமல் அதனை வளர்ப்பவர்கள் தடுப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் கூறுகிறார்கள்.
”மாடுகளை சாலைகளில் விடாதீர்கள் என்று நாங்கள் சொல்லுகிறோம். ஆனால் மாடு வளர்ப்பவர்கள் அதை கேட்பதில்லை. மாடுகளை பிடிக்க போகும் அதிகாரிகளுடன் மாடுகளின் உரிமையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். மிரட்டுகிறார்கள். மாடுகளை பிடிக்கும் வாகனம் வரும் போது மட்டும் மாடுகளை கட்டிப்போடுகின்றனர். அந்த வாகனம் சென்றதும் மாடுகளை அவிழ்த்து விடுகின்றனர்.” என்கிறார் சென்னை மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன்.
சென்னை உலகின் முக்கிய நகரங்களில் ஒன்றாக மாறிக் கொண்டிருக்கும் சூழலில் சாலைகளில் மாடுகள் திரிவதும் முட்டித் தள்ளி உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவதும் ஏற்புடையதாக இல்லை.