உதயநிதியை துணை முதல்வராக்க வேண்டும் என்ற கருத்து வலுத்திருக்கிறதே தவிர பழுக்கவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழகத்தின் அமைச்சரவை விரைவில் மாற்றி அமைக்கப்படும் என்றும், துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்பார் என்றும் கடந்த சில மாதங்களாக அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு இந்த மாற்றம் இருக்கும் என்று முதலில் பேசப்பட்டது. ஆனால் நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு, விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதால் அமைச்சரவை மாற்றம் தள்ளிப்போனதாக கூறப்பட்டது.
ஆனால் விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கு பிறகும் அமைச்சரவை மாற்றி அமைக்கப்படவில்லை. இம்மாதம் முதல்வர் ஸ்டாலின் வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அவர் வெளிநாடு செல்வதற்கு முன்பாக தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்று கூறப்பட்டது.
இந்த சூழலில் முதல்வர் ஸ்டாலின், தனது கொளத்தூர் தொகுதியில் இன்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் மூலம் கட்டப்பட்டு வரும் துணை மின் நிலையம் மற்றும் சென்னை குடிநீர் வாரியத்தின் கழிவுநீர் வெளியேற்றும் நிலையம் ஆகியவற்றை பார்வையிட்டார். இதைத்தொடர்ந்து மேலும் சில நிகழ்ச்சிகளில் பங்கேர்றார்.
பெரியார் நகர் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்று வரும் கூடுதல் கட்டிடப்பணிகளை பார்வையிட்ட பிறகு முதல்வர் செய்தியாளர்களைச் சந்தித்தார். சென்னையில் சிறிதளவு பெய்யும் மழைக்கே தண்ணீர் தேங்குவதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டுகிறதே என்று அப்போது செய்தியாளர்கள் கேட்ட்தற்கு, “சென்னையில் எங்கு தண்ணீர் தேங்குகிறது என்று ஒரு இடத்தையாவது எதிர்க்கட்சிகள் காட்ட வேண்டும். பருவமழைக்கு அனைத்து வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையையும் எடுத்து வருகிறோம். எப்பேர்பட்ட மழை வந்தாலும் எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது ” என்றார்.
உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராவதைப் பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு, “உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராவது குறித்த கோரிக்கை வலுத்துள்ளதே தவிர பழுக்கவில்லை’ என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
நெல்லைக்கு புதிய மேயர்
நெல்லை மாநகராட்சிக்கு ஏற்கெனவே அறிவித்தபடி இன்று மறைமுக தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக சார்பில் கிட்டுவும், அவரை எதிர்த்து திமுகவின் அதிருப்தி கவுன்சிலர் பவுல்ராஜும் போட்டியிட்டனர். இதில் கிட்டு 30 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பவுல்ராஜ் 23 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.