சமீபகாலமாக, தமிழ் சினிமா தலைப்புகளில் ஆங்கில வாடை அதிகம் அடிக்கிறது. பெரும்பாலான தலைப்புகள் ஆங்கிலத்தில்தான் வைக்கப்படுகின்றன. முன்னணி ஹீரோக்களின் படங்களும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆங்கிலத்தில் தலைப்பு வைத்தால் மற்ற மொழிகளில் எளிதாக படத்தை ரிலீஸ் செய்ய முடிகிறது. ஓடிடி, டிவி சாடிலைட்டுக்கு விற்க பிரச்னை வருவதில்லை என்று சம்பந்தப்பட்ட படத்தின் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் சொல்கிறார்கள்.
இந்நிலையில், சென்னையில் நடந்த அகமொழி விழிகள் பட பாடல்கள், டிரைலர் வெளியீட்டுவிழாவில் இந்த விஷயம் குறித்து கோபத்துடன் பேசினார் தயாரிப்பாளர் கே.ராஜன். சசீந்திரா கே. சங்கர் இயக்கத்தில் மாறுபட்ட திரில்லர் கதைகளத்தில் இந்த படம் உருவாகி உள்ளது. ஆதம்ஹசன், நேஹா நடிக்கிறார்கள். கண் பார்வையற்ற கதைநாயகன், தனது காதலிக்க என்ன செய்கிறார். யாரை பழிவாங்குகிறார் என்ற ரீதியில் கதை நகர்கிறது.
விழாவில் கே. ராஜன் பேசியது ‘‘கேரளாவை சேர்ந்த நண்பர்கள் இணைந்து ஒரு தமிழ் படத்தை எடுத்து இருக்கிறார்கள். டிரைலர், மூணு பாடல் எல்லாமே அவ்வளவு சிறப்பாக இருந்தது. இந்த ஆண்டு தமிழில் நாலைந்து படங்கள்தான் வெற்றி, கடந்த ஆண்டு வெளியான 220 படங்களில் 8 படம் தான் வெற்றி. அதில் பல சின்ன படங்கள். பெரிய ஹீரோ பின்னால் போனால் படம் ஓடாது. கதை நன்றாக இருந்தால் மட்டும் தான் ஓடும். நல்ல கதையைத் தேர்ந்தெடுத்து, இந்த மாதிரி புது நாயகன் நாயகியைப் போட்டுப் படமெடுத்தால் படம் ஓடும். அகமொழி விழிகள் என்ன அழகான டைட்டில். இப்போது தமிழில் தலைப்பு வைப்பது கு றைந்துவிட்டது. அஜித் எப்போதும் அருமையான தமிழ் டைட்டில் வைப்பார் ஆனால், குட் பேட் அக்லி என அந்த இயக்குனர் தலைப்பு வைத்து இ ருக்கிறார். இப்போது சிவக்குமார் மகன் சூர்யா படத்துக்கு ரெட்ரோ என ஆங்கில தலைப்பு வைத்துள்ளனர். சிவகுமார் மகன் இப்படி செய்யலாமா? தமிழ் தலைப்பில் படம் வருவது குறைந்து விட்டது. கேரள சகோதரர் தமிழில் தலைப்பு வைக்கிறார்கள் தமிழனுக்குத் தமிழில் தலைப்பு வைக்க மனமில்லை. ’’ என்றார்