சென்னை கோடை வெப்பத்தால் கொதித்துக் கொண்டிருக்கிறது. சென்னை மட்டுமல்ல, தமிழ்நாட்டின் பல மாவட்டங்கள் சுட்டெரிக்கும் வெயிலால் கொதித்துக் கொண்டிருக்கின்றன. வெப்ப அளவு 40 டிகிரி செல்ஷியசை தாண்டிவிட்டது. வரும் நாட்களில் இன்னும் அதிகரிக்கும் என்று பயமுறுத்துகிறார்கள்.
கோடை வெப்பம் என்பது வழக்கமானதுதான். தமிழ்நாட்டுக்கு புதிதில்லை. ஆனால் இந்த முறை காற்றில் ஈரப்பதம் சுத்தமாக இல்லை. சென்னையில் மாலை நேரங்களில் கடல் காற்று வீசி மக்களை லேசாக குளிர்விக்கும். ஆனால் இந்த முறை கடல் காற்றை காணவே இல்லை. இரவிலும் வெப்பம் தாக்குகிறது.
என்ன நடக்கிறது? என்ன காரணம்? எத்தனை நாட்கள் இந்த நிலை நீடிக்கும்?
ஒட்டு மொத்த நகரத்தையும் அடுப்பில் வைத்ததுபோல் சென்னையில் வெயில் கொளுத்துவதற்கு காரணம் சில நாட்களுக்கு முன் வந்த மோச்சா (Mocha) புயல்தான் என்கிறார்கள் வானிலை ஆய்வாளர்கள்.
கடந்த வார இறுதியில் வங்கக் கடலில் உருவான மோச்சா புயல், தீவிரமடைந்து வடக்கு, வடகிழக்கு திசையில் நகர்ந்து மியான்மர் – வங்கதேசம் பகுதியில் கரையைக் கடந்தது. வங்கக் கடலில் இருந்து இந்த புயல் நகரும்போது தமிழகப் பகுதிகளில் இருந்த மொத்த ஈரப்பதத்தையும் இழுத்துச் சென்றுவிட்டது. இப்போது சென்னை மற்றும் தமிழ்நாட்டின் சில பகுதிகளில் உள்ள காற்றில் ஈரப்பதமே இலலை. காற்றில் ஈரப்பதம் இல்லாததால் வெப்பம் கடுமையாக தெரிகிறது.
மோச்சா புயலினால் ஏற்பட்ட இந்தக் கடுமையான தாக்கம் தணியும் வரை வெப்ப நிலை இயல்பை விட 3 முதல் 4 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக இருக்குமாம்.
சரி மோச்சா புயலின் தாக்கம் எப்போது குறையும்?
அதற்கு இன்னும் இரண்டு நாட்கள்தான் இருக்கிறது. மே 18ஆம் தேதியிலிருந்து மோச்சா புயலின் தாக்கம் குறைந்துவிடும் என்கிறார் வானிலை ஆய்வாளர்கள்.
அதன்பிறகு நிம்மதியாக இருக்கலாமா?
தமிழ்நாட்டில் மே 4 முதல் மே 28ஆம் தேதி வரை அக்னி நட்சத்திரம். அதனால் வெப்பம் அதிகமாகதான் இருக்கும். ஆனால் மோச்சா புயலின் பாதிப்பு குறைவதால் காற்றில் ஈரப்பதம் அதிகரிக்கும். இதனால் இரவுகள் இத்தனை கொடுமையாக இருக்காது என்கிறார்கள்.
சென்னையில் நேற்று 40.7 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவாகியது. இதுதான் இந்த வருடத்தின் சென்னையின் அதிகபட்ச வெப்பம். இந்த அளவு இன்னும் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது.
சென்ற வருடம் சென்னை அனுபவித்த மிக அதிக வெப்பம் 40.1 டிகிரி செல்ஷியஸ்தான். இந்த வருடம் அதைவிட அதிகரித்திருக்கிறது.
கடந்த சில வருடங்களாகவே சென்னையில் கோடை வெப்பம் அதிகமாக இருக்கிறது. சென்னை மட்டுமல்லாமல் மதுரை, திருச்சி போன்ற நகரங்களிலும் வெப்ப அளவு அதிகரித்து வருகிறது.
கடந்த வருடம் மார்ச் மாதம் சென்னையில் 38 டிகிரி அளவிலும் மதுரையில் 39 டிகிரி அளவிலும் வெப்பம் உயர்ந்தது.
சமீப ஆண்டுகளில் சென்னை வெப்பத்தின் புள்ளிவிவரங்களைப் பார்த்தால் 2017ஆம் ஆண்டு மே மாதம் 43.6 டிகிரி என்ற உச்சத்தை தொட்டிருக்கிறது. இதுதான் சமீபத்திய ஐந்து வருடங்களில் வெப்பத்தின் உச்சம்.
இதற்கு முன்பு 2003ஆம் ஆண்டு மே மாதம் 44.6 டிகிரி செல்ஷியைத் தொட்டது.
இந்த வருடமும் இது போன்ற வெப்ப உச்சங்களை தமிழ்நாடு சந்திக்கப் போகிறதா என்ற கேள்விக்கு வானிலை ஆய்வாளர்கள் ஒரு மகிழ்ச்சியான செய்தியைத் தருகிறார்கள்.
இந்த வருடம் 43, 44 என்றெல்லாம் வெப்ப உச்சங்கள் போகாது என்று ஆய்வுகளின் அடிப்படையில் சொல்லுகிறார்கள்.
இந்த வெப்பத்தையே தாங்க இயலவில்லை. இன்னும் டிகிரிகள் உயர்ந்தால் என்ன செய்வது?
வெளியில் வெயிலில் வராதீர்கள். அதிகமாய் குடிநீர் பருகி உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள்.
இவற்றைதான் நம்மால் செய்ய முடியும்.