கர்நாடக அரசின் சுரங்கம் மற்றும் புவியியல் துறையில் துணை இயக்குநராக பொறுப்பு வகித்து வந்தார் பிரதிமா(45). நேற்று முன்தினம் அலுவலகம் முடிந்து வீட்டுக்கு வந்துள்ளார். இரவு 8 மணிக்கு மேல் பிரதிமாவை அவரது சகோதரர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டுள்ளார். அவரது அழைப்புக்கு பதில் இல்லை.
அதனால் மறுநாள் தனது சகோதரியின் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு பிரதிமா கத்தியால் குத்தப்பட்ட நிலையில் உயிரிழந்து கிடந்துள்ளார். உடனே காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர் தடயங்களை சேகரித்து விசாரணையை தொடங்கினர். சுரங்கம் தொடர்பான பிரச்சினையினால் அதிகாரி கொல்லப்பட்டிருப்பாரோ என்ற சந்தேகம் எழுந்தது.
ஆனால், அவரை பணி நீக்கம் செய்யப்பட்ட அவரது முன்னாள் டிரைவர் கொன்றிருக்கிறார் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட கிரண் என்ற அந்த நபர் கர்நாடக அரசு துறையில் ஒப்பந்த ஓட்டுநராக பணியில் இருந்தார். பத்து நாட்களுக்கு முன்பு இவரை பிரதிமா பணி நீக்கம் செய்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த கிரண் அவரை கொலை செய்துள்ளார்.
அமைச்சர் பதவி இன்னைக்கு வரும் நாளைக்கு போகும்! – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
’நீட் விலக்கு நம் இலக்கு’ கையெழுத்து இயக்கத்தை திமுக இளைஞரணி நடத்தி வருகிறது. கையெழுத்து இயக்கத்திற்கு ஆதரவு கேட்டு கூட்டணி கட்சிகளின் தலைவர்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து வருகிறார். அசோக் நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் அலுவலகத்தில் அதன் தலைவர் திருமாவளவனை சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்ததாவது:
’நீட் விலக்கு நம் இலக்கு என்ற நீட்டுக்கு எதிரான கையெழுத்து இயக்கம் 15 நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. 50 நாட்களில் 50 லட்சத்தில் கையெழுத்து பெற்று சேலத்தில் நடைபெறவுள்ள இளைஞர் அணி மாநாட்டில் திமுக தலைவரிடம் அதனை அளிக்க இருக்கிறோம்.
சனாதனதுக்கு எதிராக பேசியதாக எழுந்த குற்றசாட்டுக்கு சட்டப்படி வழக்கை சந்திப்பேன். நான் சொன்னதில் தவறு இல்லை. அந்தக் கருத்திலிருந்து நான் பின்வாங்க போவதில்லை. அமைச்சர் பதவி இன்று வரும் நாளை போகும், அதேபோல சட்டமன்ற உறுப்பினர் பதவி இன்று வரும் நாளை போகும். இளைஞர் அணி செயலாளர் பதவி இன்று வரும் நாளை போகும். ஆனால் முதலில் மனிதனாக இருக்க வேண்டும். எனவே இந்த குற்றசாட்டை நான் சட்டரீதியாக சந்திப்போம். அம்பேத்கர், பெரியார் மற்றும் திருமாவளவன் பேசியதை விட நான் ஒன்றும் பெரிதாக பேசவில்லை ” என்றார் உதயநிதி ஸ்டாலின்.
‘ஆளுநர்கள் சுய பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்’ – உச்ச நீதிமன்றம்
’ஆளுநர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இல்லை. அவர்கள், கொஞ்சம் சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்” என்று மசோதாக்கள் தேக்கம் தொடர்பாக ஆளுநருக்கு எதிராக பஞ்சாப் மாநில அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது’
பஞ்சாப் மாநில அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தாமதப்படுத்துவதற்கு எதிராக அம்மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
பஞ்சாப் மாநில அரசு தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜெ.பி. பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (திங்கள்கிழமை) விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தலைமையில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “ஆளுநர் தன்னிடம் அனுப்பப்பட்ட அனைத்து மசோதாக்கள் மீதும் நடவடிக்கை எடுத்து வருவாதாகவும், மாநில அரசு தேவையில்லாமல் வழக்கு தொடர்ந்திருப்பதாகவும்” கூறினார்.
அப்போது, “இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்துக்கு வருவதற்கு முன்பே ஆளுநர் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். உச்ச நீதிமன்றத்துக்கு வழக்குகள் வரும்போது மட்டுமே ஆளுநர்கள் நடவடிக்கை எடுப்பதற்கு ஒரு முடிவுகட்ட வேண்டும்” என்று உச்ச நீதிமன்ற அமர்வு கூறியது. தொடர்ந்து, இந்த விவகாரத்தில் பஞ்சாப் ஆளுநர் எடுத்திருக்கும் நடவடிக்கைகள் குறித்த தற்போதைய விவரங்களை தாக்கல் செய்யுமாறு சொலிசிடர் ஜெனரல் துஷார் மேத்தாவுக்கு உத்தரவிட்ட நீதிமன்றம் வழக்கினை நவம்பர் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.