ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்தியர்களுக்கு எதிரான மனநிலை அதிகரித்து வருகிறது.
குறிப்பாக, கடந்த சில வாரங்களாக வெளிநாட்டினர் அதிக அளவில் குடியேறுவதற்கு எதிராக, நாடு முழுவதும் ‘மார்ச் பார் ஆஸ்திரேலியா’ என்ற பெயரில் பேரணி மற்றும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
ஆஸ்திரேலியாவில் குடியேறும் இந்தியர்கள் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்து வருகிறது.
அங்கு குடியேறிய வெளிநாட்டவர்களில் இங்கிலாந்துக்கு அடுத்தபடியாக இந்தியர்கள் 2-ம் இடத்தில் உள்ளனர். கடந்த 2023-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 8.4 லட்சம் இந்தியர்கள் அங்கு வசிக்கின்றனர். இதுதவிர, ஆயிரக்கணக்கானோர் ஆஸ்திரேலியாவிலேயே பிறந்து குடியுரிமை பெற்றுள்ளனர்.
வெளிநாட்டினரின் வருகையால் விலைவாசி உயர்ந்துவிட்டதாக பேரணியில் பங்கேற்றவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். இதனால் இதுவரை இந்தியர்களுக்கு நேரடியாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனாலும் அரசின் குடியேற்ற கொள்கைகளில் ஏதாவது மாற்றம் வருமோ என இந்தியர்கள் கலக்கமடைந்துள்ளனர்.
இந்த சூழலில், ஆஸ்திரேலியாவின் சுதந்திர கட்சியின் செனட் உறுப்பினர் ஜசிந்தா நம்பிஜின்பா பிரைஸ், சமீபத்தில் வானொலி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அதில், “பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தலைமையிலான தொழிலாளர் கட்சி வாக்கு வங்கிக்காக இந்தியர்களை அதிக அளவில் குடியேற அனுமதிக்கிறது’’ என கூறியிருந்தார்.