அரவிந்த்ராஜகோபால் இயக்கத்தில் ஷாம், நிரா, நிழல்கள் ரவி நடித்த கிரைம் திரில்லர் இன்வஸ்டிகேசன் படம் ‘அஸ்திரம்.’ கொடைக்கானலில் இன்ஸ்பெக்டராக இருக்கும் ஷாம், ஒரு சம்பவம் காரணமாக தோள்பட்டையில் குண்டடி பட்டு ஓய்வில் இருக்கிறார். அப்போது ஒரே மாதிரியாக 3 தற்கொலை சம்பவங்கள் நடக்கின்றன. அதாவது, 3 பேர் வயிற்றை கத்தியில் கிழித்துக்கொண்டு சாகிறார்கள். உயர் அதிகாரிகள் உத்தரவின் படி, கான்ஸ்டபிள் சுமந்த் துணையுடன் அந்த தற்கொலை, அதற்குபின்னால் இருக்கும் மனநல பிரச்னைகள், செஸ் விளையாட்டு ஆகியவற்றை ஆராய்கிறார் ஷாம்
அப்போது, ஷாம் நண்பர் ஒருவர் அந்த தற்கொலைகள் பற்றிய பல தகவல்களை ஷாமிடம் சொல்கிறார். அவரும் அதே பாணியில் தற்கொலை செய்கிறார். அப்போது இதற்கு பின்னால் மார்ட்டின் என்பவன் இருப்பதாக ஷாம் கண்டுபிடிக்கிறார். மார்ட்டின் யார்? எதனால் அவர் மாறினார். எதற்காக இப்படி இவர்களை தற்கொலை செய்ய வைக்கிறார் என்பது அஸ்திரம் படத்தின் கதை. பெஸ்ட் மூவீஸ் தயாரித்துள்ளது.
ஒரே மாதிரியான தற்கொலைகள் ஏன்? அதை செய்வது ஏன்? செய்ய சொல்பவர் யார் என்ற பாணியில் கதை தொடங்கிறது. ஒவ்வொரு சீனிலும் புதுப்புது தகவல்கள் வருகின்றன. பல திருப்பங்கள் ஏற்படுகின்றன. இந்த தற்கொலைகளுக்கும் ஜப்பான் மன்னர் ஒருவர் கதைக்கும் சம்பந்தம் இருப்பதை, கதையுடன் இணைத்து சொல்வது புத்திசாலிதனம். இவரா? அவரா? என்று நாம் யோசிக்கும்போது மனநல மருத்துவர் நிழல்கள் ரவி பாத்திரத்தை காண்பித்து, இன்னொரு புது கதை சொல்கிறார் இயக்குனர். அந்த கதை சுவாரஸ்யமாக, பயமாக இருக்கிறது. வில்லன் யார் என்பதை கடைசியில் காண்பிப்பது, அவர் குணத்தை சொல்வது செம.
இன்ஸ்பெக்டர் கேரக்டரில் இயல்பாக நடித்து இருக்கிறார். அவரும், கான்ஸ்டபிள் சுமந்தும் சேர்ந்து துப்பறிவது பரபரப்பு. ஷாம் ஜோடியாக வரும் நீராவுக்கு அதிகம் வேலை இல்லை. அதேசமயம், இளம்வயது மார்ட்டினாக வரும் விதேஷ் ஆனந்த் நடிப்பு அருமை. கல்யாண் வெங்கட்ராமன் ஒளிப்பதிவும், சுந்தரமூர்த்தி இசையும், பூபதியின் எடிட்டிங்கும் அஸ்திரம் படத்துக்கு பலம்.
சில சீன்கள் நீளமாக இருப்பதும், போலீஸ் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட சீன்கள் போராடிப்பதும் மைனஸ். அதேசமயம், ஒரு விறுவிறு சஸ்பென்ஸ் நாவல் படிப்பது மாதிரியான திரைக்கதையும், மாறுபட்ட கதைக்களமும் அஸ்திரம் படத்தை ரசிக்க வைக்கின்றன. வழக்கமான மசாலா படம் மாதிரி இல்லாமல், நன்றாக ரசித்து ஒரு கதையை எடுத்திருக்கிறார் இயக்குனர் அரவிந்த்ராஜகோபால். ஜப்பான் மன்னர் கதை சொல்லும் நீதி, செஸ் விளையாட்டு, மனநல பிரச்னைகள் ஆகியவை புதுமை.நான் ஹீரோ, எனக்கு ஹீரோயிச சீன்கள் வேண்டும் என்று அடம் பிடிக்காமல், கதைக்கு தேவையானதை ஈகோ இல்லாமல் சிறப்பாக செய்து இருக்கிறார் ஷாம்.