அரியலூர் மாவட்டம் அரியலூர் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 22 கோடி செலவில் 850 பேர் அமரக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ள அரங்கத்திற்கு அனிதா நினைவு அரங்கம் என பெயர் சூட்டப்பட உள்ளது.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நிகழ்த்தி, தனது இன்னுயிரை இழந்த அனிதா நினைவாக அரியலூர் மாவட்டம், அரியலூர் மருத்துவக் கல்லூரி வளாகத்தில், 22 கோடி ரூபாய் செலவில், 850 பேர் அமரக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ள அரங்கத்திற்கு அனிதா நினைவு அரங்கம் என பெயர் சூட்டப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
16 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை – பிரதமருக்கு முதல்வர் கடிதம்
இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 16 மீனவர்களையும், 102 மீன்பிடி படகுகளையும் விரைவில் விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 16 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் 12-ந்தேதி அன்று இரண்டு விசைப்படகுகளுடன் சிறைபிடிக்கப்பட்டனர். இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது கடந்த ஒரு மாதத்திற்குள் நடந்த 3-வது சம்பவமாகும்.
நமது மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகள் நிரந்தரமாக பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்கும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்கவும் உடனடியாக இதில் தலையிடவேண்டும். இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 16 மீனவர்களையும், 102 மீன்பிடி படகுகளையும் விரைவில் விடுவிக்க தேவையான தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
மார்ச் 21-ல் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்
திமுக எம் எல் ஏக்கள் கூட்டம் வரும் மார்ச் 21-ம் தேதி அண்ணா அறிவாலய்த்தில் நடைபெறும் என்று அரசு தலைமை கொறடா கோவி செழியன் அறிவித்துள்ளார்.
22ம் தேதி காலை 10.30 மணியளவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். சென்னை, அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெற உள்ள இக்கூட்டத்தில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்க விழா குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகம் முழுவதும் பிளஸ்-1 பொதுத்தேர்வு தொடங்கியது
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 1 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தொடங்கியது
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 1 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. ஏப்ரல் 5 -ம் தேதி வரை நடைபெறும் இந்த பொதுத்தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து 7 லட்சத்து 88 ஆயிரத்து 64 மாணவ மாணவிகள் எழுத உள்ளனர்.
காலையில் 10 மணிக்கு மாணவர்களுக்கு கேள்வித்தாள் வழங்கிய பின்னர் 10 நிமிடம் அதை படிக்கநேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. காலை 10 மணி 10 நிமிடத்திற்கு விடைத்தாள் கொடுத்து அதனை பூர்த்திச் செய்ய கூற வேண்டும். காலை 10 மணி 15 நிமிடத்திற்கு தேர்வுகள் துவக்கப்பட்டு, மதியம் 1 மணி 15 நிமிடம் வரையில் நடைபெற உள்ளது.