மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவர் பதவியை ஏற்பதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா. இவர் இப்போது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளராக இருந்து வருகிறார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளர் பதவியில் இருந்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவர் பதவிக்கு முன்னேற அவர் நேரம் பார்த்துக்கொண்டு இருப்பதாக கடந்த பல மாதங்களாகவே கூறப்படுகிறது.
இந்த சூழலில், ஐசிசி தலைவராக உள்ள கிரேக் பார்கலேவின் பதவிக்காலம் வரும் நவம்பர் 30-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த அமைப்புக்கு ஏற்கெனவே 4 ஆண்டுகள் தொடர்ந்து தலைவராக இருந்த அவர், இந்த பதவியில் மேலும் தொடரப் போவதில்லை என்று அறிவித்துள்ளார். அதனால் இம்முறை ஜெய் ஷா சர்சதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் பதவிக்கு போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த தனது முடிவை, வரும் 27-ம் தேதி ஜெய் ஷா தெரிவிப்பார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவர் பதவிக்கு போட்டியிடுபவர்கள் வரும் 27-ம் தேதிக்குள் தங்கள் மனுவை தாக்கல் செய்ய வேண்டும். ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் இந்த பதவிக்காக மனு தாக்கல் செய்தால், புதிய தலைவரை தேர்ந்தெடுக்க தேர்தல் நடத்தப்படும். தேர்தலில் வெற்றி பெறுபவர் டிசம்பர் 1-ம் தேதி தலைவராக பதவி ஏற்பார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் பதவிக்கான தேர்தலில், இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 16 நாட்டு கிரிக்கெட் சங்கங்கலின் தலைவர்கள் வாக்களிப்பார்கள். அதில் 9 வாக்குகளுக்கு மேல் பெறுபவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலைப் பொறுத்தவரை இப்போதைக்கு இந்தியாவின் கை ஓங்கி உள்ளது. தங்கள் நாட்டுக்கு இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று ஒவ்வொரு நாட்டு கிரிக்கெட் கவுன்சிலும் விரும்புகிறது. அதனால் ஜெய் ஷா தலைவர் பதவியில் போட்டியிட்டால் அவர் வெற்றிபெற அதிக வாய்ப்புகள் உள்ளன.