சினிமாவில் லாஜிக் மீது நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ, ஆனால் சென்டிமெண்ட் மீது தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நட்சத்திரங்களுக்கு பெரும் நம்பிக்கை இருந்தது. நிலவுக்கு சந்திரயான் -3 -ஐ அனுப்பியிருக்கும் இந்த டிஜிட்டல் யுகத்திலும் சென்டிமெண்ட் மீது பெரும் நம்பிக்கை இருந்து வருகிறது.
இன்றைய நிலவரப்படி தொடர் ஹிட்களை கொடுத்த ஹீரோவாக முன்னணியில் இருக்கிறார் கார்த்தி. முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்த ‘விருமன்’, அடுத்து மித்ரன் இயக்கத்தில் நடித்த ‘சர்தார்’ என இந்த இரு படங்களும் ஹிட் ஆகின. அடுத்து மணிரத்னம் இயக்கத்தில் நடித்த ‘பொன்னியின் செல்வன்’ பாகம் 1 மற்றும் பாகம் 2 ஆகிய படங்களும் மக்களிடையே வரவேற்பை பெற்றன. இதனால் அடுத்தடுத்து 4 ஹிட் படங்களை கொடுத்த வெற்றிகரமான ஹீரோவாகி இருக்கிறார் கார்த்தி.
இப்போது ராஜூ முருகன் இயக்கத்தில் ‘ஜப்பான்’ என்ற பட த்தில் நடித்துவருகிறார். இப்பட த்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கைதி’ பட த்தின் இரண்டாம் பாகத்தில் நடிப்பதாக திட்டமிருந்தது. ஆனால் லோகேஷ் கனகராஜ் பிஸியாக இருப்பதால், நளன் குமாரசாமி படத்தில் கார்த்தி நடிப்பது உறுதியாகிவிட்டது.
கதை, திரைக்கதை என அனைத்தும் தயார். கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டியும் ரெடி. ட்யூனோடு சந்தோஷ் நாராயணனும் காத்திருக்கிறார். பட்ஜெட் பற்றி கவலைப்பட வேண்டாமென ’ஸ்டூடியோ க்ரீன்’ ஞானவேல் ராஜாவும் படத்தை தயாரிக்க களத்தில் இருக்கிறார். ஆனாலும் கார்த்தி அடம்பிடிக்கிறாராம். அதாவது இந்தப் படத்தில் கார்த்தியுடன் ராஜ் கிரண் நடிக்க வேண்டுமென கார்த்தி விரும்புகிறாராம்.
ஏன் ராஜ்கிரண் வேண்டுமென்று அடம்பிடிக்கிறார் என்று விசாரித்தால், ஹிட் சென்டிமெண்ட்தான் காரணமாம். கார்த்தி – ராஜ் கிரண் இவர்கள் இருவரும் இணைந்து நடித்த ‘கொம்பன்’ மற்றும் ‘விருமன்’ என்ற இரண்டுப் படங்களுமே ஹிட்டடித்த படங்கள். இந்த இரண்டையும் போல், அடுத்த படமும் ஹிட்டாக வேண்டுமென கார்த்தி விரும்புகிறாராம்.
இதனால்தான் ராஜ் கிரண் நடித்தால் நன்றாக இருக்குமென அவரை கமிட் செய்ய காத்திருக்கிறாராம் கார்த்தி.
சம்பளத்தை உயர்த்திய ஷ்ருதி ஹாஸன்!
கமலின் மகள் என்ற அடையாளத்தோடு சினிமாவிற்குள் நுழைந்த ஷ்ருதி ஹாஸனுக்கு, ஒரு கட்டத்திற்கு மேல் கமலின் மவுசு கைக்கொடுக்கவில்லை. இதனால் மளமளவென வந்த பட வாய்ப்புகள் அப்படியே அடங்கிப் போயின.
ஆனாலும் ஷ்ருதி ஹாஸன் சும்மா இருக்கவில்லை. தெலுங்கு சினிமா பக்கம் தனது ஜாகையை மாற்றினார். தெலுங்கில் இளம் ஹீரோக்களுடன் நடித்த ஷ்ருதி அதன்பிறகு தனது அப்பா வயதுடைய சினீயர் ஹீரோக்களுக்கும் ஜோடியாக நடிக்க ஆரம்பித்தார்.
இதனால் இப்பொழுது சினீயர் ஹீரோக்களின் விருப்பத்தேர்வாக மாறியிருக்கிறார் ஷ்ருதி ஹாஸன். இதுதான் சமயம் என தனது சம்பளத்தை உயர்த்தி விட்டாராம்.
பான் – இந்தியா ஹீரோவாக வலம் வரும் பிரபாஸூடன் ‘சலார்’ படத்தில் இப்போது ஷ்ருதி ஹாஸன் நடித்துவருகிறார். இப்படத்தை ‘கே.ஜி.எஃப்’ படங்களின் இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்குகிறார். இப்படத்தை பெரிதும் நம்பியிருக்கிறார் ஷ்ருதி ஹாஸன்.
’சலார்’ படத்தை மனதில் வைத்து கொண்டு, 2 கோடி அல்லது இரண்டேகால் கோடி என சம்பளம் வாங்கி வந்த ஷ்ருதி, இப்போது மூன்று கோடி சம்பளமாக கேட்கிறாராம்.