இந்த உலகக் கோப்பையின் அரை இறுதி ஆட்டத்தில் இந்தியாவை சந்திக்க பாகிஸ்தான் அணிக்கு வாய்ப்பு இருக்கிறதா என்பதுதான் இப்போது கிரிக்கெட் ரசிகர்கள் மனதில் இருக்கும் மில்லியன் டாலர் கேள்வி. இந்த கேள்விக்கான பதில், ‘முடியும்… ஆனா முடியாது’ என்பதே.
உலகக் கோப்பையின் புள்ளிப் பட்டியலைப் பொறுத்தவரை இப்போதைக்கு நியூஸிலாந்து அணி 4-வது இடத்தில் இருக்கிறது. நேற்று நடந்த ஆட்டத்தில் இலங்கையை அதிக ஓவர்கள் மீதம்வைத்து வென்றதால் அவர்களின் நெட் ரன் ரேட் தீபாவளி ராக்கெட் போல் உச்சத்துக்கு சென்றிருக்கிறது. இப்போதைய சூழலில் நியூஸிலாந்து அணியின் நெட் ரன் ரேட் 0.743. ஆனால் பாகிஸ்தான் அணியின் இப்போதைய நெட் ரன் ரேட் 0.036.
இந்த சூழலில் பாகிஸ்தான் அணி அரை இறுதிச் சுற்றுக்கு தகுதிபெற வேண்டுமானால், தங்கள் கடைசி லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை மிகப்பெரிய வித்தியாசத்தில் அந்த அணி வென்றாக வேண்டும். அதாவது இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி முதலாவதாக பேட்டிங் செய்தால் இங்கிலாந்து அணியை 287 ரன்கள் வித்தியாசத்தில் வென்றாக வேண்டும். அதாவது பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்து 300 ரன்களைச் சேர்த்தால், இங்கிலாந்து அணியை 13 ரன்களில் ஆல் அவுட் ஆக்க வேண்டும்.
சரி… முதலில் பேட்டிங் செய்து இத்தனை ரன்கள் வித்தியாசத்தில் ஜெயிப்பது கஷ்டம். அதனால் முதலில் பீல்டிங் செய்வோம் என்று பாகிஸ்தான் அணி முடிவெடுத்தால், அதுவும் அத்தனை சுலபம் இல்லை. இங்கிலாந்து அணியை 283 பந்துகள் மீதம் வைத்து வென்றால் மட்டுமே பாகிஸ்தான் அணியால் அரை இறுதிச் சுற்றுக்குள் நுழைய முடியும். அதாவது இப்போட்டியில் முதலில் ஆடும் இங்கிலாந்து அணியை பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் 100 ரன்களில் ஆல் அவுட் ஆக்கினால், அந்த டார்கெட்டை பாகிஸ்தான் அணி 2.3 ஓவர்களில் எட்டியாக வேண்டும்.