No menu items!

ஆகாஷ்வாணி ஆகும் ஆல் இந்தியா ரேடியோ: எதிர்க்கும் தமிழ்நாடு

ஆகாஷ்வாணி ஆகும் ஆல் இந்தியா ரேடியோ: எதிர்க்கும் தமிழ்நாடு

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சமீபத்தில் பெங்களூருவில் தேர்தல் பிரச்சாரத்தின் போது, “நாங்கள் எப்போதும் இந்தியை திணித்ததில்லை, திணிக்கவும் மாட்டோம். மாநில மொழிகளின் பயன்பாட்டிற்கு மத்திய அரசு ஊக்கம் அளித்து வருகிறது” என்று பேசியிருந்தார். ஒருவாரம் கூட முடியவில்லை, மீண்டும் ஒரு இந்தி திணிப்பு வேலையில் மத்திய அரசு இறங்கியிருக்கிறது. ‘அகில இந்திய வானொலி’ என்பதற்கு பதிலாக இனி ‘ஆகாஷ்வாணி’ என்றுதான் குறிப்பிடவேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இதற்கு தமிழ்நாடு மட்டுமல்லாமல் பல மாநிலங்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இந்தி திணிப்பும் அதற்கு எதிரான போராட்டங்களும் நூற்றாண்டை கடந்த வரலாறு கொண்டது. 1925ஆம் ஆண்டில், இந்திய தேசிய காங்கிரஸ் தனது நடவடிக்கைகளை ஆங்கிலத்திலிருந்து இந்திக்கு மாற்றியது. உடனே அதற்கு எதிர்ப்பு கிளம்ப அது கைவிடப்பட்டது.

அதன்பின்னர், 1937இல் சென்னை மாகாணத்தின் காங்கிரஸ் முதலமைச்சராக இருந்த ராஜாஜி, தென்னிந்தியாவில் இந்தியைப் பரப்ப முயன்றார். 1938 ஏப்ரல் 21 அன்று, மாகாணத்தின் அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் இந்தி கற்பித்தலைக் கட்டாயமாக்கும் அரசாணையை அவர் வெளியிட்டார். இதற்கு உடனடி எதிர்ப்பு கிளம்பி அவர் பதவி விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

நமது அரசியலமைப்புச் சட்டம் உருவான போது, மீண்டும் இந்தி திணிப்பு முயற்சி தலைதூக்கியது. தேசிய மொழி பற்றிய மூன்று வருட விவாதத்திற்குப் பிறகு, அனைத்து குழுக்களின் கோரிக்கைகளுக்கும் இடையே சமநிலையை ஏற்படுத்தி, கே.எம் முன்ஷி – கோபாலசுவாமி அய்யங்கார் சூத்திரம் என்று அழைக்கப்படும் ஒரு சமரசத்திற்கு அரசியல் நிர்ணய சபை வந்தது. இந்தியை இந்தியாவின் தேசிய மொழியாக அறிவிப்பதற்குப் பதிலாக, பேரவை அதை மத்திய அரசின் ‘அலுவல் மொழி’களில் ஒன்றாக ஏற்றுக்கொண்டது.

ஆனால், 26 ஜனவரி 1950இல் அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த பின்னரும் இந்தியை தேசிய மொழியாக திணிக்க முயன்றே வந்துள்ளனர். அதற்கு எதிராக தமிழ்நாட்டில் பெரும் போராட்டம் வெடித்தது. அதன்விளைவாக, ‘அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து மொழிகளும் தேசிய மொழிகள் மற்றும் சமமாக கருதப்பட வேண்டும். இந்த மொழிகளில் ஏதேனும் ஒன்றை ஒரே தேசிய மொழியாக திணிக்கும் எந்தவொரு முயற்சியும் நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு இடையூறு விளைவிக்கும்’ என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டது. சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலான ராஜாஜி, 1967ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் இந்தி எதிர்ப்புப் போராட்டக்காரர்களுக்கு ‘ஆங்கிலம் எப்போதும், இந்தி ஒருபோதும்’ என்ற முழக்கத்தை அளித்து, ஆங்கிலத்தை அலுவல் மொழியாக தொடர்ந்து பயன்படுத்துவதை உறுதி செய்தார்.

இந்நிலையில், 2004இல் மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தபின்னர் மீண்டும் இந்தி திணிப்பு முயற்சி பல்வேறு வடிவங்களில் எடுக்கப்பட்டு வருகிறது. பெங்களூரு பிரச்சாரத்தில், “நாங்கள் எப்போதும் இந்தியை திணித்ததில்லை, திணிக்கவும் மாட்டோம்” என்று பேசியிருந்த அமித் ஷா, ‘இந்தி திவாஸ்’ விழாவில், இந்தியை தேசிய மொழியாக அறிவிக்க முன்மொழிந்து, “​​இந்தி மட்டுமே நாட்டை ஒன்றிணைக்க முடியும். அதுதான் உலகளவில் இந்தியாவின் அடையாளமாக மாற வேண்டும்” என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியை தேசிய மொழியாக்க வேண்டும் என்ற அமித் ஷாவின் அறிவிப்பு அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என, பாஜக ஆட்சி செய்யும் கர்நாடகா உட்பட அனைத்து தென்னிந்திய மாநிலங்களிலும் அப்போதே எதிர்ப்புகளை சந்தித்தது. அன்றைய கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவும் எதிர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்விளைவுதான் சமீப கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் அமிதா ஷாவின் பேச்சு. ஆனால், அப்படி பேசிய சில தினங்களிலேயே, வழக்கம்போல் இன்னொரு பக்கமாக இந்தியை திணிக்கும் அறிவிப்பையும் மத்திய அரசு வெளியிடுகிறது.

‘ஆகாஷ்வாணி’ என்பதை ’வானொலி’ என்றுதான் கூறவேண்டும் என்று முதன்முதலில் குரல் கொடுத்தவர் கி.ஆ.பெ. விசுவநாதம். அவரைத் தொடர்ந்து தமிழறிஞர் இளவழகன் (பாலசுந்தரம்) உண்ணா நிலைப் போராட்டத்தில் ஈடுபட்டார். பாவேந்தர் பாரதிதாசன் ஒரு பாடல் இயற்றி மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார்!

‘ஆகாஷ் வாணி வடசொல்லை அங்கு வைத்தார் தமிழ்நாட்டில்

 தேனொலியாம் தமிழ் இருக்க வடக்கு நஞ்சைச்

 செந்தமிழர் காதினிலே ஊற்றினாரே!’

எனத் தொடங்கும் அந்தப் பாடல்.

எதிர்ப்புகள் வலுக்கவே ‘ஆகாஷ்வாணி’ என்ற இந்தி சொல் போய் ‘அகில இந்திய வானொலி’ என்ற தமிழ் வார்த்தை வந்தது.

இதோ மீண்டும் ‘ஆகாஷ்வாணி’ தலை தூக்குகிறது. ‘அனைத்திந்திய வானொலியின் அறிவிப்புகள், செய்திகள் போன்றவற்றிலும், அலுவல் சார்ந்த கடிதங்களிலும் இனி ஆல் இந்தியா ரேடியோ என்ற பதத்தை பயன்படுத்தக்கூடாது. அதற்கு மாற்றாக ஆகாஷ்வாணி என்ற பதம் தான் பயன்படுத்தப்பட வேண்டும்’ என்று வானொலி நிலையங்களுக்கு அதன் தலைமை அலுவலகத்தின் கொள்கைப் பிரிவு ஆணையிட்டுள்ளது.

இதற்கு தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இது தொடர்பாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூருக்கு திமுக பொருளாளர் டி.ஆர். பாலு கண்டனம் தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார். பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘இது அப்பட்டமான இந்தித் திணிப்பு ஆகும். இதை ஏற்க முடியாது. என்னென்ன வழிகளில் எல்லாம் இந்தியைத் திணிக்க முடியுமோ, அந்தந்த வழிகளில் எல்லாம் இந்தியைத் திணிக்க மத்திய அரசு துடிக்கிறது. அதன் வெளிப்பாடு தான் தமிழ்நாட்டு வானொலி நிலையங்களின் செய்திகளிலும், அறிவிப்புகளிலும் கூட ஆகாஷ்வாணி என்று அறிவிக்க கட்டாயப்படுத்துவதாகும். பிரதமரும், மத்திய உள்துறை அமைச்சரும் தாய்மொழிக்கு தான் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள். ஆனால், வானொலியின் தலைமையோ இந்தியைத் திணிக்கத் துடிக்கிறது. இது கண்டிக்கத்தக்கது.

வானொலி வேண்டுமானால் தேசிய அளவிலானதாக இருக்கலாம். ஆனால், அதன் நிகழ்ச்சிகள் உள்ளூர் அளவிலானவை. அதனால் அதற்கான அறிவிப்புகளும், வானொலி சேவையின் பெயரும் கூட உள்ளூர் மொழிகளில் தான் இருக்க வேண்டும். தொடர்ந்து இந்தியைத் திணித்து தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுடன் விளையாடக் கூடாது” என்று கூறியுள்ளார்.

‘பல மொழிகள் பேசும் இந்தியாவில் ஒரே தேசம் – ஒரே மொழி என்பது ஒருபோதும் யதார்த்தமாக மாற முடியாது. வேற்றுமையில் ஒற்றுமை என்பதுதான் இந்த தேசத்தின் எழுச்சி என்பதை உணர்ந்து அனைத்து மொழிகளையும் கலாச்சாரங்களையும் மதிக்க வட இந்திய தலைவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்’ என்பதையே மீண்டும் இந்த எதிர்ப்புகள் காட்டுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...