கோலிவுட்டில் உலா வரும் புத்தம் புதிய சூடான கிசுகிசு அஜித் – ஷங்கர் கூட்டணி பற்றிதான். இவர்கள் இருவரும் சமீபத்தில் சந்தித்து கொண்டார்கள். இவர்கள் இருவரும் இதுவரையில் தனிப்பட்ட முறையில் சந்தித்ததே இல்லை. இதுதான் முதல் முறை. அதனால் ஏதோ ஒன்று நடக்க இருக்கிறது என்று பேச்சு அடிப்படுகிறது.
விசாரித்த வகையில், அஜித்தும் ஷங்கரும் கடந்த வாரம் சந்தித்து இருக்கிறார்கள். அப்போது அவர்கள் இருவரும் இணைவது குறித்தும் பேசியிருக்கிறார்களாம்.
ஷங்கர் படங்கள் பிரம்மாண்டமாக இருந்தாலும் அதில் ஹீரோயிஸம் அதிகமிருக்கும். ரஜினியுடன் ‘சிவாஜி, மற்றும் ‘எந்திரன்’, ’2.0’. அடுத்து கமலுடன் ’இந்தியன்’ வரிசை படங்கள் விஜயுடன் ’நண்பன்’, விக்ரமுடன் ‘அந்நியன்’ மற்றும் ’ஐ’, அர்ஜூனுடன் ‘ஜெண்டில் மேன்’, ‘முதல்வன்’. இப்படி ஷங்கரின் படங்களில் ஹீரோக்களுக்கான கதைக்களமாக இருப்பது புரியும். இந்த வகையறா படமாக இல்லாமல் வெளியான ஒரே படம் ‘பாய்ஸ்’ மட்டுமே. அடுத்து ‘காதலன்’ ஒரு பக்காவான காதல் படம்’.
பெரிய தலைகளை வைத்து படமெடுத்த ஷங்கருக்கு அடுத்து யாருடன் இணைவது என்பது மிகப்பெரிய கேள்விக்குறிதான். ரஜினி அடுத்த வருடம் வரை கால்ஷீட் கொடுக்க முடியாத சூழலில் இருக்கிறார். கமலுடன் ‘இந்தியன் 2’ மற்றும் ‘இந்தியன் 3’ என இரு படங்கள் முடிந்திருக்கின்றன., விஜய் அடுத்து ஒரு படம் மட்டுமே நடிப்பேன், அதன் பிறகு அரசியல் பக்கம் கவனம் செலுத்த இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். அடுத்தடுத்து தோல்விப்படங்கள் கொடுத்த விக்ரமிற்கு ‘தங்கலான்’ வந்தால்தான் மார்க்கெட் எப்படியிருக்கும் என்பது தெரியவரும்.
இந்த மாதிரியான ஒரு சூழலில் ஷங்கர் இருக்கும் போது, இதுவரையில் இணையாத அஜித்துடன் இணைந்தால், அது நிச்சயம் பெரும் வரவேற்பைப் பெறும். வியாபாரா ரீதியாக லாபம் கொடுக்கும் படமாகவும் இருக்கும்.
இந்த வியாபார கணக்குகளினால் இவர்கள் இருவரும் இணைவது சாத்தியமே என்றும் கூறுகிறார்கள்.. ஷங்கரின் இந்தியன், கேம் சேஞ்சர் ஆகிய படங்கள் வெளியான பிறகே இது பற்றிய தகவல் தெரிய வரலாம். அதனால் இது எப்போது நடக்கும் என்பது தெரிவதற்கே இன்னும் மூன்று மாதங்கள் வரை பிடிக்கலாம் என்கிறார்கள்.
யார் இந்த ரமோஜி ராவ்?
சமீப காலமாகவே விஜய், அஜித், ரஜினி, கமல், ஷங்கர் படங்களின் ஷூட்டிங் எல்லாம் ஹைதராபாத்தில் நடக்கின்றன என்று படித்திரூப்பீர்கள். ஹைதராபாத்தில் இருக்கும் ஆர்.எஃஒ.சி-யில்தான் இந்தப் படங்களுக்கு பிரம்மாண்டமான செட் போட்டு ஷூட் செய்வார்கள். அந்த ஆர்.எஃப்.சி-யின் உரிமையாளர்தான் இந்த ரமோஜி ராவ்.
ரமோஜி ராவ் ஃப்லிம் சிட்டி என்பது ஒரு சினிமா ஸ்டூடியோ அல்ல. தென்னிந்திய சினிமா உலகின் சாம்ராஜ்யம்.
சுமார் 2,000 ஏக்கர் பரப்பளவில் மிரட்டலாக இருக்கும் ஒரு சினிமா நகரம்.
ஆண்டு ஒன்றுக்கு சுமார் 1.5 மில்லியன் பேர் இங்கு வந்து போகிறார்கள்.
இதுவரையில் சுமார் 2,500 திரைப்படங்கள் இங்கே ஷூட் செய்யப்பட்டு இருக்கின்றன.
உலகப் புகழ் பெற்ற கின்னஸ் சாதனை புத்தகத்திலும் கூட உலகின் மிகப்பெரிய ஒருங்கிணைக்கப்பட்ட சினிமா நகரம் என்று இடம் பிடித்திருக்கிறது இந்த ஆர்.எஃப்.சி.
பிரபல கார்டியன் நியூஸ் பேப்பர், ரமோஜிராவ் ஃப்லிம் சிட்டியை பற்றி குறிப்பிடுகையில், ‘ஒரு நகரத்திற்குள் ஒரு நகரம்’ என்று குறிப்பிட்டது.
இந்த சினிமா நகரத்தை நிர்மாணித்தவர்தான் ரமோஜி ராவ்.
இப்படியொரு பிரம்மாண்டமான சினிமா ஸ்டூடியோவை கட்ட வேண்டுமென்ற கனவு அவருக்கு 1996-ல் உருவானது. இன்று இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு ஸ்டூடியோவாக இருக்கிறது. தெலுங்கு, தமிழ், ஹிந்தி மற்றும் ஹாலிவுட் படங்களும் கூட இங்கே படம்பிடிக்கப்பட்டுள்ளன. ‘பாகுபலி’, ‘பாகுபலி 2’, ‘சென்னை எக்ஸ்ப்ரஸ்’, ‘க்ரிஷ்’, ‘ட்ர்ட்டி பிக்சர்’ ஆகிய படங்களும் இங்கேதான் எடுக்கப்பட்டிருக்கின்றன.
அப்துல்லாபுர்மேட் பகுதியில் இருக்கும் மலை, காடு ஆகியவற்றை அழிக்காமல், ஸ்டூடியோ கட்ட வேண்டுமென ரமோஜி ராவ் திட்டமிட்டு உருவாக்கிய ஸ்டூடியோ. ரமோஜி ராவின் எண்ணத்தை அப்படியே செயல்படுத்தினார் ஆர்ட் டைரக்டர் நிதீஷ் ராய். இதனால் இங்கே ஸ்டூடியோவுக்குள் காடுகள், தோட்டங்கள், ஹோட்டல்கள், ரயில்வே ஸ்டேஷன், ஏர் போர்ட், பல மாடி குடியிருப்புகள் என எல்லாமும் ஷூட்டிங் செய்ய தயாராக இருக்கிறது.
ஃப்லிம் சிட்டியில் தங்கியிருந்து ஷூட் செய்ய விரும்புபவர்களுக்காகவே இங்கு 6 ஹோட்டல்கள் இருக்கின்றன. விஜய் இங்கே தங்கியிருந்து நடித்திருக்கிறார்.
இதுதவிர 47 சவுண்ட் ஸ்டேஜ்கள் இருக்கின்றன. மேலும் ரயில்வே ஸ்டேஷன் மற்றும் கோயில்கள் இங்கு நிரந்தரமாக செட் போடப்பட்டுள்ளன. இவ்வளவு பெரிய சாம்ராஜ்ஜியத்தை நிர்வகிக்க சுமார் 1,200 ஊழியர்கள் இங்கு பணிப்புரிகிறார்கள். இங்கு படப்பிடிப்பு வேலைகளுக்கு அனுமதி வாங்குவது, தேவையான வேலைகளை செய்வது போன்றவற்றுக்காக சுமார் 8,000 ஏஜெண்ட்கள் இருக்கிறார்கள். இந்த ஃப்லிம் சிட்டிக்குள் பயணிக்க பழங்கால பேருந்து முதல் ஏசி கோச் பேருந்துகளும் இருக்கின்றன.
வெறும் சினிமா ஸ்டூடியோவா என்று நினைப்பவர்களுக்கு மற்றுமொரு ஆச்சர்யத்தையும் வைத்திருக்கிறார் ரமோஜி ராவ். இவரது ஆளுமைக்கு கீழ் ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், உருது, குஜராத்தி, பெங்காலி ஆகிய மொழிகளில் இடிவி தொலைக்காட்சிகள் செயல்பட்டன. இவற்றின் அலுவலகங்களும் ஃப்லிம் சிட்டிக்குள்தான் இருக்கின்றன. இநாடு செய்தி தாளும் இங்கேதான் செயல்படுகிறது.
1974-ல் இநாடு நியூஸ் பேப்பரை தொடங்கினார். யாராக இருந்தாலும் தட்டி கேட்கும் வகையில் இருந்தது இவரது செய்தி தாளில் இடம்பெற்ற செய்திகள். இதனால் தெலுங்கு ஊடக உலகத்திலும் தனது சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கினார்.
இவரது கடைசி நாட்களில் கூட ரமோஜி ராவ் ஒரு போராளியைப் போல், அரசியலில் நடக்கும் அட்டுழியங்களை தனது ஊடகங்கள் மூலம் தோலுரித்து காட்டினார். இதனால் இவர் மீது பலருக்கு கோபம், வன்மம். இன்னும் சிலருக்கு பொறாமையும் இருந்தது.
உடல்நிலை பாதிக்கப்பட்டாலும், அவரது வேகம் குறையவில்லை. இதனால் அரசியலில் இருப்பவர்கள் இவரை குறி வைத்து தாக்க ஆரம்பித்தனர். கடந்த 5 ஆண்டு காலமாக ரமோஜி ராவை ஏதேதோ காரணங்களுக்காக குறி வைத்தார்கள். ஆனால் அவர் கொஞ்சம் கூட அசரவில்லை.
ரமோஜி ராவ் ஒரு திரைப்பட தயாரிப்பாளரும் கூட. உஷா கிரண் மூவிஸ் என்ற நிறுவனத்தின் பெயரில் பல மொழிகளில் 85 படங்களைத் தயாரித்து இருக்கிறார். ரமோஜி ராவுக்கு தனது உஷா கிரண் பேனரில் நூறு படங்களைத் தயாரித்துவிட வேண்டுமென்ற ஆசை நிறையவே இருந்திருக்கிறது. இன்னும் 15 படங்கள்தான். எடுத்துவிடலாம் என்று நினைத்திருக்கிறார். இதனால் உஷா கிரண் நிறுவனம் சார்பில் முக்கிய இயக்குநர்களிடம் கதை கேட்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டிருந்தன என்கிறார்கள். 2019-ல் உஷா கிரண் பேனர் மீண்டும் பரபரப்பானது. ஆனால் கோவிட் ஒட்டுமொத்த சினிமா உலகையும் புரட்டிப் போட்டுவிட்டது. இதனால் வேறு வழியில்லாமல், தனது 100 பட திட்டத்தை கொஞ்சம் தள்ளி வைத்தார் ரமோஜி ராவ்.
எவ்வளவோ சாதித்த ரமோஜி ராவினால், எத்தனையோ படங்களுக்கு துணை நின்ற ஆர்.எஃப்.சி, உரிமையாளரால், 100 திரைப்படங்களை தயாரிக்க வேண்டுமென்ற ஆசையை மட்டும் நிறைவேற்ற முடியாமல் போயிருக்கிறது. அவரது 50 ஆண்டுகால சினிமா வாழ்க்கையும் முடிவுக்கு வந்திருக்கிறது.
சினிமாவை கொண்டாடும் தெலுங்கு ரசிகர்களுக்கு, ரமோஜி ராவ் என்ற பெயரும், ஆர்.எஃப்.சி. என்ற பெயரும் அவர்கள் உணர்வோடு கலந்துவிட்ட பெயர்கள்.
இதனால்தான் பிரம்மாண்ட இயக்குநர் எஸ்.எஸ். ராஜமெளலி, ரமோஜி ராவ் அவர்களுக்கு பாரத ரத்னா விருது கொடுக்கப்பட வேண்டுமென கோரிக்கை வைத்திருக்கிறார்.
ரமோஜி ராவ் உடைய இறுதி நாட்களில் அவரைச் சந்தித்த நண்பர்கள் கேட்ட ஒரு கேள்வி, ‘உங்களுடைய வாழ்க்கையைப் பற்றி ஒரே வரியில் சொல்ல முடியுமா?