ஐஸ்வர்யா ஒரு கதையை லைகாவிடம் சொன்ன உடனேயே அவர்கள் அப்படத்தை தயாரிக்க முன்வரவில்லை. கதையைச் சொல்லி முடிந்த பிறகு தனது அப்பா இதில் சிறப்புத்தோற்றத்தில் நடிக்கப் போகிறார். படத்தில் இவரது கதாபாத்திரம் நன்றாக வரும். இப்படியெல்லாம் சொன்ன பிறகுதான் லைகா ஓகே சொல்லியதாம்.
அடுத்து ரஜினியை வைத்து படம் தயாரிக்க வேண்டுமென்றால், இந்த நட்புறவு தொடரவேண்டுமென்ற எண்ணத்தில் லைகா தயாரானது.
ரஜினிக்கு சம்பளமாக 40 கோடி பேசி முடிவானது. இதற்குப் பிறகே ‘லால் சலாம்’ பட்ஜெட் முடிவானது. படம் முடியும் போது ஏறக்குறைய 80 கோடி என மொத்த பட்ஜெட் எகிறி இருக்கிறது. இதில் ரஜினி, ஏ.ஆர். ரஹ்மான சம்பளமும் அடங்கும்.
ராமர் கோயிலுருக்குப் போய்விட்டு, மொய்தீன் பாய் ஆக இவர் நடித்திருந்தது விமர்சனத்திற்கு உள்ளானது. அதேபோல் படத்தின் வசூலும் எதிர்பார்த்த அளவு இல்லாமல் போனது.
’ஜெயிலர்’ பெரும் வெற்றி பெற்றிருந்ததால், லால் சலாமை பெரிதும் நம்பியிருந்தது லைகா.. ஆனால் ரஜினி நடித்த படம் என்ற சுவடே இல்லாமல், ஆரவாரம் இல்லாமல் அடங்கிப் போனது.
படம் வெளியாகி இரண்டு வாரங்கள் ஆன நிலையில், இதன் வசூல் சுமார் 7 கோடி முதல் பத்து கோடி வரையில்தான் இருக்குமென்கிறார்கள். ரஜினியின் மேஜிக் ஏன் நிகழ்வில்லை என்ற குழப்பம் கோலிவுட்டின் வியாபார வட்டாரத்தில் பேசு பொருளாகி இருக்கிறது.
படத்தின் பட்ஜெட்டில் பத்தில் ஒரு பங்கு கூட வசூல் ஆகவில்லையே என்று லைகாவும் அதிர்ச்சியில் உறைந்துப் போயிருக்கிறது. படத்தில் என்ன பிரச்சினை, வசூல் இல்லாமல் போனதற்கு என்ன காரணம் என விசாரிக்க லைகாவின் சுபாஷ்கரன் விரும்பியிருக்கிறார்.
இது சம்பந்தமாக ஐஸ்வர்யா கருத்து கூறுகையில், ‘படத்திற்கு எல்லா தரப்பிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது. விமர்னசங்களும் கூட பெரியளவில் நெகட்டிவாக இல்லை. ஆனால் படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கிற விளம்பரங்கள் உள்ளிட்ட ப்ரமோஷன் ஒழுங்காக கையாளப்படவில்லை. அதுதான் படத்திற்கு பாதிப்பை உருவாக்கிவிட்டது’ என்று தடாலடியாக ஒரு குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறாராம்.
இதைக் கேட்ட சுபாஷ்கரன் என்ன செய்வதென்று தெரியாமல், ’சரி நான் விசாரிக்கிறேன்’ என்று அமைதியாகிவிட்டாராம்.
தலைவர் 171 – அப்டேட்
ரஜினியுடன் லோகேஷ் கனகராஜ் இணையவிருக்கும் பட த்திற்கு தற்காலிகமாக ‘தலைவர் 171’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.
இதன் கதை விவாத பணிகள் இன்னும் நடந்து கொண்டிருக்கிறது.
படப்பிடிக்கும் முந்தைய பணிகளான ப்ரீ-ப்ரொடக்ஷன் வேலைகள் இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்கள்வரை நீடிக்குமாம்.
கதை மற்றும் திரைக்கதையில் உருவாகும் முன்னேற்றங்கள் குறித்து லோகேஷ் கனகராஜ் ரஜினிக்கு உடனுக்குடன் போனில் தெரிவிக்கிறாராம். ரஜினி திரைக்கதையில் அக்கறை காட்டுவதால், இந்த ஏற்பாடாம்.
லோகேஷ் கனகராஜின் ஃபார்மூலாவான எல்.சி.யூ-வில் இந்தப் படம் இருக்காது. இது ரஜினியின் படமாகவே இருக்கும் என லோகேஷ் உறுதியளித்து இருக்கிறார்.
ரஜினிக்கு இப்படத்தில் சால்ட் & பெப்பர் தோற்றம்தானாம். வெள்ளை முடியுடன் ரஜினி கதாபாத்திரம் ஆக்ஷனில் இறங்கி அதிரடி காட்டுமாம்.
லோகேஷ் கனகராஜ் படங்களில் தவறாமல் இடம்பிடிக்கும் போதைப் பொருள் சமாச்சாரங்கள் இந்தப் படத்தில் சுத்தமாக இருக்காதாம்.
லோகேஷைப் பொறுத்தவரையில், இந்தப்படம் ரஜினியை வைத்து ஒரு பரீட்ச்சாத்தமான முயற்சியாக இருக்கும் என கூறப்படுகிறது.