2026-ல் தனி பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமைக்கும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார்.
விழுப்புரம் மாவட்டத்தில் 2-வது நாளாக ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பிரச்சாரப் பயணத்தை நேற்று மேற்கொண்ட பழனிசாமி,வானூர் தொகுதிக்கு உட்பட்ட திருச்சிற்றம்பலம் கூட்டு ரோட்டில் பேசியதாவது: திமுக தேர்தல் அறிக்கையில் 575 கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என உறுதியளித்தனர்.
அதில் 10 சதவீதத்தைகூட நிறை வேற்றவில்லை. 98 சதவீதம் நிறைவேற்றப்பட்டதாக தவறான தகவல்களைத் தெரிவிக்கின்றனர். மாதந்தோறும் மின் கட்டணம் கணக்கீடு, சிலிண்டருக்கு ரூ.100, கல்விக் கடன் ரத்து, நீட் தேர்வு ரத்து என எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை.
அதிமுகவின் அழுத்தத்தால்தான் மகளிருக்கு உரிமைத்தொகை கிடைக்கிறது. தேர்தல் வர உள்ளதால் 30 லட்சம் பேருக்கு உதவித்தொகை வழங்க விதிகளை தளர்த்தியுள்ளனர். தேர்தலுக்குப் பிறகு, தகுதி இல்லை என்று கூறி உரிமைத்தொகையை நிறுத்திவிடுவார்கள். வரி, கட்டண உயர்வால் மக்களை பரிதவிக்கச் செய்துள்ளனர்.
கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி, இன்பநிதி என ஒரு குடும்பத்தினரின் ஆட்சிக்கு 2026 தேர்தலில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். திமுகவின் மன்னர் ஆட்சி தொடரக்கூடாது. படிப்பு என்றால் பழனிசாமிக்கு கசக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். கல்வி எனது உயிர் மூச்சு.
அதிமுக ஆட்சியில் பல கல்லூரிகள் திறக்கப்பட்டன. ஆனால், விழுப்புரத்தில் தொடங்கப்பட்ட ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை ஸ்டாலின் ரத்து செய்துவிட்டார். படிப்பை பற்றி உங்களுக்கு (ஸ்டாலினுக்கு) என்ன தெரியும்? நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்டதால், 2,818 மாணவர்கள் மருத்துவம் படித்துள்ளனர்.
பாஜகவுக்கு அதிமுக அடிமை என்கிறார் ஸ்டாலின். அமலாக்கத் துறை சோதனைக்கு பயந்து திமுகவினர்தான் நடுங்கிக் கொண்டிருக்கின்றனர். அதிமுக எதற்கும் அஞ்சாத கட்சி. அதிமுகவை ஒழிக்க மேற்கொண்ட முயற்சிகளை முறியடித்துள்ளோம். 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வென்று, தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.
கூட்டணிக் கட்சிகளும் அதிக இடங்களில் வெற்றிபெறும். நாடாளுமன்ற மறுவரைவு திட்டத்தால் தமிழகத்தில் எம்.பி.க்களின் எண்ணிக்கை குறைந்து விடும் என்று கூறி, மத்திய அரசு மீது ஸ்டாலின் பழிபோடுகிறார்.