இந்திய ராணுவத்தில் இளைஞர்களை சேர்ப்பதற்கு 4 ஆண்டு பணிக்காலம் கொண்ட ‘அக்னிபத் யோஜனா’ என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்தில் அக்னிவீரர்களாக சேருவோரின் எதிர்கால நலன்களை கருத்தில் கொண்டு 3 ஆண்டு சிறப்பு பட்டப் படிப்பை மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் வெடித்துள்ளது.
பீகாரில் இளைஞர்கள் நேற்றுமுதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 2வது நாளாக நடைபெறும் இந்த போராட்டம் வன்முறையாக மாறியுள்ளது. போராடும் வீரர்கள் திடீரென சாலையில் இருந்த கற்களை எடுத்து காவல்துறையினர் மீது தாக்குதலில் ஈடுபட்டனர். மேலும் ரெயில் நிலையங்களுக்குள் நுழைந்த அவர்கள் கற்களை எடுத்து ரெயில்கள் மீது எதிர்ந்தனர். நவாடா பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் சாலையில் வாகனங்களின் டயர்களை எரித்தனர். பிரதமர் மோடிக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பினர்.
சென்னை சாலையில் குண்டு வெடிப்பு: பையில் எடுத்துசென்ற வெடிகுண்டு தவறி விழுந்து ரவுடி படுகாயம்
சென்னை மாங்காடு அடுத்த பரணிபுத்தூர் நான்கு சாலை சந்திப்பு பகுதியில் இன்று மோட்டார் சைக்கிளில் சென்ற 3 பேர் பையில் வைத்திருந்த நாட்டு வெடிகுண்டு தவறி விழுந்து பலத்த சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதில் ஒருவர் பலத்த காயமடைந்தார். ஒருவருக்கு காயம் ஏற்பட்டதையடுத்து அவரை விட்டுவிட்டு மற்ற இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காயமடைந்த நபரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தொடர்ந்து மூவரும் யாரையாவது பழி தீர்க்க சதித்திட்டம் தீட்டி நாட்டு வெடிகுண்டை எடுத்துச் சென்றார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா: பிப்ரவரிக்கு பின்னர் ஒருநாள் பாதிப்பு 12 ஆயிரத்தை கடந்தது
இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று பாதிப்பு தினமும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 12,213 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது. நேற்று முன் தினம் 6594, நேற்று 8822 ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று 12,213 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தஞ்சாவூரில் கொரோனா பாதிப்பால் 18 வயது இளம்பெண் உயிரிழப்பு: 3 மாதங்களுக்கு பிறகு முதல் மரணம்
தமிழ்நாட்டிலும் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. மாநிலம் முழுவதும் நேற்று 14,212 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், 257 ஆண்கள், 219 பெண்கள் என 476 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 221 பேரும், செங்கல்பட்டில் 95 பேரும், கோவையில் 26 பேரும் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, தமிழ்நாட்டில் 3 மாதங்களுக்கு பிறகு முதல் கொரோனா மரணம் ஏற்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த 18 வயது இளம்பெண் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார். இவருக்கு எந்தவித இணைநோயும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர், காய்ச்சல், இருமல் அறிகுறிகளுடன் பரிசோதனை செய்ததில் கொரோனா பாதிப்பு உறுதியானது. உயிரிழப்புக்கான மருத்துவ காரணம் குறித்து மருத்துவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
காதல் பிரச்சினை: துப்பாக்கி சுடுதல் வீரர் சிப்பி சித்துவை கொலை செய்த நீதிபதி மகள் கைது
சண்டிகரை சேர்ந்தவர் தேசிய துப்பாக்கி சுடுதல் வீரர் சிப்பி சித்து (வயது 27). இவர் கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அங்குள்ள ஒரு பூங்காவில் உடலில் துப்பாக்கி குண்டு காயங்களுடன் ரத்தவெள்ளத்தில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். இதுகுறித்து சிபிஐ போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், சிப்பி சித்துவின் கொலையில் இமாச்சலப் பிரதேச தலைமை நீதிபதியின் (பொறுப்பு) மகள் கல்யாணி சிங்குக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, கல்யாணி சிங்கை சிபிஐ அதிகாரிகள் நேற்று கைது செய்தனர்.
“சிப்பி சித்துவும் கல்யாணி சிங்கும் 5 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்துள்ளனர். 2015-ம் ஆண்டு காலக்கட்டத்தில் அவர்கள் இருவருக்கும் இடையே காதல் விவகாரத்தில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு, கல்யாணி சிங்கிடம் பேசுவதை சிப்பி சிங் தவிர்த்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கல்யாணி சிங், ஆட்களை ஏவி சிப்பி சித்துவை கொலை செய்திருப்பதாக சந்தேக்கிறோம்” என்று சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.