பாடலாசிரியர், நடிகர், பா. விஜய் இயக்கத்தில் ஜீவா, அர்ஜுன், ராஷி கண்ணா, ராதாரவி, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடித்துள்ள படம் அகத்தியா. வேல்ஸ் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. படம் குறித்து ஜீவா பேசியது:
“இந்த படத்தின் கதையை இயக்குநர் பா விஜய் என்னிடம் சொல்லும் போது, ‘சங்கிலி புங்கிலி கதவை திற’ என்ற ஒரு ஹாரர் படத்தில் நடித்து விட்டேன்’ என்றேன். அவரோ ஹாரர் என்பது கதை சொல்வதற்காக பயன்படும் ஒரு கருவியாக மட்டுமே இருக்கிறது. இதில் ஹாரர் மட்டுமல்ல, திரில்லர், காமெடி, ஆக் ஷன், அனிமேஷன்,பேண்டஸி அனைத்து கலந்து இருக்கிறது. குறிப்பாக குழந்தைகளுக்கும் சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த படம் உருவாகிறது என்றார். தமிழில் ஒரு சர்வதேச தரத்துடன் கூடிய கிராபிக்ஸ் காட்சிகளையும் அனிமேஷன் கதாபாத்திரங்களையும் கண்டு ரசிப்பார்கள் என்றார். படத்தில் ஒரு நல்லதொரு மெசேஜும் இருக்கிறது.
அந்த விஷயம் மக்களை சென்றடைந்தால் நன்றாக இருக்கும் என எண்ணினோம். படத்தின் கிளைமாக்ஸ் முக்கியமானதாக இருக்கும். ஒரு வருடம் காத்திருந்த பிறகு அண்மையில் தான் அந்த கிளைமாக்ஸ் காட்சிகளை பார்த்தோம். உண்மையில் வியந்து போனேன். நடிகர் அர்ஜுன் முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார். அவர்தான் இந்த படத்தின் விதை. அவரைச் சார்ந்து தான் இப்படத்தின் கதை நகரும். நாங்கள் தற்காலத்திலும், அவர் 1940களிலும் இருப்பார். அவர் உருவாக்கிய ஸ்கேரி ஹவுஸ் மூலமாகத்தான் கதை பயணிக்கும். இந்த படம் மூலம் நானும், நடிகர் ராஷி கண்ணாவும் இரண்டு ஆண்டுகளாக நண்பர்களாக இருக்கிறோம். அவர் எனக்கு இந்தி திரைப்படங்களில் வாய்ப்பு வாங்கித் தருவதாக வாக்களித்து இருக்கிறார்.’’ என்றார்
இயக்குனர் பா.விஜய் பேசுகையில் ‘‘ ஹாரர் ஃபேண்டஸி பாணியில் கதை உருவாகி உள்ளது. நம்ம நடிகர்களுடன் , ஹாலிவுட் நட்சத்திர நடிகர்கள் நடித்தால் கதையில் நம்பகத்தன்மை அதிகம் இருக்கும் என்று நினைத்தேன். கதையில் மெடில்டா எனும் ஹாலிவுட் நடிகையும், ‘ஆர் ஆர் ஆர்’ படத்தில் நடித்த எட்வர்ட் சொனன் பிளேக் என்ற நடிகரும் இணைந்தார்கள். 65 நாட்களில் படப்பிடிப்பை நிறைவு செய்தோம். ஓராண்டுக்கு மேலாக கிராபிக்ஸ் பணிகள் பல இடங்களில் நடந்தது. நடிகர் அர்ஜூன் இயக்குனர் என்பதால், படம் தொடர்பான, காட்சி தொடர்பான ஆரோக்கியமான கேள்விகள் இருக்கும். அந்த கேள்விகளுக்கு பதில் அளித்து விட்டால் அவர் தன் பங்களிப்பை முழுமையாக அளித்து விடுவார்.
நான் திரைத்துறைக்கு பாடல் ஆசிரியராக அறிமுகமாகி, நடிகராகி, இயக்குநராகி, தயாரிப்பாளராகி என 27 வருடங்கள் நிறைவடைந்து விட்டது. இத்தனை ஆண்டுகளில் நான் கற்றுக் கொண்ட விஷயம் ஒன்றுதான். சினிமாவில் வெற்றி என்பது கூட்டு முயற்சி. சினிமாவில் தனிப்பட்டவர்களின் வெற்றி சாத்தியமில்லை. இந்த படம் தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா, வட இந்தியாவில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் 780க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் பிப்ரவரி 28ம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகிறது.’என்றார்