கடந்த 45 ஆண்டுகளுக்குமேல் நடித்து வருகிறார், 75 வயதை தொடப்போகும் செந்தில். இதுவரை 300க்கும் அதிகமான படங்களில் நடித்தவர், இப்போதும் நடித்து வருகிறார். அந்த வகையில், சங்கர் தயாள் இயக்கத்தில், அவர் கல்வி வள்ளலாக, அரசியல்வாதியாக நடித்த ‘குழந்தைகள் முன்னேற்றக்கழகம்’ என்ற படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. குழந்தைகள் உலகம், பள்ளி வாழ்க்கை, மாணவர் சங்க தேர்தல், அரசியல் ஆகியவை கலந்து இந்து படம் உருவாகி உள்ளது. இதில் யோகிபாபுவும் அரசியல்வாதியாக வருகிறார். படம் குறித்து பேசிய செந்தில் ‘‘மாறுபட்ட கெட்அப்பில், கல்வி வள்ளலாக நடித்தது நல்ல அனுபவம். இன்னும் சில படங்களில் நடித்து வருகிறேன். விரைவில் அந்த படங்கள் ரிலீஸ் ஆகும் ’என்றார்.
அப்போது அவரிடம் ‘‘இந்த படத்தில் யோகிபாபுவும் நடித்துள்ளார். அவர் காமெடியை பார்க்கிறீர்களா’’ என்று நிருபர்கள் கேட்டதற்காக, ‘‘ஆம் பார்க்கிறேன். அவர் காமெடி நன்றாக இருக்கிறது, அருமை’’ என்று பாராட்டு தெரிவித்தார்.‘‘ இந்த படத்தில் வாரிசு அரசியல் பற்றி பேசப்படுகிறது. வாரிசு அரசியல் பற்றி உங்க கருத்து என்ன? துணை முதல்வர் கூட வாரிசு அரசியல் சர்ச்சையில் சிக்குகிறாரே’’ என்று கேட்க, ‘‘இது சினிமா நிகழ்ச்சி. அது பற்றி பேசுகிறேன். அரசியல் வேணாம்’’ என்று சொல்லிவிட்டு எஸ்கேப் ஆனார். அதிமுகவில் இருந்த செந்தில் இப்போது பாஜவில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
‘‘குழந்தைகள் முன்னேற்றக்கழகம்’’ படம் பற்றி பேசிய படக்குழுவினர், தொழில்நுட்ப கலைஞர்கள் இயக்குனரை பற்றி பேசும்போது கண் கலங்கினார். அதற்கு காரணம் இருக்கிறது. இயக்குனர் சங்கர்தயாள் கார்த்தி நடித்த சகுனி படத்தை இயக்கியவர். கடந்த டிசம்பர் 19ம் மாதம், இந்த பட பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது நெஞ்சுவலி ஏற்பட்ட திடீரென காலமானார். 54வயதில் தனது படம் வெளியாவதை பார்க்காமலே அவர் மறைந்தது படக்குழுவை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.