டெல்லி மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றிபெற்றுள்ளது. மொத்தமுள்ள 250 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி 134 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜகவுக்கு 104 இடங்களும், காங்கிரஸ் கட்சிக்கு 9 இடங்களும் மற்ற கட்சிகளுக்கு 3 இடங்களும் கிடைத்துள்ளன. இதன்மூலம் டெல்லி மாநகராட்சியில் 15 ஆண்டுகால பாஜக ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.
டெல்லி மாநகராட்சியை ஆம் ஆத்மி கைப்பற்றியதையடுத்து ஆம் ஆத்மி தொண்டர்கள் பசுமை பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
பா.ஜனதா மாவட்ட தலைவர்களுடன் அண்ணாமலை நாளை ஆலோசனை
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அக்கட்சியின் மாவட்ட தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகளுடன் நாளை ஆலோசனை நடத்துகிறார்.
பா.ஜனதா மாநில தலைமையகமான கமலாலயத்தில் நாளை (8-ம் தேதி) காலை 10 மணிக்கு இந்த கூட்டம் தொடங்குகிறது. மாலை வரை நடைபெறும் இந்த கூட்டத்தில் நாடாளுமன்ர தேர்தல் வியூகம், கட்சியை வலுப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இதில் பங்கேற்பதற்காக மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் உள்ளிட்டோர் வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வந்துள்ளனர்.
ரெப்போ வட்டி விகிதம் 0.35 சதவீதம் உயர்வு
ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் தலைமையிலான நிதி கொள்கைக்குழு கூட்டம் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் நாட்டின் பணவீக்கம் உயர்வு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசிக்கபட்டது. இந்த கூட்டத்தின் இறுதியில் வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்துவது என முடிவு செய்யப்பட்டது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ், “வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.35 சதவீதம் உயர்த்தப்படுகிறது. இதன் மூலம் வங்கிகளின் குறுகிய கால கடன் வட்டி விகிதம் 5.9 சதவீதத்தில் இருந்து 6.25 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. இது உடனடியாக அமலுக்கு வருகிறது. நாட்டின் பணவீக்கம் அதிகரித்து வருவதை கட்டுப்படுத்த வங்கிகளுக்கு வழங்கப்படும் கடன் வட்டி உயர்த்தப்படுகிறது” என்றார்.
ரெப்போ வட்டி உயர்த்தப்பட்டு உள்ளதால் வீடு, வாகனம், தனிநபர் கடனுக்கான தவணை தொகை அதிகரிக்க வாய்ப்பு உருவாகி உள்ளது. வாடிக்கையாளரின் டெபாசிட் தொகைக்கான வட்டியும் அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு மட்டும் இதுவரை 5 முறை ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
புயல் எச்சரிக்கை : புதுச்சேரியில் 238 முகாம்கள் தயார்
மழையால் பாதிக்கப்பட்டால் மக்களை தங்க வைக்க புதுச்சேரியில் 238 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார்.
புயல் மழையை எதிர்கொள்வது தொடர்பாக அதிகாரிகளுடன் இன்று நடந்த ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ரங்கசாமி, “இந்திய வானிலை ஆய்வு மையம் நாளை புதுச்சேரியில் கனமழை என்றும், சுமார் 70 முதல் 90 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்றும் தெரிவித்துள்ளது. புதுச்சேரி, காரைக்கால், தமிழக பகுதிகளில் புயல் கரையை கடக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. முன்னெச்சரிக்கையாக என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என துறைவாரியாக அறிவுறுத்தியுள்ளோம்.
மழையால் பாதிக்கப்பட்டால் மக்களை தங்க வைக்க 238 முகாம்கள் அமைக்கப்பட உள்ளது. 75 ஆயிரம் பேருக்கு நாள்தோறும் உணவு வழங்க கல்வித்துறைக்கு உணவு வழங்கும் அட்சயாபாத்திரா நிறுவனம் தயாராக உள்ளது” என்றார்.