இந்தியாவை பற்றி வெளிநாட்டினர் பார்வை வேறு மாதிரியாக உள்ளது. ஆங்கில படங்களில், ஐரோப்பிய படங்களில் இந்தியாவை பற்றி வேறு மாதிரியான கோணத்தில் சிலர் காண்பிக்கிறார்கள். குறிப்பாக, இந்தியா பற்றிய அந்த படங்கள், நாடு வறுமையால் தத்தளிக்கிறது. பசிக்கொடுமையில் குழந்தைகள் தவிக்கிறார்கள். அங்கே குடிசை பகுதிகள் அதிகம், பிச்சைக்காரர்கள், பாம்பாட்டிகள் நிறைய என்ற ரீதியில் பதிவு செய்யப்படுகின்றன. அதேசமயம், இந்திய படங்களில் அமெரிக்கா போன்ற வெளிநாடுகள் சொர்க பூமி போல காண்பிக்கப்படுகிறது. அமெரிக்காவிற்கும் இன்னொரு மறுபக்கம் இருக்கிறது என்பதை சொல்லும் படம் ‘சிட்டி ஆப் ட்ரீம்ஸ்’
மோஹித் இயக்கத்தில் ஆரி லோபஸ் நடித்த இந்த படம் சமீபத்தில் சென்னையில் திரையிடப்பட்டது. படம் குறித்து தயாரிப்பாளர் ரூபஸ் பார்க்கர் கூறுகையில் ‘‘சிட்டி ஆப் ட்ரீம்ஸ் கதை பல உண்மை சம்பவங்களை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. வெவ்வேறு நாடுகளிலிருந்து கடத்தி வரப்படும் 18 வயதுக்கும் குறைவான சிறுவர்களை கொத்தடிமைகளாக அடக்கி வைத்து அவர்களை தையல் கூலிகளாக பயன்படுத்தது அமெரிக்காவில் நடக்கிறது .
பன்னிரண்டு மணி நேர வேலை ,அடி ,சவுக்கடி பிரம்படி என்று பல்வேறு கொடுமைகள் அவர்களுக்கு நடக்கிறது. இளம் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். இப்படி வரும் சிறுவர்களை சட்ட விரோதங்களுக்கும் பயன்படுத்துகிறார்கள். அதை விரிவாக சொல்லும் படம் சிட்டி ஆப் ட்ரீம்ஸ் அமெரிக்காவில் நிகழும் இந்த வன்கொடுமையை உலகிற்கு வெளிப்படுத்த பல்லாண்டுகாலம் படத்தை எடுத்து வைத்து காத்திருந்தேன். பல போராட்டத்திற்கு பிறகு இந்த படம் அமெரிக்காவிலும் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
உலகின் சொர்க்க பூமி என்று கூறப்படும் அமெரிக்காவில் இப்படிப்பட்ட கொடுமைகள் நடக்கிறது என்பதை உணர்ந்து அங்குள்ள பிரபல ஹீரோக்கள் அதிர்ந்து போயிருக்கிறார்கள். விரைவில் இந்த படம் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் வெளியாக உள்ளது. மெக்சிகோவை சேர்ந்த அகதியான 14 வயது சிறுவன் ஆரி லோபஸ் கதையை இந்த படம் சொல்கிறது. கால்பந்தாட்ட வீரனாக வேண்டும் என்பது அவன் கனவு. ஆனால், அவர் சூழ்நிலை காரணமாக லாஸ் ஏஞ்சல் நகரில் ஒரு ஆயுத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் கொத்தடிமை போல பணியாற்றுகிறான். அவனை போல பலரும் அங்கே கஷ்டப்படுகிறார்கள்.