தமிழில் இந்த ஆண்டு 60க்கும் அதிகமான படங்கள் வெளியாகி உள்ளன. அதில் மதகஜராஜா, குடும்பஸ்தன், டிராகன், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படங்கள் மட்டுமே தயாரிப்பாளருக்கு லாபத்தை கொடுத்துள்ளன. டிராகன் பெரிய வெற்றி படம். இந்நிலையில், சமீபத்தில் வெளியான 20 படங்களில் 2 படங்கள் சத்தமில்லாமல் ஜெயித்துள்ளன. அந்த இரண்டு படங்களின் கதையும், ஹாரர் சம்பந்தப்பட்டது.
இது குறித்து தமிழ்சினிமா மூத்த தயாரிப்பாளர்கள் கூறியது
‘‘டிராகன் படத்துக்கு பின் 20க்கும் அதிகமான படங்கள் வெளியாலும், எமகாதகி, மர்மர் ஆகிய 2 படங்கள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன. இரண்டு படங்களுமே பேய் படங்கள். பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன் இயக்கத்தில் ரூபா, நரேந்திரபிரசாத் நடித்த படம் எமகாதகி. ஹீரோயின் திடீரென இறந்துவிடுகிறார். அவருக்கான இறுதிசடங்குகள் நடக்கிறது. ஆனால், பிணத்தை வீட்டை விட்டு வெளியே கொண்டு வர முடியவில்லை. அது ஏன். அவர் எப்படி இறந்தார் என்பது எமகாதகி கதை. இந்த படத்தின் கதை, ஹீரோயின், மற்றவர்கள் நடிப்பு விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டது. ஓரளவு குறைவான தியேட்டரில் ரிலீஸ் ஆனாலும் தயாரிப்பாளருக்கு படம் லாபத்தை கொடுத்துள்ளது. இந்த படம் 6 கோடிக்கும் குறைவான பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது. படத்தின் சாடிலை ரைட்சை சில கோடிகளுக்கு விற்றுவிட்டார் தயாரிப்பாளர். டிஜிட்டல் ரைட்ஸ் சில கோடிக்கு பேசப்பட்டுள்ளது. தவிர, படத்தின் மற்ற மொழி ரைட்ஸ் பல கோடி வியாபாரம் ஆக உள்ளது.
இதனால், தயாரிப்பாளருக்கு சில கோடி லாபம்
ஹமந்த் நாராயணன் இயக்கத்தில் புதுமுகங்கள் நடித்த மர்மர் படமும் லாபகரமாக படமாகி உள்ளது. சில யூடியூப்பர்கள் பேயை தேடி ஜவ்வாது மலை காட்டுக்குள் செல்வது கதை. அவர்களுக்கு என்ன நடந்தது என்பது கிளைமாக்ஸ். ஒரு கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம், 4 நாட்களில் 4 கோடி வரை வசூலித்துள்ளது. சாடிலைட்ஸ், டிஜிட்டல், மற்ற மொழி ரைட்ஸ் வியாபாரம் சில கோடிகள். ஆக, 4 நாட்களில் மர்மர் படமும் வெற்றிகரமாக படமாக அமைந்துள்ளது. இந்த 2 படக்குழுவும் வெற்றி விழாவை நடத்திவிட்டார்கள். தொடர்ந்து தியேட்டரிலும் படம் ஓடுகிறது. அதுவும் வருமானம்.