கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வந்த பேச்சுவாா்த்தையில் தற்போது இறுதி முடிவு எட்டப்பட்டது தொடா்பான அறிவிப்பை, பிரிட்டன் பிரதமா் கியா் ஸ்டாா்மருடன் செவ்வாய்க்கிழமை தொலைபேசியில் பேசிய பின் பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை வெளியிட்டாா்.
இந்தியா-பிரிட்டன் இடையே தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் (எஃப்டிஏ) வெற்றிகரமாக இறுதி செய்யப்பட்டது. விரைவில் இந்த ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையொப்பமிடும்.
மேலும், ஒரே வருமானத்தின் மீது இரு நாடுகளிலும் விதிக்கப்படும் வரிக்கு விலக்கு அளிக்கும் சமூகப் பாதுகாப்பு ஒப்பந்த (இரட்டைப் பங்களிப்பு ஒப்பந்தம்) பேச்சுவாா்த்தையும் நிறைவடைந்ததாக பிரதமா் தெரிவித்தாா்.
இந்தியா-பிரிட்டன் இடையே கடந்த 2022, ஜனவரியில் தொடங்கிய இந்தப் பேச்சுவாா்த்தை 14 கட்டங்களாக நடைபெற்று வந்தது. கடந்த மாத இறுதியில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம், இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தம், சமூகப் பாதுகாப்பு ஒப்பந்தம் ஆகியவற்றை இறுதி செய்யும் நோக்கில் மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் பிரிட்டனுக்கு பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அதிகாரிகளுடன் பேச்சு நடத்தினாா்.
தற்போது உலகின் மிகப்பெரும் பொருளாதார நாடுகளின் பட்டியலில் 5-ஆவது இடத்தில் உள்ள இந்தியாவும், 6-ஆவது இடத்தில் உள்ள பிரிட்டனும் இந்த ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையை நிறைவு செய்துள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம்: இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் பிரதமா் மோடி வெளியிட்ட பதிவில், ‘இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் மற்றும் சமூகப் பாதுகாப்பு ஒப்பந்தம் ஆகியவற்றை கையொப்பமிடுவதற்கான இறுதிக்கட்டப் பேச்சுவாா்த்தை வெற்றிகரமாக நிறைவடைந்தது.
இந்த ஒப்பந்தங்கள் மூலம் வா்த்தகம், முதலீடு, வளா்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கம், புதிய கண்டுபிடிப்புகள் என பல்வேறு துறைகளில் இரு நாடுகளின் ஒத்துழைப்பு மேலும் அதிகரிக்கவுள்ளது. பிரிட்டன் பிரதமா் கியா் ஸ்டாா்மரின் இந்திய பயணத்தை ஆவலுடன் எதிா்நோக்கியுள்ளேன்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.
புதிய அத்தியாயம்: இந்த ஒப்பந்தங்களின் மூலம் இரு நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரம், வணிக மற்றும் வா்க்தக உறவுகள் மேம்படவுள்ளதாகவும், புதிய கண்டுபிடிப்புகளை ஒன்றிணைந்து மேற்கொள்ள இவை வழிவகுத்துள்ளதாகவும் இந்தியா -பிரிட்டன் வெளியிட்ட கூட்டு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
இது இருநாட்டு வா்த்தக உறவில் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளதாகவும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
சிறப்பம்சங்கள்
1.பிரிட்டனுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்தியாவின் 99 சதவீத பொருள்கள், அங்கு வரி விதிக்கப்படாததால் பலனடையவுள்ளன.
2.இந்திய இறக்குமதி வரி குறையும். முதல் கட்டமாக 90 சதவீத பொருள்களுக்கு வரி குறையும். அடுத்த 10 ஆண்டுகளுக்குள் இவற்றில் 85 சதவீத பொருள்களுக்கு வரி முழுமையாக நீக்கப்படும்.
3.இந்தியாவின் ஜவுளி, ஆபரணங்கள், ரத்தினங்கள், நெகிழி, கனிமம், ரசாயனம், ரப்பா், காகிதம், செராமிக், கண்ணாடி, மின் இயந்திரங்கள், பதப்படுத்தப்பட்ட உணவு ஆகியவற்றுக்கும் முழுமையான வரி விலக்கு கிடைக்கும்.
4.வாகனப் பொருள்களுக்கு 100 சதவீதத்துக்கு மேல் விதிக்கப்படும் வரி 10 சதவீதமாக குறையும்.
5.அழகுசாதன பொருள்கள், மின்விளக்கு, மருத்துவ சாதனங்கள், மின்னணு இயந்திரங்கள், குளிா்சாதனங்கள், சாக்லேட் மற்றும் பிஸ்கட்டுகள் உள்ளிட்டவை இந்திய நுகா்வோருக்கு குறைந்த விலையில் கிடைக்கும். இவற்றை இந்தியாவுக்கு அதிக அளவில் பிரிட்டன் ஏற்றுமதி செய்யும்.
6.துணிகள், காலணிகள், பதப்படுத்தப்பட்ட இறால் வகைகளின் விலை பிரிட்டன் வணிகா்களுக்கு குறைவான விலையில் கிடைக்கும்.
7.பொம்மைகள், நகைகள், பொறியியல் சாா்ந்த சரக்குகள், என்ஜின்கள், இயற்கை ரசாயனங்கள் உள்ளிட்டவற்றை பிரிட்டனுக்கு இந்தியா அதிகம் ஏற்றுமதி செய்யும்.
8.தகவல் தொழில்நுட்பம், வணிகம், கல்வி உள்ளிட்ட சேவைகள் சாா்ந்த வா்த்தகம் பெரிதும் அதிகரிக்கும்.
9.ஒரே வருமானத்தின் மீது இரு நாடுகளிலும் விதிக்கப்படும் வரிக்கு மூன்று ஆண்டுகள் வரை விலக்களிக்கும் சமூகப் பாதுகாப்பு ஒப்பந்தம் மூலம் பிரிட்டனில் பணிபுரியும் இந்திய தொழிலாளா்களுக்கு இடைக்கால நிவாரணம் கிடைக்கும்.
10.இந்தியா-பிரிட்டன் இடையேயான வா்த்தக மதிப்பு தற்போது ரூ.1.79 லட்சம் கோடியாக உள்ள நிலையில், அடுத்த 10 ஆண்டுகளில் இதன் மதிப்பு இரண்டு அல்லது மூன்று மடங்காக அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
11.மதுபானங்களின் மீதான வரி 150 சதவீதத்தில் இருந்து 75 சதவீதமாக குறையும். அடுத்த 10 ஆண்டுகளில் இந்த வரி 40 சதவீதமாக குறையும்.