ஆண் பாலினத்தைத் தீர்மானிக்கும் Y குரோமோசோம் படிப்படியாக அழிந்து வருவதாகவும் இதனால் எதிர்காலத்தில் ஆண்களே இல்லாமல் போகலாம் என்றும் அறிவியல் ஆய்வு ஒன்று வெளியாகியுள்ளது. என்ன காரணம்? ஆண்களே இல்லாமல் போனால் எப்படி மனித இனம் தழைக்கும்? இதை தவிர்க்க முடியுமா?
அதுகுறித்து சிவகங்கை அரசு மருத்துவமனை டாக்டர் அ.ப. பரூக் அப்துல்லா அளித்துள்ள விளக்கத்தில், “பெண் இல்லாத ஊரிலே, புதிதாய் பூ பூப்பதில்லை என்ற பாடல் வரிகள் தெரியும். பெண் இல்லாத ஊரில் பூ பூக்காது, சரி… ஆண்களே இல்லாத உலகம் எதிர்காலத்தில் இருந்தால் எப்படி இருக்கும்?
சமீபத்தில் மரபணு அறிவியல் ஆய்வாளர்கள் வெளியிட்ட ஆய்வறிக்கை தற்போது வைரல் ஆகி ஆண்களே இல்லாத நிலை ஏற்படுமோ? அது தான் உலகத்தின் அழிவுக்கு வழிவகுக்குமா? என்றெல்லாம் யோசிக்க வைத்து விட்டது.
மனிதனின் ஒவ்வொரு செல்களிலும் 23 ஜோடி குரோமோசோம்கள் இருக்கின்றன. இதில் 22 ஜோடி – குரோமோசோம்களின் பெயர் ஆட்டோசோம்கள். இவை ஒருவரின் சரும நிறம், உடல் வாகு, கண்ணின் நிறம் மற்றும் இதர உடல் சார்ந்த அனைத்து செயல்பாடுகளையும் கவனித்துக்கொள்பவை. 23ஆவது குரோமசோம் ஜோடிதான் – ஒருவரின் பாலினத்தை – அதாவது பெண் அல்லது ஆண் என்று உருவாக்கும் வல்லமை பெற்றதாக உள்ளது.
எக்ஸ், ஒய் என்ற இரண்டு குரோமசோம் கொண்ட இந்த ஜோடியில் இரண்டும் எக்ஸ் இருந்தால் அது பெண்மைக்கான குரோமோசோம். ஒரு எக்ஸ் ஒரு ஒய் இருந்தால் அது ஆண்மைக்கான குரோமோசோம்.
ஒரு மனித சிசு கருவுக்குள் உண்டான நாளில் இருந்து 12 வது வாரம் வரை பாலினமேதுமின்றி பொதுவான மனித சிசுவாக வளருகிறது. அந்த சிசு உருவாக தாயின் கருமுட்டையும் தந்தையின் விந்தணுவும் ஒன்றாக இணைந்து கரு உருவாகிறது. தாயிடம் இருந்தும் தந்தையிடம் இருந்து தலா ஒரு எக்ஸ் குரோமோசோம் ஒன்றிணைந்தால் அந்தக் குழந்தை பெண் குழந்தையாக வளரும். ஆயினும் தாயிடம் இருந்து எக்ஸும் தந்தையிடம் இருந்து ஒய் குரோமோசோம் சேர்ந்தால் 12வது வாரத்தில் அந்த ஒய் குரோமோசோமில் இருக்கும் எஸ் ஆர் ஒய் (SRY)எனும் மரபணுத் தூண்டப்பட்டு அதன் விளைவாக உடல் அங்கங்களை உருவாக்கப் பயன்படும். 22 ஜோடி ஆட்டோசோம்களில் எஸ் ஓ எக்ஸ் 9 எனும் இடம் தூண்டப்பட்டு – ஆணின் இனப்பெருக்க உறுப்பான விதைப்பை உருவாகிறது. கருவுக்குள் இருக்கும் போதே அந்த விதைப்பையில் இருந்து ஆண்மைக்கான ஹார்மோன்கள் சுரக்கப்பட்டு, அதுவரை பாலினமின்றி இருந்த சிசு – ஆண் குழந்தையாக வளரத் தொடங்குகிறது.
சமீப ஆய்வு முடிவுகளில் பெண்மைக்கான எக்ஸ் குரோமோசோம் நீளத்தில் பெரிதாக உள்ளதும், ஒய் குரோமோசோம் சிறிதாக இருக்கிறதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், எக்ஸ் குரோமோசோமில் 1600 ஜீன்கள் உள்ளதும் அதில் முக்கியமான பணியாற்றும் 900 ஜீன்களாவது உள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஒய் குரோமோசோமில் பாலினத்தை முடிவு செய்யும் பணியைச் செய்யும் ஜீன்கள் – 55 என்ற அளவில் மட்டுமே உள்ளன. இவ்வாறு சிறுகச் சிறுக ஒய் குரோமோசோமில் உள்ள ஜீன்கள் இழப்பு ஏற்பட்டால் நாளடைவில் மனித இனத்தில் ஒய் குரோமோசோம் இல்லாமல் போகலாம் என்றும் ஒய் குரோமோசோம் இல்லாமல் போனால் இனப்பெருக்கம் ஏற்படாமல் தடைபடவும் வாய்ப்பு உள்ளது என்றும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
எனினும் இந்த அச்சத்திற்கு மருந்தளிக்கும் விதமாக மற்றொரு ஆய்வு முடிவு நமக்கு ஆறுதல் அளிக்கிறது. ஜப்பானின் தெற்குப் பகுதியில் இருக்கும் ஒரு தீவில் டொக்குடயா ஒசிமென்சிஸ் எனும் ஸ்பைனி எலி வகை ஒன்றில் ஒய் குரோமோசோமும் எஸ் ஆர் ஒய் மரபணுவும் இல்லாமல் போயிருக்கிறது. ஆனாலும் அந்த இனத்தில், ஆண் எலிகள் – விதைப்பையுடன் பிறக்கின்றன.
ஒய் குரோமோசமும் இல்லாம.. அதுல எஸ் ஆர் ஒய்யும் இல்லாம, எப்டி இது சாத்தியம்?
இந்த எலி வகையில் ஒய் குரோமோசோம் இல்லாமலும் 22 ஜோடி ஆட்டோசோம்களில் இருந்து குறிப்பிட்ட சிறிய இடத்தில் எஸ் ஓ எக்ஸ் ஜீன் தானாக உந்தப்பட்டு ஆண் எலிகள் உருவாவது கண்டறியப்பட்டுள்ளது. இப்போது இது மாதிரி மனித ஒய் குரோமோசோம் முழுவதுமாக இல்லாமல் போகும் நாளில், அப்போது அந்த எலியைப் போன்றே மற்றொரு இடத்தில் இருந்து ஆண்மைக்கான மரபணு வெளிப்பாடு ஏற்படுமா? என்ன ஏது நடக்கும்? என்பது மெதுவாகத் தான் தெரியும். மெதுவான்னா எவ்வளவு மெதுவாங்கய்யா? என்று தேவர் மகன் கமல் போலக் கேட்டால் இன்னும் 11 மில்லியன் ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.