No menu items!

ஆம்ஸ்ட்ராங்கிற்கு இப்படி ஒரு முகமா?

ஆம்ஸ்ட்ராங்கிற்கு இப்படி ஒரு முகமா?

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்குப் பின்னர் அவரைப் பற்றி பல்வேறு விதமான தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதில் ஆச்சர்யம் தரும் சில இலக்கிய எழுத்தாளர்களின் பதிவுகள் இங்கே…

எழுத்தாளர் தமிழ்ப்பிரபா

உன்னை சந்தித்துவிட்டு கிளம்பும்போது, “ம்மா… இப்டியொரு சட்டை எனக்கு வாங்கிக் குடேம்மா” என்றாய். “உடம்பைக் குறைச்சுட்டு இதையே எடுத்துகோண்ணா” என்றதும், என் கன்னத்தைப் பிடித்து கிள்ளிச் சிரித்தாய். அந்த சிரிப்புடன்தான் அண்ணா உன்னை கடைசியாகப் பார்த்தது. நீ கேட்ட அந்த சட்டையைத்தான் உன் இறுதி ஊர்வலத்திற்கு போட்டு வந்தேன். அந்த சிரிப்போ கிள்ளலோ இல்லாமல் மீளா உறக்கத்தில் இருந்தாய் நீ. இனி அந்த சிரிப்பை எப்போது காண்பேன்.

பைக்கில் வந்த ஸ்விகி ட்ரஸ் போட்டவன் உன்னை தன்னிடம் வரவழைக்க “ஜெய்பீம்ணா” என சொன்னதும் அவனருகே நீ சென்றபோதுதான் அவன் கத்தியை எடுத்திருக்கிறான் என இரங்கல் கூட்டத்தில் யாரோ சொல்லி கேட்டபோது அழுகையைக் கட்டுப்படுத்த இயலவில்லை. எத்தனை நம்பிக்கையுடனும் பிரியத்துடனும் நீ அவனருகே சென்றிருப்பாய்.

பண்பாட்டு ரீதியாக பௌத்தத்தையும் அரசியல் ரீதியாக அம்பேத்கரையும் பயின்று தலித்துகள் அறிவுரீதியாக மேலெழும்ப வேண்டுமென வடசென்னையில் தொடர்செயற்பாடுகளை நீ நிகழ்த்தினாய். ரௌடிகளாக பிம்பப்படுத்தப்பட்ட அடையாளங்களை வழக்கறிஞர்களாக மாற்றினாய். பிற மாவட்டங்களில் போல அல்லது சென்னையில் தலித்துகளின் மீது வன்முறை நிகழாமல், அவ்வாறே நிகழ்ந்தாலும் கூப்பிட்ட குரலுக்கு பெரும் அரணாக கருப்பர் நகரத்துக் களிறாய் இருந்தாய். எத்தனை பேரின் பிள்ளைகளை படிக்க வைத்தாய், பணியலமர்த்தினாய். அந்த நன்றியைத்தான் கண்ணீராக பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் உட்பட குடும்பம் குடும்பமாக வந்து உனக்கு அஞ்சலி செலுத்திவிட்டுச் சென்றார்கள் என்பதை உன்னை ரௌடியாக கட்டப்பஞ்சாயத்து ஆளாக கட்டமைக்கும் வெறுப்பாளர்கள் அறிவார்களா?

கொடூரமான கொலை, புதைப்பதற்கு நீதிமன்றம் காட்டிய அலைக்கழிப்பு,  இறுதியில் அனுமதி மறுப்பு, அரசின் கள்ள மௌனம் என மேலும் மேலும் கொதிநிலை அடைந்து வன்முறையை நிகழ்த்துவதற்கு அத்தனை சாத்தியங்களும் உன்னைச் சுற்றி திரண்டிருந்த பெருங்கூட்டத்திற்கு இருந்த போதும் அதை யாரும் செய்யாமல் இருந்ததற்கு காரணம் நீ கற்றுக்கொடுத்த ஒழுக்கம்தான்.

இந்த மூன்று நாட்களும் மருத்துவமனையிலும், இறுதி ஊர்வலத்திலும் எந்த ஒரு வன்முறையும் நிகழாமல் நீ அடக்கம் செய்யப்பட்டாய். ஒரு தலைவன் தன் மக்களை எப்படி வழிநடத்தியிருக்கிறான் என இந்த மாநிலம் அறிந்து கொள்வதற்கு நீ உன் உயிரையே விலையாகக் கொடுத்திருக்கிறாய் அண்ணா.

“ஒரு கூட்டத்தோட தலைவன தூக்கிட்டா இனி எல்லோரும் சிதறிப்போயிடுவானுங்க. இப்போ செய்” என மெட்ராஸ் படத்தில் வில்லன் பேசும் வசனம் வரும். ஆனால், கூட்டம் நிச்சயம் சிதறாது. முன்பெப்போதும் விட தீவிரமாக ஒன்றிணையும்.

பேராசிரியர் ஸ்டாலின் ராஜாங்கம்

‘பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் சகோதரர் கே. ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்ட செய்தி பரவியதும் ஒரு பக்கம் காவல்துறையும் மறுபக்கம் அரசின் கட்சியான திமுக இணைய அனுதாபிகளும் வேகவேகமாக அவர் ரவுடி, கட்டப்பஞ்சாயத்து செய்பவர் என்கிற கதையாடல்களை பரப்பினர். அவ்வாறு சொல்வதன் மூலம் அவர் கொல்லப்பட வேண்டியவர் என்கிற தர்க்கம் கிடைத்தது. இதன் மூலம் அவர் கொலையை மட்டுமல்ல அதைத் தடுக்க தவறிய  குற்றச்சாட்டிலிருந்தும் அரசை காப்பாற்றுவது அவர்களின் நோக்கமாக இருந்தது.

எல்லா காலத்திலும், எல்லா இடங்களிலும் இவையே நடந்து வந்திருக்கின்றன. ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவரின் மேன்மையை விட இத்தகைய ‘கீழ்மை’யை சொல்லும் போது சாதி உளவியல் காரணமாக பொது சமூகமும் எந்த கேள்வியும் இல்லாமல் ஏற்றுக் கொள்கிறது. ஆனால், தன்னைப் பற்றிய இத்தகைய அவதூறுகளுக்கு எதிராக ஒடுக்கப்பட்ட சமூகம் தொடர்ந்து கடுமையாக போராடி வந்திருக்கிறது.தன்னை பற்றி வலிந்து கட்டமைக்கப்பட்ட பொய்களுக்கு எதிராக தனக்கான உள்மெய் கதையாடலை அது சொல்லத் தொடங்குகிறது.

அதிகார சமூகம் கட்டமைக்கும் இத்தகைய பொய் கதையாடல்களுக்கு எதிராக தான் எளிய மக்களின் கதைப்பாடல்களும் சமூக கொள்ளையர்கள் பற்றிய கதைகளும் உருவாகியிருப்பதாக சொல்லப்படுகின்றன என்றாலும் அவை சமூக ஏற்பை அடையும் போது ஒடுக்கப்பட்டோருக்கான சிறுமீறலுக்கு இடமளித்து விட்டு அவற்றை மீண்டும் தனக்கேற்ப திரித்துக் கொள்கிறது என்பதையும் பார்க்கிறோம்.

ஆம்ஸ்ட்ராங் பற்றிய அதிகாரத்தின் கதையாடல் ஒரு புறம் என்றால், இதே நேரத்தில் சமூக வலைதளம் வழியாக ஒடுக்கப்பட்டோர்  முன்வைத்த அவர் பற்றிய அனுபவங்கள் முற்றிலும் வேறுபட்டு  இருந்தன. சரியாக சொல்ல வேண்டுமானால் அதிகாரம் உருவாக்கிய கதையாடலுக்கு மாற்றான கதையாடலாக திட்டமிடாமலே அவை அமைந்துவிட்டன.

‘ரவுடிகளுக்குரியதான’ வன்முறை,ஆயுதங்கள், ரத்தம், பழிக்கு பழி, கொலை என்று எதுவும் அக்கதையாடல்களில் இல்லை. அதற்கு மாற்றாக கல்வி, நூல்கள், பேனா, நோட்டு புத்தகங்கள், மாணவர் சேர்க்கை, கல்வி உதவித்தொகை, பாபாசாகேப் அம்பேத்கர் நூல் தொகுதிகள் போன்றவையே அவற்றில் இருந்தன.

மாணவர்களுக்கு தங்க இடம் கொடுத்தார், நோட்டு புத்தகம் வாங்கி தந்தார், பிரச்சினையின் போது உதவினார், பலர் வழக்கறிஞராவதற்கு உதவி புரிந்தார் என்பதான செய்திகள் பலராலும் திரும்ப திரும்ப நினைவு கூரப்பட்டன. தான் எழுதிய அம்பேத்கர் தொடரை படித்துவிட்டு தொலைபேசியில் அழைத்து பேசுவார் என்று ஒரு தலித் அல்லாத நண்பர் எழுதினார். தானெழுதிய நூலொன்றின் பல நூறு பிரதிகளை காசு கொடுத்து வாங்கி விநியோகித்தார் என்றெழுதினார் எழுத்தாளர் ஒருவர். அவரை அறிந்தவர்களுக்கு இவை எவையும் மிகையில்லை என்பது தெரியும்.

அவருடைய பழைய உரைகளின் வீடியோ துண்டுகள் சுற்றில் வந்தன. அவை எல்லாவற்றிலும் படிப்பது பற்றியே அவர் பேசியிருந்தார். ஒரு பேச்சிலும் வெட்ட – குத்த அழைக்கும் வன்முறை விளிப்பு அவரிடமில்லை. ஒரு பேச்சில் சட்டைப் பையிலிருக்கும் பேனாவை அம்பேத்கரின் பேனாவாக கூறி, அதுதான் நம்மை தலைநிமிர வைத்தது என்பதை மக்களுக்கு சொல்ல வேண்டும் என்கிறார். மற்றொரு பேச்சில் தன்னை வரவேற்க கட்டப்பட்ட பேனருக்கான செலவில் மாணவர்களுக்கு உதவி செய்திருக்கலாம் என்கிறார்.

இத்தனைக்கும் அரசியல் சமூகம் அவரை முற்றிலும் புறக்கணித்து வந்தது. அவரும் அதற்கு   மெனக்கிட்டதில்லை. 24 மணி நேர செய்தி சேனல்களின் எந்த விவாத நிகழ்ச்சியிலும் அவர் அழைக்கப்பட்டதில்லை. இந்த வெளிச்சம் விழும் மைய நீரோட்டத்திலிருந்து விலகி எங்கோ ஓரிடத்தில் யாருக்கோ ஒரு வேலையை அவரால் செய்து தர  முடிந்திருக்கிறது. அதன் பிரதிபலிப்பை அவர் மரணத்தின் போது பார்க்க முடிந்தது.

பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் சக அமைப்புகளின் தொண்டர்கள் தவிர யாரென்றே தெரியாத எளிய மக்கள் அஞ்சலி செலுத்த வந்துகொண்டே இருந்தார்கள். நீண்ட வரிசையில் பல மணி நேரமாக காத்திருந்தார்கள். அவர்களில் குடும்ப பெண்கள், முதியவர்கள், இளைஞர்கள் இருந்தனர். பல மதத்தவர் இருந்தனர். அடக்கத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டியிருந்ததால் உடலை பார்க்க முடியாமல் போனவர்களும் உண்டு. அடக்க ஊர்வலத்தின் போது ஆங்காங்கு நின்ற மக்கள் அஞ்சலி செலுத்தி வழி அனுப்பினர். மாலை தொடங்கிய இறுதி ஊர்வலம் இருபதுக்கும் மேற்பட்ட கிலோ மீட்டரை கடக்க நடுநிசியை தாண்டியது. அவரை அடக்கம் செய்த பின்னாலும் புதைமேட்டிற்கு சென்று முகம் தெரியாத பலரும் தொடர்ந்து அஞ்சலி செலுத்திய படியே இருக்கிறார்கள்.

எத்தகைய மாற்றுக் கதையாடல்கள் இவை! அதிகார பீடங்கள் எழுப்ப முயன்ற கதையாடல்களுக்கு இவற்றில் பதில் இருக்கின்றன. அதிகார வர்க்கத்தினர் உருவகப்படுத்திய அரிவாளுக்கு எதிராக மக்களின் கதையாடல்களில் புத்தகமும் வன்முறையற்ற வாழ்வுக்கான அறிவும் நிரப்பப்பட்டிருந்தன.

அவரை அடக்கம் செய்ய சென்னையில் இடமளிக்காமையைக் கூட இந்த ரவுடி கதையாடலின் தொடர்ச்சியிலேயே பார்க்க முடியும். அவருக்கிருந்த ரவுடி பிம்பம் கூட எளிய மக்களுக்கு தொந்தரவாக இருந்ததில்லை. இன்னும் சொல்லப்போனால் அது ஒரு உளவியல் பலமாக இருந்தது என்பதே உண்மை. அத்தகைய பலம் இக்கொலை மூலம் காலி செய்யப்பட்டிருக்கிறது என்பதே அவர் ஆதரவாளர்கள் குரல்களின் அடிநாதமாக இருக்கிறது. அவரை சட்ட ஒழுங்கு எல்லைக்குள் மட்டும் இருந்தி பேசுவேரால் ஒருபோதும் இந்த உளவியலை புரிந்துகொள்ள முடியாது.

அரசும் மைய நீரோட்ட ஊடகங்களும் புறக்கணித்தாலும் வெகுமக்களின் நினைவுகளில் ஆம்ஸ்ட்ராங் அரசியல் வீரராக மட்டுமல்லாமல் சமூக வீரராக நிலைபெற்று விட்டார் என்பதையே வெகுமக்களின் கதையாடல்கள் காட்டுகின்றன. இனி அவர் பற்றிய வரலாறு அவரிலிருந்து அமையாது. வெகுமக்களின் நினைவுகளிலிருந்து கதையாக – பாடலாக – நினைவுகளாக உலவும்.

கவிஞர் யாழன் ஆதி

தோழர் யாக்கன் அவர்களின் அலுவலகத்தில் ஓர் அச்சு வேலையாக நான் இருந்த பொழுது திடீரென்று உள்ளே வந்தார் அண்ணன் ஆம்ஸ்ட்ராங். வந்தவுடன் இறுக அணைத்து ‘எப்படி இருக்கீங்க பிரதர்?’ என்று கேட்டார். நீண்ட நேரம் உரையாடிக் கொண்டிருந்தோம். எனக்கு தொடர் வண்டிக்கு நேரம் ஆகிவிட்டது நான் கிளம்புகிறேன் என்று அவரிடம் விடைபெற்றேன். எப்படி போவீங்க? என்று கேட்டார் ‘பஸ்ல போவேன் இல்லனா ஆட்டோல போய்டுவேன் அண்ணா’ என்று சொன்னேன். அவர் தன்னுடைய ஓட்டுநரை அழைத்து ‘பிரதர சென்ட்ரல் ஸ்டேஷன்ல போய் விட்டுட்டு வாங்க’ என்று சொல்லி தன்னுடைய விலை உயர்ந்த காரை கொடுத்து என்னை அனுப்பினார். நட்புக்காகவும் அன்பிற்காகவும் எதையும் இழக்க துணிந்தவர். இன்றைக்கு தன் உயிரையே இழந்திருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...