நடிகர் விஜய் ஜனநாயகன் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.அவர் மகன் ஜேசன் சஞ்ஜெய், சந்தீப் கிஷன் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். இந்நிலையில், இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் 80 வயதை கடந்த நிலையில், கூரன் என்ற படத்தில் கதைநாயகனாக நடித்துள்ளார். நிதின் இயக்கியிருக்கிறார். ஒரு நாய்க்கான சட்ட உரிமை போராட்டமே இந்த படத்தின் கதை.
சித்தார்த் விபின் இசை அமைத்துள்ளார்.
இது குறித்து சென்னையில் நடந்த படவிழாவில் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசியதாவது
இதுல, வித்தியாசமான படம் என்ற வார்த்தையை பல்வேறு சினிமா விழாக்களில் கேட்டுக் கேட்டுப் புளித்துப் போயிருக்கலாம். ஆனால், கூரன் வித்தியாசமான படம் .இதுவரைக்கும் நீங்கள் பார்க்காத படம். என்னுடைய 45 ஆண்டு கால சினிமா வாழ்க்கையில் உண்மையிலேயே வித்தியாசமான படம். உண்மையில் இந்த படத்தில் ஒரு நாய்தான் கதாநாயகன்.ஒரு ஈ பழிவாங்கி ஒரு படம் பெரிய வெற்றி பெற்றுள்ளது. ஒரு யானை பழி வாங்கிய வெற்றிப் படத்தை, ஒரு பாம்பு பழிவாங்கிய வெற்றிப் படத்தை எல்லாம் நீங்கள் பார்த்திருக்கிறீர்கள்.இதில் நாய் பழிவாங்குகிறது. அதுவும், தன்னுடைய போராட்டத்திற்காக நீதிமன்றம் வரை படியேறுகிறது.
இந்தப் படத்தில் கதாநாயகன் இல்லை, கதாநாயகி இல்லை டூயட் இல்லை.நடனம் இல்லை. இதில் நடித்த நான் 80 வயதை தாண்டியவன். ஒய்.ஜி. மகேந்திரன் என் வயதுதான்.
இந்த வயதிலும் நான் சுறுறுப்பாக இருப்பது கடவுள் கொடுத்த பரிசு. நான் ஓடிக் கொண்டே இருக்கிறேன், மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்கிறேன். எதையும் பாரமாக தலையில் போட்டுக் கொள்வதில்லை .கடைசி வரை உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும். எப்போதும் வேலை செய்து கொண்டே இருக்க வேண்டும் என நினைக்கிறேன். வீட்டில் உட்காரக்கூடாது என்று நினைப்பேன். காலையில் 9:00 மணிக்கு அலுவலகம் வந்து விடுவேன். இத்தனை ஆண்டுகளில் எனக்கு ஜுரம் வந்ததே கிடையாது . கொடைக்கானலில் இந்த படப்பிடிப்பில் அது வந்தது.என்னைத் தண்ணீரில் எல்லாம் குளிக்க வைத்தார்கள், ஜுரம் போய்விட்டது.
வியாதி என்பது நம் மனம் நினைப்பதுதான்.
வாழ்க்கையைச் சுலபமாக எடுத்துக் கொண்டால் கடைசி வரை நன்றாக இருக்கலாம்.என்னுடைய படங்களில் ஏதாவது ஒரு
மெசேஜ் இருக்கும்.நான் எடுத்த எழுபது படங்களில் ஐம்பது படங்களில் மனிதன் நீதிமன்றம் சென்றது போல் தான் எடுத்திருக்கிறேன். இதில் ஒரு நாய் நீதிமன்றம் செல்கிறது. இந்தப் படத்தை இயக்குநர்கள் அமீர், பார்த்திபன் போன்றவர்கள் பார்த்திருக்கிறார்கள். டெல்லியில் இருந்து மேனகா காந்தி பார்த்திருக்கிறார். அனைவரும் படத்தைப் பார்த்து விட்டு உடனே எழுந்திருக்கவில்லை, கண்கலங்கினார்கள்.
இங்கே நாம் நடிகர்களைக் கொண்டாடுகிறோம். .கதாநாயகன் அளவுக்கு இயக்குநர்களையும் கொண்டாட வேண்டும். அவர்களுக்கும் நல்ல படங்களை கொடுக்க வேண்டும் என்ற பொறுப்பு வர வேண்டும். காரணம், சில படங்களை பார்க்கும்போது போது கஷ்டமாக உள்ளது.கத்தி எடு தலையை வெட்டு என்று வெளியாகும் படம் பார்த்து விட்டு வெளியே செல்கிறவனும் கத்தி எடுத்து கையை வெட்டு, தலையை வெட்டு என்று செய்து கொண்டிருந்தால் இளைய சமுதாயம் என்ன ஆகிறது?. இந்தப் படத்தில் கத்தி இல்லை; ரத்தம் இல்லை;துப்பாக்கி சத்தம் இல்லை; ஆனால் ஒரு சக்தி வாய்ந்த விஷயம் இருக்கிறது.