கிருஷ்ணகிரியில் ராணுவ வீரர் பிரபு கொலை செய்யப்பட்ட சம்பவம் மற்றும் பாஜக பட்டியலின அணி நிர்வாகி தடா பெரியசாமி கார் மீது தாக்குதல் நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நேற்று திருவல்லிக்கேணியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முன்னாள் ராணுவ அதிகாரி பாண்டியன் என்பவர், ‘எங்களுக்கு குண்டு வைக்கவும் தெரியும். துப்பாக்கியால் சுடவும் தெரியும். நாங்கள் களத்தில் இறங்கினால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிடும். தமிழக அரசை எச்சரிக்கிறேன், எங்களை அந்த நிலைக்குத் தள்ளிவிட வேண்டாம்’ என சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.
இதனையடுத்து ராணுவ அதிகாரி பாண்டியன் மீது திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்படுத்துதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
காயத்ரி ரகுராம் – திருமாவளவன் சந்திப்பு!
பாஜகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள காயத்ரி ரகுராம் இன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை நேரில் சந்தித்தார். அப்போது காயத்ரி ரகுராமிற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பொன்னாடை போர்த்தி நூல் வழங்கினார். காயத்ரி ரகுராம் திருமாவளவனுக்கு பொன்னாடை வழங்கினார். சென்னையில் நடைபெற்ற சந்திப்பு மாரியாதை நிமித்தமான அற்புதமான சந்திப்பு என காயத்திரி ரகுராம் தமது டுவிட்டர் பதிவில் கூறி இருக்கிறார்.
‘எதிர்பாராத மனிதர்கள் எனக்கு உதவியபோது, ஆதரவு அளித்த அண்ணன் தொல் திருமாவளவன் அவர்களுக்கும், வி.சி.க.வுக்கும் எனது நன்றிகள்’ என பதிவிட்டுள்ளார் காயத்ரி ரகுராம்.
நடிகர் பிரபு சிறுநீரகப் பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் அனுமதி
நடிகர் பிரபு சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள மெட்வே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுளளார். இது தொடர்பாக மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “நடிகர் பிரபு நேற்று (20 பிப் 2023) இரவு சிறுநீரகப் பிரச்சினை காரணமாக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிறுநீரகத்தில் கல் அடைப்பு இருந்தது கண்டறியப்பட்டு, இன்று காலை யூரித்ரோஸ்கோப்பி லேசர் அறுவை சிகிச்சை மூலம் சிறுநீரகக் கற்கள் அகற்றப்பட்டன. அவர் தற்போது பூரண உடல் நலத்துடன் இருக்கிறார். அறுவை சிகிச்சைக்கு பிந்தைய – பொதுவான மருத்துவ சோதனைகளுக்குப் பிறகு, ஓரிரு நாளில் அவர் வீடு திரும்புவார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நைஜீரியாவில் பண மதிப்பிழப்பு நடவடிக்கை: மக்கள் கிளர்ச்சி
நைஜீரியாவில் அரசால் பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அந்நாட்டின் 200 நைரா, 500 நைரா, 1000 நைரா நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நெருக்கடிக்கு தள்ளப்பட்ட மக்கள் தங்களது ரூபாய் நோட்டுகளை பரிமாற்றம் செய்து கொள்ள வங்கிகளில் குவிந்துள்ளனர். எனவே, நாட்டில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. கோபமடைந்த மக்கள் ஏடிஎம் மற்றும் வங்கிகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். சாலைகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அரசின் இந்த அறிவிப்பை எதிர்கட்சியினர் கடுமையாக விமர்சித்துள்ளனர். பணமதிப்பிழப்பு குறித்து நைஜீரியர் ஒருவர் கூறும்போது, “எனது சம்பளம் கடந்த வாரம் வந்தது. ஆனால், இதுவரை என்னால் என் பணத்தை எடுக்க முடியவில்லை” என்றார். பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் நிலவும் குழப்பம், கலவரங்கள் குறித்து அந்நாட்டு அதிபர் புஹாரி கூறும்போது, “திறமையற்ற வங்கிகள் தங்களைப் பற்றி மட்டுமே அக்கறை கொண்டுள்ளன” என்று விமர்சித்துள்ளார்.