இந்தியாவின் மிகப் பெரிய பணக்கார நிறுவனமான ரிலையன்ஸ் குழுமத்தின் வருடாந்திர கூட்டம் நேற்று நடந்தது.
கூட்டத்திலிருந்து கிடைத்த சில முக்கிய சங்கதிகள்:
இன்னும் ஐந்து வருடங்களுக்கு ரிலையன்ஸ் குழுமத் தலைவராக இருப்பார் முகேஷ் அம்பானி.
தனது மகள் இஷா அம்பானி, மகன்கள் ஆகாஷ், ஆனந்த் ஆகியோரை ரிலையன்ஸ் இயக்குநர் குழுவில் இணைத்திருக்கிறார். மனைவி நீட்டா அம்பானி இந்தக் குழுவிலிருந்து விலகியிருக்கிறார்.
ரிலையன்ஸ் குழுமத்தின் தொண்டு நிறுவனங்களை நீட்டா அம்பானி கவனித்துக் கொள்வார்.
செப்டம்பர் 19, விநாயககர் சதுர்த்தி நாளில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ ஏர்ஃபைபர் என்ற புதிய இண்டர்நெட் சேவை அறிமுகப்படுத்தப்படும். இந்த ஹைடெக் சேவை ஒரு நாளில் ஒன்றரை லட்சம் இணைப்புகளைக் கொடுக்கக் கூடிய சக்தி கொண்டது.
ஜியோ நிறுவனம் செயற்கை நுண்ணறிவு துறையிலும் இறங்கப் போகிறது.
கடந்த 10 வருடங்களில் ரிலையன்ஸ் நிறுவனம் 15 லட்சம் கோடி ரூபாயை இந்தியாவில் பல்வேறு தொழில்களில் முதலீடு செய்திருக்கிறது.
இந்த வருடம் அதாவது 2023ல் 2.6 லட்சம் வேலை வாய்ப்புகளை ரிலையன்ஸ் நிறுவனம் உருவாக்கியிருக்கிறது.
ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தின் மதிப்பு மூன்று வருடங்களில் இரண்டு மடங்கு உயர்ந்திருக்கிறது. 2020ல் 4.2 லட்சம் கோடியாக இருந்த வணிகம், 2023ல் 8.2 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறது.
கடந்த ஒரு வருடத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் மொத்த வருவாய் 9.74 லட்சம் கோடி. இதில் வரிகளுக்கு முந்தைய லாபம் 1.5 லட்சம் கோடி. வரிகளுக்குப் பிறக மொத்த லாபம் 73 ஆயிரம் கோடி ரூபாய்.
இப்படி பல புள்ளிவிவரங்களும் தகவல்களும் நேற்று நடந்த கூட்டத்தில் வெளியிடப்பட்டிருக்கின்றன.
ஆனால் இந்த லட்சங்களில் கோடிகளில் லாபம் என்பதெல்லாம் ரிலையன்ஸ்க்கு புதிதல்ல.
இந்தக் கூட்டத்தின் முக்கியமான முடிவு என்றால் தன் வாரிசுகளை ரிலையன்ஸ் குழுமத்தின் இயக்குநர்கள் குழுவில் இணைத்ததுதான்.
ஏற்கனவே முகேஷ் அம்பானியின் வாரிசுகள் மூவரும் தனித் தனியே ரிலையன்ஸ் குழுமத்தின் முக்கிய நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் இருக்கிறார்கள். தொழிலைக் கற்றுக் கொண்டிருக்கிறார்கள். பெரும் லாபத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் ரிலையன்ஸ் நிறுவனத்தின் உச்சமான ஆர்.ஐ.எல். என்றழைக்கப்படும் (Reliance Industries Limited (RIL)) குழுமத்தின் அதிகாரமிக்க பொறுப்புகளுக்கு வந்ததில்லை. இந்த முறை அவர்கள் உள்ளிழுக்கப்பட்டிருக்கிறார்கள்.
முகேஷ் அம்பானிக்கு இப்போது 66 வயதாகிறது. அடுத்த ஐந்து வருடங்களுக்கு அவர்தான் தலைமைப் பொறுப்பு என்பதை கூறி விட்டார். அதாவது 2028 வரை முகேஷ அம்பானிதான் ரிலையன்ஸ் குழுமத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பார்.
முகேஷ் அம்பானியின் தந்தை திருபாய் அம்பானி தனது வாரிசுகளுக்கு சரியான வழிகளைக் காட்டததான் அவர் மறைவுக்குப் பிறகு சொத்த்துக்களைப் பிரிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. அதனால் அண்ணன் முகேஷுக்கும் தம்பி அனிலுக்கும் மோதல் வந்தது. அண்ணன் – தம்பி இருவரும் பல வருடங்கள் பேசாமல் இருந்தார்கள். தனக்கு நடந்த மோசமான சம்பவங்கள் தனது பிள்ளைகளுக்கு நடந்துவிடக் கூடாது என்பதில் முகேஷ் கவனமாக இருக்கிறார் என்பது நேற்றைய நடவடிக்கைகளிலிருந்து தெரிகிறது.
அடுத்த ஐந்து வருடங்கள் ரிலையன்ஸ் குழுமத்தின் முக்கியமான காலக்கட்டமாக இருக்கப் போகிறது.
தொழிலில் சமார்த்தியமாக இயங்கி உச்சம் தொட்ட முகேஷ் அம்பானிக்கு இப்போது ஒரே ஒரு கவலைதான் இருக்க முடியும்.
வாரிசுகளுக்கு ரிலையன்ஸை எப்படி பிரித்துக் கொடுப்பது என்பதுதான் அந்தக் கவலை.