செல்வராகவன் இயக்கத்தில் யுவன்சங்கர் ராஜா இசையில், ரவிகிருஷ்ணா, சோனியா அகர்வால் நடித்த ‘7 ஜி ரெயின்போ காலனி’ படம், 2004-ம் ஆண்டு வெளியானது. அந்த படத்தின் பாடல்களும், வசனங்களும், சீன்களும் இன்றுவரை பேசப்படுகின்றன. இந்நிலையில், 7ஜி ரெயின்போ காலனி2 உருவாகிறது. இதன் படப்பிடிப்பு நடந்து வருவதாக தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் அறிவித்துள்ளளார்.
முதற்பாகத்துக்கும், இரண்டாம் பாகத்துக்கும் என்ன வித்தியாசம், என்று விசாரித்தால், ‘‘முதற்பாகத்தை இயக்கிய செல்வராகவனே 2ம் பாகத்தையும் சத்தமில்லாமல் இயக்கி வருகிறார். மாறுபட்ட கெட்டப்பில் ரவிகிருஷ்ணா நடித்து வருகிறார். முதற்பாகத்தில் சோனியா அகர்வால் இறந்துவிடுவார். அதனால், 2ம்- பாகத்தில் ஹீரோயின் வேறு.அனஸ்வரா ராஜன் ஹீரோயினாக நடிக்கிறார். இவர்களை தவிர, முதற்பாகத்தில் இருந்த ஜெயராம், சுமன்ஷெட்டி, சுதா ஆகியோர் 2ம் பாகத்தில் இருக்கிறார்கள். ராம்ஜி ஒளிப்பதிவு செய்து வருகிறார். சென்னை சுற்று வட்டாரத்தில் பெரும்பாலான காட்சிகள் எடுக்கப்பட்டு விட்டன என்று கோலிவுட் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.
முதற்பாகத்தில் நா.முத்துக்குமார் வரிகளில் பாடல்கள் பெரிய அளவில் ஹிட்டாகின. குறிப்பாக, ‘கண்பேசும் வார்த்தைகள்’, ‘நினைத்து, நினைத்து பார்த்தேன்’, ‘கனா காணும் காலங்கள்’ ஆகிய பாடல் இன்றும் ரசிக்கப்படுகின்றன. அதனால், இப்போது யார் பாடல் எழுதுகிறார்கள். நா.முத்துக்குமார் பாடல் ரீ மிக்ஸ் செய்யப்படுமா என்பதும் சஸ்பென்ஸ் ஆக உள்ளது.
இது குறித்து விரைவில் யுவன் அறிவிப்பு வெளியிட உள்ளார். ஒரு படம் ரிலீஸ் ஆகி, 20 ஆண்டுகள் கழித்து, அந்த படத்தின் அடுத்த பாகம் வெளிவருவது தமிழ்சினிமாவிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.’’ என்கிறார்கள்.
செல்வராகவன் இயக்கிய ‘காதல்கொண்டேன்’, ‘புதுப்பேட்டை’, ‘7 ஜி ரெயின்போ காலனி’, ‘ஆயிரத்தில் ஒருவன்’ ஆகியவை தமிழ் சினிமாவில் முக்கியமான படங்களாக அமைந்தன. புதுப்பேட்டை பார்ட்2 வருமா என்ற கேள்வி அவரிடம் பல ஆண்டுகளாக கேட்கப்படுகிறது. இந்நிலையில், அதை விடுத்து, அவர் 7 ஜி ரெயின்போ காலனி2வை இயக்கிய வருவது குறிப்பிடதக்கது.