No menu items!

ஒரே இரவில் 7 கோள்கள்! வானில் தெரியும் அதிசயம் – எப்படி பார்ப்பது?

ஒரே இரவில் 7 கோள்கள்! வானில் தெரியும் அதிசயம் – எப்படி பார்ப்பது?

வருகின்ற பிப்ரவரி 28-ஆம் தேதி, இரவு வானில் ஏற்கனவே காட்சி தரும் 6 கோள்களுடன் புதன் கோளும் இணையும் உள்ளது. இதனால், ஒரே நாளில் 7 கோள்களும் காட்சி தரும் அதிசய நிகழ்வு அரங்கேற உள்ளது. ஏழு கிரகங்களின் இந்த அபூர்வ காட்சியை எப்படி பார்ப்பது? இதனால் பூமியில் ஏதாவது மாற்றம் நிகழுமா? விரிவாக பார்ப்போம்…

தற்போது தெளிவான இரவு நேரத்தில் வானத்தை பார்த்தால் வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய ஆறு கோள்களும் இரவு வானில் காட்சியளிக்கின்றன. இதனுடன் பிப்ரவரி மாதத்தின் பிற்பகுதியில், அதாவது 28ஆம் தேதி ஒரே ஒரு இரவு மட்டும் இவற்றுடன் புதனும் இணைந்து ஏழு கிரகங்களின் வரிசை வானில் காட்சி தரும் என்று வானியல் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

சூரிய குடும்பத்தின் முக்கிய 8 கோள்களும் சூரியனை வெவ்வேறு வேகத்தில் சுற்றி வருகின்றன. சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் புதன் கோளானது, 88 நாட்களில் ஒரு சுற்றை நிறைவு செய்கிறது. இதனால்தான் புதன் கிரகத்தில் ஒரு ஆண்டு என்பது 88 நாட்கள். பூமி 365 நாட்களில் சூரியனை சுற்றி வருகிறது. பூமியின் ஆண்டு 365 நாட்கள். அதிகபட்சமாக நெப்டியூன் சூரியனை சுற்றிவர 60,190 நாட்கள். அதாவது பூமியின் நாட்களை பொறுத்தவரை சுமார் 165 ஆண்டுகள்.

கோள்கள் வெவ்வேறு வேகத்தில் சுற்றிவருவதால், சில நேரங்களில் அவற்றில் பல, சூரியனின் ஒரே பக்கத்தில் வரிசை கட்டி நிற்பது உண்டு. இதனால்தான், பூமியிலிருந்து காணும் போது இரவு வானில் ஒரே நேரத்தில் பல கிரகங்களை நம்மால் காண முடிகிறது. சில அபூர்வ சந்தர்ப்பங்களில் இரவு வானில், அவை அனைத்தும் ஒரே நேர் கோட்டில் காட்சி தரும். இந்த நிகழ்வு நடப்பதை நாம் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் காணலாம். இவ்விரு மாதங்களில் தெளிவான இரவுகளின் போது புதன் கோளை தவிர மற்ற கோள்கள் அனைத்தையும் காணமுடியும்.

கிரகங்களில் புதன், செவ்வாய், வியாழன், சனி கோள்கள் வெறும் கண்களாலேயே காணக்கூடிய அளவு பிரகாசமாக இருக்கின்றன. அதே நேரம் யுரேனஸ், நெப்டியூனை காண பைனாகுலர் அல்லது டெலஸ்கோப் தேவைப்படும்.

ஆனால், கிரகங்கள் உண்மையில் நேர் கோட்டில் இல்லை. சூரிய மண்டலத்தில் அவற்றின் சுற்றுப்பாதை காரணமாக அவை வானில் அரைவட்ட வடிவில் தென்படும் என்பதே உண்மை.

புதன் கோளையும் மற்ற ஆறு கோள்களுடன் சேர்த்து பார்க்கும் நிகழ்வை கோள்களின் அணிவகுப்பு என்று அழைக்கின்றனர். பிப்ரவரி 28ஆம் தேதி வானிலை ஒத்துழைத்தால் ஏழு கோள்களும் ஒரே நேர் கோட்டில் இருப்பதை காண முடியும். இது பூமியில் இருந்து காண்போருக்கு அற்புதமான காட்சியாகும்.

காண்பதற்கு அற்புதமாக தோன்றும் இதுபோன்ற நிகழ்வுகள் பூமியில் ஏதாவது தாக்கத்தை ஏற்படுத்துமா?

சூரியனைப் பற்றிய விடை தெரியாத கேள்விகளில் ஒன்று – சூரியன் உச்ச செயல்பாடு மற்றும் குறைந்தபட்ச செயல்பாடு என 11 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாறுவதற்கு என்ன காரணம் என்பது. இதற்கு வெள்ளி, பூமி, வியாழன் கோள்களில் ஏற்படும் கூட்டு அலைஈர்ப்பு பதிலாக இருக்கலாம் என்ற கருத்தை முன்வைத்தார் இயற்பியலாளர் ஃபிரான்க் ஸ்டெபானி. ஜெர்மனியின் டிரெஸ்டென்- ரோஸண்டார்ஃப்-பில் உள்ள ஹெல்ம்ஹோல்ட்ஸ்-ஜெண்ட்ரம் ஆய்வு மையத்தில் அவர் பணிபுரிகிறார்.

சூரியன் மீதான ஒவ்வொரு கோளின் அலைஈர்ப்பு மிகவும் குறைவானது என்ற போதிலும், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கோள்கள் சூரியனுடன் ஒரே வரிசையில் இருக்கும் போது, இது சிசிஜி(syzygy) என அறியப்படுகிறது. அவை ஒருங்கிணைந்து நட்சத்திரத்திற்குள் ‘ராஸ்பி வேவ்ஸ்’ எனப்படும் சிறிய சுழற்சிகளை ஏற்படுத்துகின்றன. அதன் மூலம் வானிலை நிகழ்வுகளில் மாற்றங்கள் ஏற்படலாம் என சொல்கிறார் ஸ்டெபானி.

வெள்ளி, பூமி மற்றும் வியாழன் ஆகிய கோள்கள் ஒத்திசைந்து 11.07 ஆண்டுகள் என்ற கால இடைவெளியில் சூரிய ஆற்றல் செயல்பாட்டை ஏற்படுத்தும் என ஸ்டெபானியின் கணக்கீடுகள் காட்டுகின்றன. இது நாம் காணும் சூரிய செயல்பாட்டு சுழற்சியை கிட்டத்தட்ட மிகச்சரியாக ஒத்திருக்கிறது.

இந்த கருத்து சரியானதுதானா என்பதில் அனைவருக்கும் ஒருமித்த கருத்து இல்லை. சூரியனுக்குள் மட்டும் ஏற்கனவே நடந்து கொண்டிருக்கும் நடைமுறைகள் மூலமே சூரிய செயல்பாட்டை விளக்க முடியும் என சில விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

“கோள்கள் சூரிய செயல்பாட்டில் நேரடியாக தாக்கம் செலுத்துகின்றன என்பதற்கு கவனிக்கப்பட்டவரை ஆதாரங்கள் இல்லை” என்கிறார் இது தொடர்பான ஆய்வறிக்கை ஒன்றை 2022ஆம் ஆண்டு வெளியிட்ட ராபர்ட் கேமரன் என்ற விஞ்ஞானி. அவர் ஜெர்மனியின் சூரிய மண்டல ஆய்வுக்கான மேக்ஸ் பிலான்க் நிறுவனத்தில் சூரிய விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...