தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கையினை அதிகரிக்கும் பொருட்டு, மூவலூர் இராமமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளியில் பயின்று கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு, மாதம் ரூ.1,000/ வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. இதற்கான, விண்ணப்பங்கள் கடந்த ஜுலை 10ஆம் தேதி வரை பெறப்பட்டன.
இந்நிலையில், இத்திட்டத்திற்காக நடப்பாண்டுக்கு மட்டும் 698 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி ஒரு ஆண்டுக்கு 6 லட்சம் மாணவிகள் பயனடைவர் எனவும், மாணவிகளின் வங்கி கணக்கில் ஒவ்வொரு மாதமும் 7-ம் தேதி ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆளுநர் மாளிகை அரசியல் பேசும் இடமல்ல – ரஜினி பேச்சுக்கு சிபிஐ (எம்) கண்டனம்
நடிகர் ரஜினிகாந்த், கிண்டி ராஜ் பவனில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை நேற்று சந்தித்து பேசினார். பின்னர், இந்த சந்திப்பு தொடர்பாக போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ரஜினிகாந்த், ஆளுநருடனான சந்திப்பின்போது அரசியல் குறித்து பேசியதாகவும் அதனை வெளியில் கூற முடியாது எனவும் தெரிவித்தார்.
இந்நிலையில், ரஜினி – ஆளுநர் சந்திப்பு தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘தாங்கள் அரசியல் பேசியதாகவும் அந்த அரசியலை ஊடகங்களுக்கு பகிர்ந்துகொள்ள முடியாது எனவும் ரஜினிகாந்த் தெரிவித்து இருப்பது வித்தியாசமாக உள்ளது. ஆளுநர் மாளிகை அரசியல் பேச்சுக்கான கட்சி அலுவலகம் அல்ல. ஆளுநர் ஒரு கட்சியின் பிரதிநிதியாக செயல்படவும் கூடாது. அப்படி இருக்கையில், ஊடகங்களோடு பகிர்ந்து கொள்ள முடியாத அளவுக்கான அரசியலை பேச வேண்டிய அவசியம் ஆளுநருக்கு எதனால் வந்தது. இதன் மூலம் அரசியல் சட்ட விதிக்கு விரோதமான முறையில், ஆளுநர் அலுவலகம் ஒரு அரசியல் கூடமாக மாற்றப்பட்டுள்ளது உறுதியாகிறது. இது தமிழ் நாட்டு மக்கள் நலனுக்கு விரோதமானது. தொடர்ந்து அதிகார வரம்பு மீறியே செயல்படும் ஆளுநரின் இந்த போக்கினை இன்னும் எத்தனை காலம் பொறுத்துக்கொள்ளப் போகிறோம்” என குறிப்பிட்டுள்ளார்.
கோவில் பற்றி தவறான உள்நோக்கத்துடன் எதையும் சொல்லவில்லை: சூரி விளக்கம்
கார்த்தி நடித்துள்ள ‘விருமன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் மதுரையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் சூரி, அகரம் அறக்கட்டளை குறித்து பேசும்போது, ‘ஆயிரம் கோவில் கட்டுவதைவிட, அன்னசத்திரத்தை விட ஒரு மாணவனுக்கு கல்வி வழங்குவது சிறந்தது’ என பேசினார். இதற்கு சில இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்திருந்தன.
இந்நிலையில் தன் பேச்சு தொடர்பாக விளக்கமளித்துள்ள சூரி, ‘நான் எப்போதும் மீனாட்சி அம்மனை குறிப்பிட்டுதான் பேசுவேன். எனக்கு மீனாட்சி அம்மன் மிகவும் பிடிக்கும். நான் நடத்தும் ஹோட்டல்களுக்கு அம்மன் எனதான் பெயர் வைத்துள்ளேன். என்னுடைய பேச்சு தவறாக புரிந்துகொள்ளப்பட்டது. நான் கோவிலுக்கு எதிரானவன் கிடையாது. நான் படிக்காதவன், அதன் முக்கியத்துவம் எனக்கு தெரியும்’ என கூறினார்.
ஆவணங்களை அள்ளிச் சென்றாரா? – டிரம்ப் பங்களாவில் சோதனை
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பின் பங்களாவில் எப்.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். டிரம்ப் அதிபர் பதவியில் இருந்து விலகிய போது வெள்ளை மாளிகையில் இருந்து ஆவணங்களை அள்ளிச் சென்றுள்ளரா என கண்டுபிடிக்க இந்த ஆய்வு நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது ஆய்வு குறித்து கருத்து தெரிவித்துள்ள டிரம்ப், ‘இது தேசத்திற்கு இருண்ட காலமாகும். அமெரிக்க நீதித் துறை தவறாக பயன்படுத்தப்படுகிறது. 2024ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் நான் போட்டியிடுவதை விரும்பாத சில தீவிர இடது ஜனநாயகக் கட்சியினரின் மறைமுக தாக்குதல் இது” என குற்றம்சாட்டி உள்ளார்.
சீனாவுக்கு பதிலடி: போர் பயிற்சி துவங்கிய தைவான்
தைவானை தங்களது நாட்டின் ஒரு அங்கம் என்று கூறி சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இதனிடையே, சீனாவின் கடும் எதிர்ப்பை மீறி அமெரிக்கா பாராளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி அண்மையில் தைவானுக்குச் சென்றார். இதனையடுத்து, சீனா போர் விமானங்களை தைவான் வான் எல்லைக்குள் அனுப்பி மிரட்டல் விடுத்து வருகிறது. இந்நிலையில் அச்சுறுத்தி வரும் சீனாவுக்கு எதிராக தைவானும் ஏவுகணைகளை வீசி போர் பயிற்சியை தொடங்கி உள்ளது.
இந்த போர் ஒத்திகை ஏற்கனவே திட்டமிடப்பட்டதுதான் எனவும், சீனாவுக்கு பதிலடி அல்ல எனவும் தைவான் அரசு விளக்கம் அளித்துள்ளது. ஆனாலும், சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தைவான் ராணுவம் போர் ஒத்திகையில் ஈடுபட்டதால் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.