அரசியலில் காற்று எந்தப் பக்கம் அடிக்கிறதோ, அந்தப் பக்கம் திரும்புவது சில அரசியல்வாதிகளின் வழக்கம். அந்த வகையில் இப்போது மகாராஷ்டிர மாநிலத்தின் அரசியல் சூழலுக்கு ஏற்ப அணி மாறத் தயாராக இருக்கிறார்கள் சில சட்டமன்ற உறுப்பினர்கள். அதனால் அங்கு தேசிய ஜனநாயக கூட்டணியின் மாநில அரசுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா – காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. இதை ஜீரணிக்க முடியாத பாரதிய ஜனதா கட்சி, அந்த கூட்டணியை உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டது. ஒரு கட்டத்தில் அந்த முயற்சிக்கு வெற்றியும் கிடைத்தது. உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சியை ஏக்நாத் ஷிண்டே உடைத்தார். அவர் தலைமையில் பல சட்டமன்ற உறுப்பினர்கள் சிவசேனாவில் இருந்து வெளியேறினர். இதைத்தொடர்ந்து ஏக்நாத் ஷிண்டே மாநில முதல்வராக பொறுப்பேற்க, பாஜகவின் தேவேந்திர ஃபட்நாவிஸ் துணை முதல்வரானார்.
இது முடிந்து சில காலத்துக்கு பிறகு சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியையும் பாஜக உடைத்தது. சரத்பவாரின் நெருங்கிய உறவினரான அஜித் பவார், இக்கட்சியை உடைத்து பாஜகவுடன் இணைந்தார்.
சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவும், அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியும் இணைந்து போட்டியிட்ட்து. இந்த கூட்டணிக்கு மகாயுக்தி என்று பெயர் வைக்கப்பட்டது. மறுபுறம் காங்கிரஸ், சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி, உத்தவ் தாக்கரேவின் சிவசேனா ஆகியவை இணைந்து மகா விகாஸ் அகாடி என்ற பெயரில் கூட்டணியாக போட்டியிட்ட்து. இதில் மகா விகாஸ் அகாடி மொத்தமுள்ள 48 தொகுதிகளில் 30 இடங்களை கைப்பற்றியது. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 18 இடங்கள் மட்டுமே கிடைத்தன.
இந்த தோல்வியைத் தொடர்ந்து மகா விகாஸ் அகாடியில் இருந்து வெளியேறிய சுமார் 40 சட்டமன்ற உறுப்பினர்கள், தங்கள் தாய்க் கட்சிக்கு வர பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக காங்கிரஸ் எம்எல்ஏவும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான விஜய் வடேட்டிவார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள விஜய் வடேட்டிவார், “நாடாளுமன்ற தேர்தலில் கிடைத்த வாக்குகளை வைத்துப் பார்த்தால், மகாராஷ்டிராவில் இப்போது சட்டமன்ற தேர்தல் நடந்தால் மகா விகாஸ் அகாடி மொத்தமுள்ள 288 தொகுதிகளில் 150 தொகுதிகளுக்கு மேல் முன்னிலை பெற்றுள்ளது. இந்த சூழலில் சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளில் இருந்து பிரிந்து சென்ற சட்டமன்ற உறுப்பினர்களில் சுமார் 40 பேர் மீண்டும் தாய்க்கட்சிக்கு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளனர். இதனால் மகாராஷ்டிர மாநிலத்தில் எங்கள் மகா விகாஸ் அகாடி கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளது” என்று கூறியுள்ளார்.