சுசீந்திரன் இயக்கத்தில் ஜெகவீர், மீனாட்சிகோவிந்தராஜன், பாலசரவணன் நடிக்க, பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினத்தன்று வெளியாக உள்ளது ‘2 கே லவ் ஸ்டோரி.’. இமான் இசையமைத்துள்ளார். சென்னையில் நடந்த இந்த படவிழாவில் பேசிய இமான், ‘இது, சுசீந்திரனுடன் இணையும் 9 படம். எங்கள் கூட்டணியில் பல பாடல்கள் ஹிட். எனக்கும் இது ஸ்பெஷலான படம். காரணம், சொந்தமாக ஆடியோ கம்பெனி தொடங்கி, இந்த பட பாடல்களை வெளியிடுகிறேன். யுகபாரதி, கார்த்திக்நேத்தா பாடல் எழுதியுள்ளனர்.
தலைப்பிற்கு ஏற்ப, இளமையாக இந்த கதை உருவாகி உள்ளது. நானும், சுசீந்திரனும் இணைந்து 9 படங்கள் பண்ணியிருந்தாலும், ஒவ்வொரு படமும் வித்தியாசம். ஒவ்வொரு பாடலும் புதுமையாக இருக்கும். அதனால்தான் எங்கள் கூட்டணி வெற்றி பெறுகிறது. இதில் பாலசரவணன் அருமையாக நடித்துள்ளார். அவருக்கே போன் செய்து பாராட்டினேன்’’ என்றார்.
படம் குறித்து பேசிய சுசீந்திரன் ‘‘கடந்த ஆண்டு பிரேமலு என்ற படம் தமிழகத்தில் வெளியானது. முதலில் அது பற்றி யாருக்கும் தெரியவில்லை. படம் பின்னர் பெரிய வெற்றி பெற்றது. அந்த மாதிரி 2கே லவ் ஸ்டோரியும் வெற்றி பெறும். வெட்டிங் போட்டோகிராபி எடுக்கும் ஒரு இளைஞர் குழுவில் என்ன நடக்கிறது’ என்பதுதான் படத்தின் கதை’’ என்றார்.