சிலை கடத்தல் மன்னன் தீனதயாளனுக்கு உதவியதாக முன்னாள் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் மீது 13 பிரிவுகளில் சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.
அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆளடிப்பட்டி கிராமத்தில் ஆரோக்கியராஜ் என்பவரின் வீட்டில் கடந்த 2008 ஆம் ஆண்டு அஸ்திவாரம் அமைக்கும் பணியின்போது 6 சிலைகள் கிடைத்துள்ளன. இந்த சிலைகளைக் கைப்பற்றிய சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் காதர்பாட்ஷா, சுப்பராஜ் ஆகியோர் சிலைக்கடத்தல் வழக்குகளில் தொடர்புடைய தீனதயாளனின் உதவியோடு, சிலைகளை விற்று பணத்தை எடுத்துக் கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
சிலையைக் கடத்தி விற்பனை செய்த குற்றச்சாட்டுக்கு ஆளான டிஎஸ்பி காதர் பாட்ஷா, கோயம்பேடு சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்புராஜ் ஆகியோர் கடந்த 2017ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டனர். முன்னதாக 2017ஆம் ஆண்டு ஜூன் 29 -ஆம் தேதி காதர் பாட்ஷா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். தொடர்ந்து நெல்லையில் பழம்பெரும் கோயில் சிலைகள் வெளிநாடுகளில் விற்கப்பட்ட சம்பவத்தில் டி.எஸ்.பி காதர் பாட்ஷாவுக்கு தொடர்பிருப்பதாகக் கண்டறியப்பட்டதை அடுத்து அவர் மீண்டும் 2019ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் காதர் பாஷா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் பழிவாங்கும் நோக்கில் தனக்கு எதிராகப் பொய் வழக்குப் பதிவு செய்த சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேலுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யக் கோரினார். மேலும் அவர் மனுவில், பழவூர் சிலைக் கடத்தல் வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான தீனதயாளனை தப்பிக்க வைப்பதற்காக, அவருடன் கூட்டு சேர்ந்து அதிகார ரீதியில் தன்னை பழிவாங்கும் நோக்கிலும் தனக்கு எதிராகப் பொய் வழக்குப்பதிவு செய்ததாகவும், ஜாமீனில் விடுதலையான தன்னை மற்றொரு பொய் வழக்கில் சட்டவிரோதமாகக் கைது செய்து சிறையில் அடைத்ததாகவும் குற்றம்சாட்டினார்.
உயர் நீதிமன்றத்தையும், சிறப்பு நீதிமன்றத்தையும் தவறாகப் பயன்படுத்திய பொன்.மாணிக்கவேல் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உள்துறை செயலாளருக்கும், டி.ஜி.பிக்கும் தான் மனு அளித்ததாகவும், இதுவரை நடவடிக்கை எடுக்காததால் தன் புகாரின் அடிப்படையில் பொன்.மாணிக்கவேல் மீது சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், ஓய்வுபெற்ற ஜ.ஜி பொன்.மாணிக்கவேல் மீதான புகார் மீது சிபிஐ விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க கடந்த ஜூலை மாதம் உத்தரவிட்டுள்ளனர். இதனை அடுத்து டெல்லி சிபிஐ சிறப்புக் குற்றப் பிரிவு, கடந்த 2017 ஆம் ஆண்டு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஓய்வு பெற்ற டி.எஸ்.பி காதர் பாட்ஷா மற்றும் காவலர் சுப்புராஜ் மீது போடப்பட்ட வழக்கை அடிப்படையாக வைத்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி டி.ஐ.ஜி லவ்லி காட்டியார் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
ஓய்வு பெற்ற ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் மற்றும் ஓய்வு பெற்ற டி.எஸ்.பி காதர்பாட்ஷா இருவரில் யார் குற்றவாளிகள் என்பதைக் கண்டறிந்து அறிக்கை தாக்கல் செய்யும்படி ஐகோர்ட் உத்தரவிட்ட நிலையில், காதர் பாட்ஷா, சுப்புராஜ் மற்றும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தத் திட்டமிட்டனர்.
இந்நிலையில் ஓய்வு பெற்ற ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் இல்லத்தில் கடந்த 10ஆம் தேதி சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த வழக்கு தொடர்பாக ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி பொன்.மாணிக்கவேலிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். சென்னை பாலவாக்கத்தில் உள்ள பொன் மாணிக்கவேல் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் ஆகஸ்ட் 10 காலை முதல் சுமார் 7 மணி நேரம் சோதனை நடத்தினர். அப்போது ஏராளமான ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படும் நிலையில் இதுதொடர்பாக பொன்.மாணிக்கவேலுவிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
அதனையடுத்து சிலை கடத்தல் மன்னன் தீனதயாளனுக்கு உதவியதாக பொன்மாணிக்கவேல் மீது 13 பிரிவுகளில் சிபிஐ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
குற்றச்சதி (120பி), அரசு ஊழியர் சட்டத்துக்கு கீழ்படியாமல் நடத்தல் (166), மற்றவருக்கு தீங்கு விளைவிக்கும் என்று தெரிந்து சட்டத்துக்கு கீழ்படியாமல் நடத்தல் (166ஏ), உள்நோக்கத்துடன் பொய்யான ஆவணங்களை தயாரித்தல் (167), தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி தொல்லை தருதல் (182), உள்நோக்கத்துடன் பொய் சாட்சியம் அளித்தல் (193), மற்றவர்களின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்தல் (195ஏ),ல் பொய்யான சாட்சியத்தை பயன்படுத்துதல் (196), அரசு ஊழியர் பொய்யான வாக்குமலம் அளித்தல் (199), பொய்யென தெரிந்தே தகவலை தெரிவித்தல் (203), ஒருவருக்கு துன்பம் உண்டாக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் அவர் மீது குற்றஞ்சாட்டி நடவடிக்கை எடுத்தல் (211), அரசு ஊழியர் ஒருவர் தவறான பதிவேட்டை பயன்படுத்துதல் (218), மிரட்டல்(506) ஆகிய 13 பிரிவுகளில் சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.
இதற்கிடையே சிபிஐ சோதனைக்கு பின்னர் பொன் மாணிக்கவேல் அளித்த பேட்டியில், “என் மேலே ஓராயிரம் வழக்குகள் உள்ளன. நான் சாகும்வரை என்னை விசாரித்து கொண்டே இருப்பார்கள்” என்றவர், நாளை செய்தியாளர்களை சந்திக்க இருப்பதாகவும், அப்போது அனைவரையும் தூக்கி வாரி போடும் வகையில் முக்கியமான தகவல் தெரிவிப்பேன் என்றும் கூறியிருந்தார்.
ஆனால், வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் இதுவரை பொன்மாணிக்கவேல் செய்தியாளர்களை சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.