பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 2019-ம் ஆண்டு, பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறியப் பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவதாக அறிவித்து, 103-வது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தை கொண்டுவந்தது. ஆனால், பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கும்முறை அரசியலமைப்பில் இல்லை என்று கூறி யூத் ஃபார் ஈகுவாலிட்டி என்ற அமைப்பு, அரசியல் கட்சிகள், தனிநபர்கள் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.
பல்வேறு உயர்நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றத்திற்கு மாற்றம் செய்து, தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதிகள் ரவீந்திர பட், தினேஷ் மகேஷ்வரி, எஸ்.பி.பர்திவாலா, பெல்லா த்ரிவேதி உள்ளிட்ட 5 பேர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரணை மேற்கொண்டது. யூத் ஃபார் ஈகுவாலிட்டி, தமிழ் நாடு, கேரளா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநில அரசுகள், திமுக, விசிக, உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தரப்பில் வாத, பிரதிவாதங்கள் முன்வைக்கப்பட்டன. வாதங்கள் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதில் 4 தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. 3 நீதிபதிகள் 10% இடஒதுக்கீடுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். தினேஷ் மகேஷ்வரி, எஸ்.பி.பர்திவாலா, பெல்லா த்ரிவேதி ஆகிய 4 பேர் ஆதரவு தெரிவித்த நிலையில் நீதிபதி ரவீந்திர பட் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். நீதிபதி ரவீந்திர பட் தீர்ப்பிற்கு தலைமை நீதிபதி யு.யு.லலித் ஆதரவு தெரிவித்தார்.
கலைத்தாய் பெற்றெடுத்த பெருங்கலைஞன்: கமலுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து
நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசனுக்கு இன்று 68-வது பிறந்த நாள். இதையொட்டி இன்று மக்கள் நீதிமய்யம் கட்சியினர் தமிழ்நாடு முழுவதும் நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சமூக வலைத்தளத்தில் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “தீராக் கலை தாகத்துடன் தன்னை இன்னும் இன்னும் பண்படுத்தி மிளிரும் சீரிளம் கலைஞானியும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான அன்புத்தோழர் கமல் ஹாசனுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலைத்தாய் பெற்றெடுத்த வருங்கலைஞனே வாழிய நின் கலைத்திறம்” என்று பதிவிட்டுள்ளார்.
உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழ்நாட்டில் 14ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு
இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”இலங்கை கடல் பகுதியை ஒட்டி தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வரும் 9ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இது அடுத்த 48 மணி நேரத்தில் வடக்கு, வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்கரை பகுதியை நோக்கி வலுவடைந்து நகரக்கூடும். இது நன்கமைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும். புயலாக வலுப்பெறுவது குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக 11ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். அதே போல 12ஆம் தேதி தொடங்கி 14ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் பரவலாக மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ. 15938 கோடி ரொக்கம், 10 டன் தங்கம்: வங்கிகளில் திருப்பதி தேவஸ்தானம் டெபாசிட்
திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர்கள் செலுத்தும் காணிக்கை, வங்கி டெபாசிட் தொடர்பாக திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி. சுப்பாரெட்டி வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ‘கடந்த செப்டம்பர் 30-ம் தேதி நிலவரப்படி, பாரத ஸ்டேட் வங்கியில் ரூ.5,358 கோடியே 11 லட்சம், யூனியன் வங்கியில் ரூ.1,694 கோடியே 25 லட்சம், பாங்க் ஆஃப் பரோடாவில் ரூ.1,839 கோடியே 36 லட்சம், எச்டிஎஃப்சி வங்கியில் ரூ.2,122 கோடியே 85 லட்சம், கனரா வங்கியில் ரூ.1,351 கோடி என 24 வங்கிகளில் திருப்பதி தேவஸ்தானம் உண்டியல் மூலம் வரும் பணத்தை டெபாசிட் செய்துள்ளது.
இதேபோன்று, பக்தர்கள் வழங்கும் தங்க நகைகளை உருக்கி, 24 காரட் தங்கமாக மாற்றி, பின்னர் அதனை அதிக வட்டி விகிதம் உள்ள வங்கிகளில் டெபாசிட் செய்கிறது. அதன்படி, கடந்த செப்டம்பர் மாதம் 30-ம் தேதி நிலவரப்படி, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில் 9,819.38 கிலோ தங்கமும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 438.99 கிலோ தங்கமும் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இதற்கு வட்டியாக தங்கத்தையே தேவஸ்தானம் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
மொத்தமாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் இதுவரை ரூ.15,938 கோடியே 68 லட்சம் ரொக்கம், 10 டன் தங்கத்தை வங்கிகளில் டெபாசிட் செய்துள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.