ஏர் இந்தியா 32 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் டாடா நிறுவனத்திடம் வந்திருக்கிறது. அதன் தலைவர் பதவி இப்போது சந்திரசேகரனிடம் வந்திருக்கிறது. விமானப் போக்குவரத்து துறை கடுமையான நஷ்டங்களை சந்தித்துக் கொண்டிருக்கும் சூழலில் ஏர் இந்தியாவை கையிலெடுத்திருக்கிறார் இந்த சாதனைத் தமிழர்.
ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள பள்ளிக்கு செல்லக்கூட ஆட்டோ, வேன் போன்ற வாகனங்களை மாணவர்கள் இப்போது பயன்படுத்துகிறார்கள். ஆனால் 1960-களில் தினமும் 3 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று தமிழ் மீடியத்தில் படித்த மாணவர்தான் இன்றைக்கு 10 லட்சம் கோடி மதிப்புள்ள டாடா குழுமத்தின் தலைவர் பதவையை அலங்கரிக்கும் நடராஜன் சந்திரசேகரன். இப்போது டாடா குழுமத்தின் தலைவர் பதவியுடன் ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைவர் பொறுப்பும் அவரைத் தேடி வந்துள்ளது.
தமிழகத்தில் உள்ள மோகனூரில் 1963-ம் ஆண்டு பிறந்தவர் சந்திரசேகரன். அப்பா வழக்கறிஞர். சந்திரசேகரனின் பெற்றோருக்கு அவரையும் சேர்த்து 6 குழந்தைகள். சந்திரசேகரனின் தாத்தா இறந்த பிறகு, அவர்களது குடும்பத் தொழிலான விவசாயத்தில் ஈடுபட வேண்டி வந்தது. ஆனாலும் சந்திரசேகரன் படிப்பைத் தொடர்ந்தார்.
கிராமத்தில் 10-ம் வகுப்புவரை படிப்பு. பிறகு கோயம்புத்தூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலாஜி கல்லூரியில் இளங்கலை படிப்பு. கல்லூரி காலம் முடிந்து சொந்த ஊருக்கு வந்தவருக்கு விவசாயத்தின் மீது ஆர்வம் வந்தது. விவசாயத்தில் ஈடுபடலாமா என்று யோசித்தார். அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார். விவசாய அனுபவம் அவருக்கு ஒரு திருப்பு முனை. சுமார் 6 மாத காலம் அங்கு இருந்த பிறகு தனக்கும் விவசாயத்துக்கும் சரிப்பட்டு வராது என்பதைக் கண்டுபிடித்தார். இதைத் தொடர்ந்து திருச்சி ஆர்.இ.சியில் எம்சிஏ.
1987-ல் ஒரு சாதாரண கம்ப்யூட்டர் புரோக்ராமராகத்தான் டாடா கன்சல்டன்ஸி நிறுவனத்தில் சந்திரசேகரன் சேர்ந்தார். 22 வருடங்களுக்குப் பிறகு அவரது திறமை மற்றும் கடும் உழைப்பினால் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் 2009-ல் தலைமைப் பதவிக்கு உயர்ந்தார்.
சந்திரசேகரன் தலைவராக இருந்த 2015-15 ஆண்டுகளில் டிசிஎஸ் நிறுவனத்தின் வருவாய் 16.5 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்தது. உலகின் 4 மிகப்பெரிய ஐடி நிறுவனங்களில் ஒன்றாக டிசிஎஸ் உருவெடுத்தது.
இந்தச் சூழலில் மற்றொரு திருப்பு முனை. டாடா குடும்பத்தினருக்கும் – டாடா குழுமத்தின் தலைவராக இருந்த சைரஸ் மிஸ்ட்ரிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து 2017-ம் ஆண்டில் தலைவர் பதவியில் இருந்து மிஸ்ட்ரி நீக்கப்பட, டாடா குழுமத்தின் தலைவர் பொறுப்பு சந்திரசேகரனுக்கு வழங்கப்பட்டது. இந்திய கார்ப்பரேட் உலகில் மிக முக்கியமான பதவி.
டாடா நிறுவனத்தின் தலைவராக சந்திரசேகரன் பொறுப்பேற்றபோது டாடா நிறுவனம் மிக மோசமான நிலையில் இருந்தது. மிஸ்ட்ரிக்கும் குழுமத்தின் உரிமையாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் டாடாவின் இமேஜ் அதலபாதாளத்தில் சரிந்திருந்தது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் செயல்பாடும் சொல்லக்கூடிய நிலையில் இல்லை. நஷ்டத்தை நோக்கி அது சென்றுகொண்டு இருந்தது. டாடா டெலிகாம் நிறுவனமோ ஐரோப்பிய நாடுகளுடன் முரண்பட்டுக் கிடந்தது. டாடா மின்சக்தி நிறுவனமும் கடனில் மூழ்கிக் கிடந்தது.
பதவியேற்ற சில நாட்களிலேயே இந்த சிக்கல்களில் இருந்து டாடா நிறுவனத்தை கொஞ்சம் கொஞ்சமாக மீட்டார் சந்திரசேகரன்.
அவர் எடுத்த முக்கியமான முடிவுகளில் ஒன்று பல்லாயிரம் கோடி நஷ்டத்தை கொடுத்துக் கொண்டிருந்த டாடா டெலி கம்யூனிகஷேன் நிறுவனத்தை ஏர்டெல்லிடம் விற்றது. இது டாடா நிறுவனத்தின் பெரிய நஷ்டத்தை நிறுத்தியது.
தொடர்ந்து அவர் எடுத்த முடிவுகள் டாடா நிறுவனத்தை சரிவுகளிலிருந்து சமாளித்து சாதனைப் பாதைக்கு திருப்பியது. அமேசான், ரிலையன்ஸ் நிறுவனங்களுக்குப் போட்டியாக டாடாவின் ‘பிக் பாஸ்கெட்’ நிறுவனத்தை வளர்த்தெடுத்தார். கரோனா காலகட்டத்தில் டாடா நிறுவனத்தின் லாபத்தை அதிகரித்தார்; டெலிகாம் மற்றும் மின்சக்தி துறையிலும் டாடா நிறுவனத்தை மீண்டுவரச் செய்தார். இப்படி பல்வேறு வழிகளில் டாடா நிறுவனத்தை ‘பழைய பன்னீர்செல்வமாய்’ மாற்றிய சந்திரசேகரனுக்கு இந்திய தொழில் துறையில் ஆற்றிய பணிகளுக்காக மத்திய அரசு பத்ம பூஷண் விருதை வழங்கி கவுரவித்தது.
டாடா நிறுவனத்தில் சந்திரசேகரனின் பதவிக்காலம் கடந்த மாதம் முடிவடைந்த நிலையில் அதை மேலும் 5 ஆண்டுகளுக்கு அந்நிறுவனம் நீட்டித்துள்ளது. அத்துடன் டாடா நிறுவனத்துக்கு அவர் மீட்டுக் கொண்டுவந்த ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைவர் பொறுப்பையும் கூடுதலாக வழங்கியுள்ளது.
சந்திரசேகரனின் வெற்றிகளுக்கு அவரது ஓட்டமும் ஒரு காரணம்.
அவருக்கு ஓடப் பிடிக்கும். சொந்த ஊரான மோகனூரோ நியூயார்க்கோ, சென்னையோ மும்பையோ… எந்த ஊராக இருந்தாலும் சரி. தினமும் காலை 5 மணிக்கு எழுந்து நீண்டதூரம் ஓடுவார். தடைகளைப் பற்றியெல்லாம் கவலைப்படுவதே இல்லை. இதனாலேயே அவருக்கு மாரத்தான் மனிதர் என்ற பட்டப் பெயரும் உள்ளது.
வார்த்தகத்திலும் இந்த தடைகளை வெல்ல, ஓட்டத்தின்போது தான் கற்ற பாடங்களையே பயன்படுத்துகிறார் சந்திரசேகரன்.
டாடா நிறுவனத்தின் ஊழியர் கூட்டமொன்றில் இதுபற்றிக் கூறியுள்ள சந்திரசேகரன், “ஒருவரது வளர்ச்சியில், அவரது தனிப்பட்ட ஆற்றலும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒருவர் மாரத்தான் போட்டியில் பங்கெடுப்பதற்காக சுமார் 6 மாதங்கள் கடும் பயிற்சியை மேற்கொள்ளலாம். ஆனால், போட்டி நாளில் மழை, சீதோஷ்ண நிலை, போட்டி நடக்கும் இடத்தின் தன்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் போட்டியின் முடிவு மாறும். அதனால் முடிவுகளைப் பற்றி கவலைப்படாமல் நமது ஆற்றலை மேம்படுத்துவதில்தான் நாம் நமது திறமையைக் காட்டவேண்டும்” என்கிறார்.
‘ஏர் இந்தியா’ நிறுவனத்தை டாடா மீண்டும் கைப்பற்றுவதில் சந்திரசேகரன் முக்கிய சக்தியாக இருந்தார்.
32 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஏர் இந்தியா நிறுவனம் டாடா நிறுவனத்திடம் வந்திருக்கிறது. ரத்தன் டாட்டா இருந்த பொறுப்பு இப்போது சந்திரசேகரனிடம் வந்திருக்கிறது. விமானப் போக்குவரத்து துறை கடுமையான நஷ்டங்களை சந்தித்துக் கொண்டிருக்கும் சூழலில் ஏர் இந்தியாவை கையிலெடுத்திருக்கிறார் இந்த சாதனைத் தமிழர்.
சாதிப்பாரா சந்திரசேகரன் என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழுகிறது. சாதிப்பார் என்றே அவரது கடந்த கால சரித்திரம் பதில் கூறுகிறது.