No menu items!

வாவ் ஃபங்க்ஷன்: சர்ச்சையை ஏற்படுத்திய ‘கூகுள் குட்டப்பா’

வாவ் ஃபங்க்ஷன்: சர்ச்சையை ஏற்படுத்திய ‘கூகுள் குட்டப்பா’

திருமண வீடுகளில் ஏற்படும் சில சச்சரவுகளைப் போல சில சினிமா நிகழ்ச்சிகளிலும் அவ்வப்போது சர்ச்சைகள் ஏற்படும். அப்படி ஒரு சர்ச்சையை ‘கூகுள் குட்டப்பா’ படத்தின் ஃபங்ஷன் ஏற்படுத்தியது.

சுவாரஸ்யம், கொண்டாட்டம், சர்ச்சை இப்படி பல்வேறு அம்சங்களைக் கொண்ட ‘கூகுள் குட்டப்பா’ படத்தின் ஃபங்ஷனில் நடந்த விஷயங்களை தெரிந்துகொள்வோம்.

கே.எஸ். ரவிக்குமார், தர்ஷன், லொஸ்லியா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘கூகுள் குட்டப்பா’ படத்தின் முன்னோட்ட வெளியீடு சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் படக்குழுவினருடன் இயக்குநர்கள் விக்ரமன், ஆர்.கே.செல்வமணி, ஆர்.வி.உதயகுமார், பேரரசு, கவுரவ் நாராயணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

லொஸ்லியா என்னை பாராட்டி இருக்காங்கப்பா! – ரோபோவுடன் கே.எஸ். ரவிக்குமார்

‘கூகுள் குட்டப்பா’ படத்தின் முன்னோட்டத்தை இயக்குநர்கள் விக்ரமன், ஆர்.கே. செல்வமணி, ஆர்.வி. உதயகுமார் பேரரசு ஆகியோர் வெளியிட, படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள ரோபோ பெற்றுக்கொண்டது.

கமலால் தயாரிப்பாளர் ஆனேன்

இந்நிகழ்ச்சியில் பேசிய கே.எஸ்.ரவிக்குமார், “இயக்குநராக, நடிகராக இருந்த என்னை ‘உலகநாயகன்’ கமல்ஹாசன்தான் ‘தெனாலி’ படத்தின் மூலம் தயாரிப்பாளராக்கினார். இதற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பெரிதும் உதவி செய்தார். 20 ஆண்டுகளுக்குப் பிறகு ‘கூகுள் குட்டப்பா’ படத்தை தயாரித்திருக்கிறேன். ‘கூகுள் குட்டப்பா‘ படத்தை தொடர்ந்து அறிமுக இயக்குநர் அரவிந்த் இயக்கத்தில், விக்ரமனின் வாரிசு கனிஷ்கா நாயகனாக அறிமுகமாகும் படத்தை தயாரிக்கிறேன். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏப்ரலில் வெளியாகும்” என்றார்.

படத்தின் இயக்குநர்கள் சபரி கிரிசன் மற்றும் சரவணன் பேசும்போது, “நானும் சரவணனும் நண்பர்கள். ஒரே அலைவரிசையில் சிந்திக்கக்கூடிய தோழர்கள். அதனால் இணைந்து ஒரு படத்தை இயக்குவோம் என தீர்மானித்தோம். நாங்கள் இருவரும் ‘ஆண்ட்ராய்ட் குஞ்சப்பன்’ படத்தைப் பார்த்தபோது உண்மையில் வியந்தோம். இதனை தமிழில் ரீமேக் செய்யத் தீர்மானித்தோம். அதில் முதியவர் வேடத்தில் யாரை நடிக்க வைப்பது என்று யோசித்தபோது, சட்டென்று எங்களுடைய குருநாதர் கே.எஸ். ரவிக்குமார் நினைவுக்கு வர, அவர் முன் நின்றோம். தமிழுக்காக என்னென்ன மாற்றங்கள் செய்து இருக்கிறீர்கள்? என கேட்டபோது, நாங்கள் செய்த மாற்றங்கள் குறித்து விவரித்தோம். உடனடியாக படத்தை நானே தயாரிக்கிறேன் என்று கூறிவிட்டார். அப்படித்தான் ‘கூகுள் குட்டப்பா’ தயாரானது” என்றனர்.

நடிகை லொஸ்லியா பேசும்போது, “கே.எஸ்.ரவிக்குமார் இயக்குநர், நடிகர் என்பதை கடந்து அற்புதமான மனிதர் என்பதை படப்பிடிப்பு தளங்களில் உணர்ந்திருக்கிறேன். அவருடன் திரையில் தோன்றும் வாய்ப்பு பெற்றதை பாக்கியமாக கருதுகிறேன்” என்றார்.‌

வைரமுத்து வாழ்த்தினார்

பாடலாசிரியர் மதன் கார்க்கி பேசும்போது, “இலக்கணத்தில் இயந்திரம் ஒரு அஃறிணை பொருள். ஆனால், இந்த படத்தில் அது ஒரு உயிருள்ள பொருளாக இடம்பெற்றிருக்கும். இதனை பாடல் வரிகளில் ‘… இதனை இனிமேல் இவன் என்பாயோ…’ என குறிப்பிட்டிருக்கிறேன். இதனை காட்சிப்படுத்தியிருக்கும் விதமும் ஜிப்ரானின் இசையும் உயிர்ப்புள்ளதாக இருக்கும். மேலும் இந்தப் படத்தில் எழுதிய ‘ஈழத்து பூங்காற்றே..’ என்ற பாடல் வரிகளுக்காக கவிப்பேரரசு வைரமுத்து என்னை அழைத்து பாராட்டினார்” என்றார்.

என்னைப் பற்றி மேட்டர் இல்லை; படம் மட்டும்தான் – மனோபாலா

இயக்குநர் தங்கர்பச்சான் பேசும்போது, “அண்மைக்காலத்தில் நான் ரசித்துப் பார்த்த சில மலையாளப் படங்களில் ‘ஆண்ட்ராய்ட் குஞ்சப்பனு’ம் ஒன்று. உலகமயமாக்கலுக்கு பிறகு மனிதர்கள் எப்போதும் இயந்திரத்துடன் தான் இருக்கிறார்கள். தங்களது வாழ்க்கையை தொலைத்துவிட்ட மனிதர்கள், அதனை இயந்திரத்தின் மூலமாக தேடத் தொடங்கி இருக்கிறார்கள். இந்தப் படத்தில் கே.எஸ். ரவிக்குமார் ஏற்றிருக்கும் கதாபாத்திரம் மிகவும் நுட்பமானது. மனித உணர்வுகளை தீண்டாத எந்த திரைப்படங்களும் வெற்றி பெற்றதில்லை. அதற்கான கரு இந்த படத்தில் இருப்பதால், மிகப்பெரிய வெற்றியை பெறும்” என்றார்.

ஆர்.வி. உதயகுமாரை மதிக்காமல் சென்ற இளம் இயக்குநர் யார் தெரியுமா? – தர்ஷன், லொஸ்லியா

மரியாதை அளிப்பதில்லை!

இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசும்போது, “இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் இன்றுவரை அவருடைய குருநாதரான விக்கிரமனுக்கு உரிய மரியாதையை அளித்து வருகிறார். அவரும் அவருடைய சீடர்களும் இன்றளவிலும் குருவிற்கு அளித்துவரும் மரியாதை, அவர்களுக்கு வெற்றியை தேடித்தரும். ஆனால், இன்றைய சூழலில் இளம் இயக்குநர்கள் யாரும் மூத்த இயக்குநர்களுக்கு மரியாதை அளிப்பதில்லை. அண்மையில் ஒரு இளம் இயக்குநரின் படைப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படத்தை பார்வையிட்டு, படம் நிறைவடைந்த பின் அந்த இளம் இயக்குநருக்காக காத்திருந்து, அவரிடம் பாராட்டை தெரிவித்தபோது, அவர் மிக எளிதாக ஒரே வார்த்தையில் பதிலளித்து கடந்து சென்றுவிட்டார்.

இன்றைக்கு கன்டென்ட்தான் வெற்றி பெறும். இயக்குநர் சங்கத்திற்கு தலைவராகத் தேர்வாகியுள்ள ஆர்.கே. செல்வமணி, இயக்குநர் சங்கத்தில் உள்ள திறமையான இயக்குநர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் நல்லதொரு திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறார். இந்தத் திட்டத்தில் 300 உதவி இயக்குநர்கள் பங்களித்து, அருமையான கதைகளை அளித்திருக்கிறார்கள். இந்தத் தருணத்தில் தயாரிப்பாளர்களுக்கு ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறேன். நீங்கள் படங்களைத் தயாரிக்க வேண்டுமென்றால், எங்கள் சங்கத்தை அணுகி புதிய கதைகளை கேளுங்கள். அதில் உங்களுக்கு பிடித்த கதையை படமாக தயாரிக்கலாம்” என்றார்.

அப்பாவின் சைக்கிள்

எனக்கு மட்டும் தெரிந்த சூர்யா – ஜோதிகா காதல் கதை சொல்லட்டுமா? – ரமேஷ் கண்ணா

ஆர்.கே. செல்வமணி பேசும்போது, “மனிதர்கள் எப்போதும் அன்பு செலுத்துவதற்கு தயாராகவே இருக்கிறார்கள். என்னுடைய தந்தையார் 50 ஆண்டு காலமாக ஒரே சைக்கிளை வைத்திருந்தார். நான் இயக்குநராக வெற்றி பெற்று பத்துக்கும் மேற்பட்ட கார்களை வாங்கினாலும், அவர் சைக்கிளில் செல்வதை விடவில்லை. இது தொடர்பாக அவரிடம் கேட்டபோது,‘சைக்கிளை நான் 50 வருடமாக வைத்திருக்கிறேன். அதன் மீது இனம் புரியாத பாசம் ஒன்று இருக்கிறது. ஈ.டி. என்ற ஒரு படம் வந்த போது, அதன் அறிமுகத்தை, தோற்றத்தை எந்த ரசிகரும் விரும்பவில்லை. என்றாலும், ஈ.டி பூமியிலிருந்து விடைபெற்று செல்லும் காட்சியில், அனைவரின் கண்களிலும் கண்ணீர் வந்தது. அதுதான் மனிதன்.

தயாரிப்பாளர் கே.எஸ். ரவிக்குமார் உதவி இயக்குநராக இருந்த காலகட்டத்திலிருந்து, 30 ஆண்டுகளுக்கும் மேலாக அவரை தெரியும். அப்போதும் அவர் உதவி இயக்குநர்களுக்கு உதவியாக இருந்தார். தற்போது அவர்களுக்கு பட வாய்ப்பு அளித்து வாழ்க்கையை வழங்கியிருக்கிறார். இயக்குநர் சங்கத்திற்காக எப்போதெல்லாம் நிதி உதவி தேவைப்படுகிறதோ அப்போதெல்லாம் அவராகவே நன்கொடை வழங்கி விடுவார். அவருடைய நல்ல மனதிற்கும் தரமான படைப்புகளை வழங்குவதில் அவருடைய ஈடுபாட்டிற்கும் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெறும்” என்றார்.

இந்நிகழ்ச்சியில் இளம் இயக்குநர்கள், மூத்த இயக்குநர்களை மதிப்பதில்லை என்ற ஆர்.வி. உதயகுமாரின் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அவரை மதிக்காமல் சென்ற இளம் இயக்குநர் யார் என்ற கேள்வியையும் ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...