தமிழகத்தில் 6 ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் ஜூன் 10-ம் தேதி நடக்கும்னு அறிவிச்சிருக்காங்க. அந்த 6 இடங்கள்ல யார் நிக்கப் போறாங்கக்கிறதுதான் இப்போதைக்கு ஹாட் டாபிக்கா இருக்கு.
திமுகவை சேர்ந்த டிகேஎஸ் இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, கே.ஆர்.என்.ராஜேஷ்குமார்….
அதிமுகவை சேர்ந்த நவநீதகிருஷ்ணன்,
எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், விஜயக்குமார் ஆகிய ஆறு பேரின் பதவிக் காலம் ஜூன் 29ஆம் தேதி முடிவடைகிறது.
அந்த ஆறு இடங்களுக்கான தேர்தல் ஜூன் 10ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல ஆணையம் அறிவித்துள்ளது. மே 24ல் வேட்பு மனு தாக்கல் தொடங்கும். மே 29ல் வேட்பு மனு தாக்கல் முடிகிறது.
வேட்பு மனுத் தாக்கலுக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் கட்சிகளுக்குள் ராஜ்யசபா வாய்ப்புகளுக்கா போட்டி தொடங்கிவிட்டது.
கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றிப் பெற்று அதிக எண்ணிக்கையில் சட்டமன்ற உறுப்பினர்களை திமுக வைத்திருப்பதால் அதற்கு 4 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் பலம் கிடைத்திருக்கிறது. அதிமுகவால் இரண்டு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க முடியும்.
திமுகவுக்கு கிடைக்கவுள்ள 4 இடங்களில் ஒன்றை காங்கிரஸ் கட்சி கேட்பதாக கூறப்படுகிறது. காங்கிரசுக்கு கொடுக்க திமுகவும் தயாராக இருப்பதாக திமுக வட்டாரங்கள் கூறுகின்றன.
காங்கிரஸ் கட்சி கேட்கும் ஒரு இடத்தில் ப.சிதம்பரம் போட்டியிட வாய்ப்பிருக்கிறது. திமுக அலுவலக திறப்பு விழாவுக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்ற போது இது குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பேசியதாக தெரிகிறது.
ப.சிதம்பரத்தின் ராஜ்ய சபா எம்.பி. பதவி காலம் ஜூன் மாதம் முடிய இருக்கிறது. கடைசி நேரத்தில் ப.சிதம்பரத்துக்கு பதில் பிரியங்கா காந்தியும் போட்டியிட வாய்ப்புள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மீதமுள்ள 3 இடங்களில் தற்போதைய எம்.பியான ராஜேஷ்குமாருக்கு திமுக மீண்டும் சீட் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த 2 இடங்களுக்கு இப்போது திமுகவில் போட்டி அதிகமாக இருக்கிறது. போட்டியாளர்கள் பட்டியலில் பொன்.முத்துராமலிங்கம், கார்த்திகேய சிவசேனாதிபதி, இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, தங்கத் தமிழ்ச்செல்வன் ஆகியோர் இருக்கிறார்கள். இவர்களில் இருவருக்கு வாய்ப்பு கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
திமுகவுக்கு மற்றொரு அழுத்தமும் வந்திருக்கிறது. சிபிஎம், சிபிஐ கட்சிகளை சேர்ந்த சீதாரம் யெச்சூரி, டி.ராஜா வுக்காக இடதுசாரிகள் திமுகவிடம் கேட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு திமுக இடங்களை ஒதுக்குமா என்பது சந்தேகமே.
அதிமுகவிடம் உள்ள இரண்டு இடங்களை இரட்டை தலைவர்கள் ஆளுக்கு ஒன்று என்று பிரித்து வைத்திருக்கிறார்கள். அதனால் ஓபிஎஸ் ஆதரவாளர் ஒருவருக்கும், இபிஎஸ் ஆதரவாளர் ஒருவருக்கும் வாய்ப்பு கிடைக்கும்.
ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளரான தேனி மாவட்ட செயலாலர் எஸ்.பி.எம்.சையத் கானுக்கு வாய்ப்பு கேட்கிறார் என்று கூறப்படுகிறது.
எடப்பாடி பழனிசாமி ஆதரவு குழுவில போட்டி அதிகம். சி.வி.சண்முகம், டி.ஜெயக்குமார், பா.வளர்மதி, பொன்னையன், கோகுல இந்திரான்னு என பலர் எடப்பாடியை நெருக்குகிறார்கள். இதுல யாரை சிபாரிசு செய்யறதுன்னு தெரியாம எடப்பாடி முழிச்சுட்டு இருக்கார். இவர்கள்ல யாருக்கு இடம் என்பது குறித்து எடப்பாடி இன்னும் முடிவெடுக்கவில்லை.
ராஜ்ய சபை இடத்துக்காக பாஜகவும் அதிமுகவை நெருக்குவதாக செய்திகள் வருகின்றன.
ஆக தமிழ் நாட்டின் இரண்டு பெரிய திராவிடக் கட்சிகளுக்கும் ராஜ்ய சபை தேர்தல் ஒரு நெருக்கடியாகதான் இருக்கிறது.