அதிரடிக்கு பெயர்போன முதல்வர்களில் ஒருவர் மம்தா பானர்ஜி. அமைச்சரவைக் கூட்டமோ, அதிகாரிகள் கூட்டமோ எதுவாக இருந்தாலும் சரி… கேள்விகளைக் கேட்டு துளைத்து எடுத்துவிடுவார். இதற்கு உதாரணம் கொல்கத்தாவில் சமீபத்தில் நடந்த அதிகாரிகள் கூட்டத்தில் நடந்த சம்பவம்.
கூட்டத்தில் ஜல்தா நகராட்சியின் தலைவர் சுரேஷ் அகர்வால், தனது பகுதியில் உள்ள பிரச்சினைகளைப் பற்றி எழுந்து நின்று பேசிக்கொண்டு இருந்தார். அவருக்கு தொப்பை பெரிது. சுரேஷ அகர்வால் சொன்ன பிரச்சினைகளைவிட சுரேஷின் தொப்பைதான் மம்தாவின் கவனத்தை ஈர்த்தது.
சுரேஷ் அகர்வாலின் பேச்சை பாதியில் இடைமறித்த மம்தா பானர்ஜி, “உங்கள் மத்தியப் பிரதேசம் (தொப்பை) ஏன் இப்படி வளர்ந்திருக்கிறது? ஏதாவது பிரச்சினையா” என்று கேட்டார்.
“என் உடலில் எந்த பிரச்சினையும் இல்லை மேடம். சக்கரை வியாதி, ரத்த அழுத்தம் போன்ற எந்த நோய்களும் எனக்கு இல்லை” என்றார் சுரேஷ்.
ஆனால் மம்தா விடவில்லை. “இல்லை ஏதோ பிரச்சினை இருக்கிறது. உங்கள் கல்லீரல் பெரிதாகி இருக்கலாம். உடலில் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் தொப்பை இப்படி பெருசாகாது”
“ அப்படி எதுவும் இல்லை. நான் தினமும் 3 மணிநேரம் உடற்பயிற்சி செய்கிறேன். தினமும் 1000 தண்டால் எடுக்கிறேன்” என்று சுரேஷ் குறிப்பிட, மம்தா நம்பவில்லை.
“நீங்கள் சொல்வதை நம்ப முடியவில்லை. இங்கே செய்து காட்டுங்கள் பார்ப்போம்” என்று மம்தா கேட்க சுரேஷூக்கு அதிர்ச்சி.
“இல்ல மேடம், இந்த நேரத்தில் செய்ய முடியாது” மழுப்பலாக பதிலளிக்க மம்தா விடவில்லை. அவரிடம் தொடர்ந்து கேள்விகள் கேட்டுக் கொண்டிருக்க, ஒரு கட்டத்தில் கேள்விகளை சமாளிக்க இயலாத சுரேஷ் அகர்வால், “ தீதி, எனக்கு எண்ணெயில் பொரித்த பண்டங்கள் மிகவும் பிடிக்கும். குறிப்பா பகோடா ரொம்ப பிடிக்கும். மனைவி செய்யும் பகோடாவை தினமும் காலையில் நிறைய சாப்பிடுவேன். பகோடா இல்லாமல் என்னால் வாழ முடியாது” என்று குறிப்பிட்டார்.
உடனே மம்தா பானர்ஜி, “இனி நீங்கள் ஒரு மாதத்துக்கு தொடர்ந்து புழுங்கல் அரிசி சாதத்தை சாப்பிட வேண்டும். மாலை 7 மணிக்குள் இரவு உணவை முடித்துவிட வேண்டும். தவறி தாமதமாக சாப்பிட்டால், அடுத்த நாள் காலை 10 மணிக்கு மேல்தான் சாப்பிட வேண்டும்” என்று டயட் டிப்ஸ் கொடுத்தார்.
அதிகாரிகள் கூட்டத்தில் மம்தா பானர்ஜி இப்படி பேசலாமா என்ற கேள்விகள் ஒருபுறமும் நல்லதுக்காகதானே மம்தா இப்படி கேட்டார் அதில் தவறில்லை என்று மம்தாவுக்கு ஆதரவாக கருத்துக்கள் மறுபுறமுமாக இன்றைய ட்விட்டர் விவாதித்துக் கொண்டிருக்கிறது.
மம்தா பானர்ஜி தன்னுடைய உடலை கவனமாக பார்த்துக் கொள்பவர். தினசரி நடைப்பயிற்சியை மேற்கொள்கிறார். தேர்தல் பரப்புரைகளின்போதும் மற்ற தலைவர்களைப் போல அவர் வேனில் செல்வதில்லை. பழைய கால வைகோபோல் நடைப் பயணம்தான். இப்படி உடல் மீது அக்கறை கொண்டவரான மம்தாவுக்கு சுரேஷ் அகர்வாலின் தொப்பை தொந்திரவு செய்ததில் ஆச்சர்யமில்லை.