அடர்ந்த காடு, அங்கே ஒரு வீடு. அதில் ஒரு குடும்பம். அம்மா, அப்பா. இரண்டு பிள்ளைகள். இவர்கள் வாழ்க்கையில் என்னென்ன திடுக்கிடும் நிகழ்வுகள் நடக்கிறதோ அதையே அசாதாரணமாக படமாக்கியிருக்கி……
நிற்க!
எதையோ தேடுகிறீர்களா? தேடலை நிறுத்திவிட்டு ஆசுவாசப்படுத்திக் கொள்ளுங்கள். அப்படி இல்லை என்றால் ஜோ & ஜோ படத்தைப் பாருங்கள். நிச்சயமாக ஆசுவாசம் அடைந்து விடுவீர்கள்.
படத்துக்கு வருவோம், வீட்டிற்கு ஒரு மொட்டை காதல் கடிதம் வருகிறது. அந்த கடிதம் அக்காவுக்கு வந்ததாக தம்பியும், தம்பிக்கு வந்ததாக அக்காவும் சந்தேகித்து, ஆதாரத்துடன் வீட்டில் காட்டி, வசமாக மாட்டி விட வேண்டும் என்று எண்ணி இவர்கள் இருவரும் செய்யும் சேட்டைகள்தான் படத்தின் கதை. அது யாருக்கு வந்த கடிதம் என்பதே படத்தின் க்ளைமேக்ஸ்.
இந்தக் கதை முழுக்க முழுக்க லாக்டவுன் சமயத்தில் நடப்பதாக காட்டுகிறார்கள். வீட்டில் அக்கா ஜோமோளும்,தம்பி ஜோமோனும் எலியும் பூனையுமாக எப்பொழுதும் ஏதேனும் ஒரு பிரச்சினை, சண்டை என வம்பிழுத்துக் கொண்டே இருக்கின்றனர். அம்மா எப்பொழுதும் தம்பிக்கு சாதகமாக இருக்கிறாள். ஜோமோளுக்கு இது பிடிக்கவில்லை. தான் ஒரு பெண் என்பதால், தன்னையே எல்லா வீட்டு வேலைகளையும் செய்ய சொல்கிறாள். தம்பிக்கு மட்டுமே எல்லா சலுகைகளும் கிடைக்கிறதென்று ஜோமோள் எரிச்சலடைகிறாள். அதனால் அம்மாவிடம் எப்பொழுதும் கோபமாகவே இருக்கிறாள். அப்பா ஜோமோளை அவ்வப்போது அரவணைத்து சமாதானம் செய்கிறார்.
அம்மா தனக்கு கொடுக்கும் வேலைகளை எல்லாம் எப்படி சாதுர்யமாக அடுத்தவர் தலையில் ஜோமோள் கட்டுகிறாள் என்பதை எல்லோராலும் கனெக்ட் செய்ய முடியும். ஜோமோனுக்கு மனோஜ், எபி என இரண்டு நண்பர்கள். எப்பொழுதும் அவர்களுடன்தான் இருக்கிறான். அவர்களுடன் சேர்ந்து தம் அடிப்பதும், சிக்கன் சமைப்பதுமென லூட்டி அடிக்கிறான். டென்ஷனாகும் சமயத்தில் ஜோமோனின் வயிற்றுப் போக்கு, நமக்கெல்லாம் சிறப்பான பொழுதுபோக்கு.
வீட்டிற்கு ஒரு நாள் மொட்டை காதல் கடிதம் வருகிறது. ஜோமோன் தன் நண்பர்களுடன் சேர்ந்து அக்காவின் காதலன் யாரென கண்டுபிடிக்க முயன்று, அவர்கள் அனைவரும் மாட்டிக் கொள்ளும் சம்பவங்கள் எல்லாம் தரம்.
அதுபோலவே ஜோமோளும், தம்பியின் காதலியைக் கண்டுபிடிக்க பாட்டியுடன் சேர்ந்து செய்யும் சேட்டைகள் எல்லாம் க்யூட்.
இறுதியில் அந்தக் கடிதம் யாருக்கு வந்ததென்று தெரியும்போது, யாரும் சிரிக்காமல் இருக்க முடியாதென்னும் அளவிற்கு நகைச்சுவையை அள்ளித் தெளித்திருக்கிறார்கள்.
படத்தில் யாரும் நடிக்கவில்லை. ஒரு குடும்பமாக வாழ்ந்திருக்கிறார்கள்.முதல் பட இயக்குநரின் படமா இது என்னும் அளவிற்கு அழகாக காட்சிகள் அமைத்திருக்கிறார் அருண்.
சீனுக்கு சீன் நகைச்சுவை என பேசி வைத்து, ரவீஷ் என்பவருடன் சேர்ந்து அருண் திரைக்கதையை எழுதியிருக்கக் கூடும். அதன் விளைவு இந்தத் தலைமுறையினர் அனைவரும் கனெக்ட் செய்து சிரிக்கக் கூடிய காமெடி காட்சிகள்.
வெறும் நகைச்சுவை மட்டுமில்லாமல், வீட்டில் பெண்கள் எப்படி ஒடுக்கப் படுகிறார்கள் என்பதை ஜோமோளின் வசனங்கள் வழியாக அத்தனை பெண்களின் மனக் குமுறல்களையும் சர்வ சாதாரணமாக படம் பார்ப்பவர்களுக்கு கடத்தியிருக்கிறார் இயக்குநர்.
வெகு நாட்கள் கழித்து, ஒரு நல்ல ஃபீல் குட் படம். அமேசான் ப்ரைமில் இருக்கிறது.