கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வருவதற்கே மக்கள் படாத பாடுபட்டு வருகின்றனர். இந்த நேரத்தில் அவர்களை புதிதாக அச்சுறுத்த வந்திருக்கிறது ‘ஜாம்பி வைரஸ்’.
“அது என்ன ஜாம்பி?” என்ற கேள்வி உங்களுக்கு வரலாம். உங்கள் வீட்டு குழந்தைகளிடம் கேட்டால் இதற்கு எளிதாக பதில் சொல்லி விடுவார்கள். ஜாம்பிகளை மையமாக வைத்து பல படங்கள் வந்துள்ளன. தமிழில் ஜெயம் ரவி நடித்த ‘மிருதன்’ படம்கூட ஜோம்பி கதைதான்.
இந்த படங்களின் கதைபடி ஜாம்பி வைரஸ் உள்ளவர்கள் கிட்டத்தட்ட டிராகுலாவைப் போல் நடந்துகொள்வார்கள். அவர்கள் சக மனிதர்களைக் கடித்தாலோ அல்லது கீறினாலோ அவர்களையும் ஜாம்பி வைரஸ் தாக்கிவிடும். அவர்களும் ஜாம்பிக்களாக மாறி விடுவார்கள்.
இப்படி சினிமாக்களில் பயமுறுத்தியதைப் போன்ற ஜாம்பி வைரஸ், தற்போது கனடாவில் உள்ள மான் இனங்களை தாக்கி வருவது கண்டறியப்பட்டுள்ளது. இந்நோயின் தாக்கத்தால் நாம் திரைப்படங்களில் பார்த்த மனிதர்களைப் போல அங்குள்ள மான்கள் வினோதமாக நடந்துகொள்கின்றன. இந்த நோய் மனிதர்களுக்கும் பரவலாம் என்ற மருத்துவர்களின் கருத்தால் பலரும் பீதி அடைந்துள்ளனர்.
அது என்ன ஜாம்பி வைரஸ்?
ஜாம்பி வைரஸ் நோயின் மருத்துவப் பெயர் ‘கிரானிக் வேஸ்டிங் டிஸீஸ்’ (chronic wasting disease). இந்நோயின் தாக்கத்தால் வரும் விளைவுகளால் இதை “ஜாம்பி நோய்” என்று அழைக்கிறார்கள்.
அப்படி என்ன விளைவுகள் ஏற்படுகிறது?
முக அமைப்பில் மாற்றம் ஏற்பட்டு, அழகான மான்கள் அகோரமாக மாறுகின்றன. நோயின் தாக்கத்தால் உடல் எடை குறைவது, அதீத தாகம், பசி எடுப்பது, நிற்காமல் எச்சில் சுரப்பது போன்றவை ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. சிறுநீர் அதிகமாய் வெளியேறும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. மிக முக்கியமாய் இந்த நோயின் தாக்கத்தினால் மான்களுக்கு மனிதர்கள் மீதான அச்சம் போய்விடுமாம்.
1960-களில் இந்நோய் அமெரிக்க மாகாணத்தில் கண்டறியப்பட்டுள்ளது. இந்நோய்த்தொற்று 1996-களில் கனடாவில் நுழைந்ததாக கூறப்படுகிறது. அன்றைய கால கட்டத்தில் பல மான்களும் அதை சேர்ந்த இன மிருகங்களும் இதனால் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன.
சிறுநீர் மூலமாகவும், உமிழ் நீர் மூலமாகவும் இந்நோய் பரவுகிறது. வேகமாக பரவும் தன்மை கொண்ட இந்நோய் தற்போது கனடாவில் உள்ள காடுகளில் வாழும் ஆரோக்கியமான மான்களைக்கூட தாக்கி வருகின்றன.
இந்த ஜாம்பி நோயால் பாதிக்கப்படும் உயிரினங்கள், தன்னை மறந்த ஏகாந்த நிலையில் திரிவதாக கூறப்படுகிறது.
ஜாம்பி வைரஸ் நோயால் இன்றுவரை மனிதர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை. இருப்பினும், இது மனிதர்களுக்கு பரவ சாத்தியக்கூறுகள் இருப்பதாக கனடா மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் மான்களை வளர்ப்போரும், வேட்டையாடுவோரும் பெரும் அச்சத்தில் இருக்கிறார்கள். இந்நோயை கட்டுப்படுத்த இன்றுவரை தடுப்பூசியோ, மருந்தோ இல்லாததால் மான்களை நெருங்குவதையே கனடா மக்கள் தவிர்த்து வருகிறார்கள்.
Good one ?