உலகில் இதுவரை 7 கண்டங்கள் மட்டுமே இருப்பதாக சொல்லப்பட்டு வந்தது. இந்நிலையில் புதியதாக 8வது கண்டத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். கடலுக்கு அடியில் இருக்கும் இது தோராயமாக இந்தியாவின் சைஸில் இருக்கும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
பல வருடங்களாக கடலுக்கு அடியில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் ஆய்வில் இந்த உண்மை தெரிய வந்திருப்பதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
அமெரிக்க புவி இயற்பியல் யூனியனின் டெக்டோனிக்ஸ் இதழில் இது தொடர்பான ஆய்வு வெளிவந்திருக்கிறது. சுமார் 5 மில்லியன் சதுர கி.மீ பரப்பளவை இந்த கண்டம் கொண்டிருப்பதாகவும், இது தொராயமாக இந்தியாவின் அளவு எனவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். தற்போது இந்த கண்டத்தை துல்லியமான வரைப்படமாக விஞ்ஞானிகள் மாற்றியிருக்கின்றனர். இந்த கண்டத்திற்கு ‘சீலாண்டியா’ எனவும் பெயரிடப்பட்டிருக்கிறது.
இது தொடர்பாக வெளியான ஆய்வில், “சுமார் 100 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் அப்போது ஒரே ஒரு கண்டம் மட்டுமே இருந்தது. அதிலிருந்து 85 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இது பிரிய தொடங்கியது. இது மட்டும் தனியாக நீர் நிலையில் மிதக்க தொடங்கியது. கொஞ்ச நாட்களுக்கு அது மிதந்துக்கொண்டுதான் இருந்தது. ஆனால், பின்நாட்களில் இதன் புவி தட்டுக்கள் பலவீனமடைய தொடங்கின. விளைவு அப்படியே நீரில் மூழ்க தொடங்கியது.
இன்று, நியூசிலாந்து மற்றும் நியூ கலிடோனியா கடல் பகுதியில் இந்த கண்டத்தின் சில மேடுகள் மட்டும் தீவுகளாக காட்சியளிக்கிறது.
இன்றும் கடலுக்கு அடியில் நிலப்பரப்புகள் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் இந்த நிலப்பரப்பில் எது கண்டம்? எது கடலின் அடிப்பகுதி என்று எப்படி விஞ்ஞானிகள் கண்டுபிடித்தார்கள் என்பது வியப்புக்கு உரிய கேள்வி.
அதாவது இந்த தீவுகளை சுற்றியுள்ள பவளப்பாறைகளை சேகரித்து சோதனை செய்து பார்த்தனர். மற்ற இடங்களில் கிடைக்கும் பாறைகளுக்கும், இங்கு கிடைத்த பாறைகளுக்கும் நிறைய வேறுபாடு இருந்தது. காரணம் தீவை சுற்றியுள்ள பாறைகளின் வயது மற்ற இடங்களில் கிடைத்த பாறைகளின் வயதைவிட குறைவு. ஆனால் தீவிலிருந்து 100 கி.மீ தொலைவில் எடுக்கப்பட்ட பாறைகள் ஒரே மாதிரியாகத்தான் இருந்தன. எனவே, தீவை ஒட்டியுள்ள நிலப்பரப்பு அனைத்தும் ஒரே மாதிரியானது என்கிற முடிவுக்கு ஆய்வாளர்கள் வந்தனர்.
பவள பாறைகள் மட்டுமல்லாது மற்ற பாறைகளையும் ஆய்வாளர்கள் கார்பன் டேட்டிங் செய்து பார்த்தனர். அதில், சுமார் 5 மில்லியன் சதுர கி.மீ பரப்பளவில் உள்ள பாறைகள் அனைத்தும் ஒரே வயதில் இருப்பது உறுதி செய்யப்பட்டது.