No menu items!

World Population 800 கோடி – ஆபத்தா?

World Population 800 கோடி – ஆபத்தா?

வெறும் 48 ஆண்டுகளில் இரட்டிப்பாகி இருக்கிறது உலகின் மக்கள் தொகை. கடந்த 1974-ம் ஆண்டில் 400 கோடியாக இருந்த மக்கள் தொகை, நேற்று 800 கோடியை எட்டியிருக்கிறது. ஐநாவின் கணக்குப்படி பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகரான மணிலாவில் உள்ள மருத்துவமனையில் நேற்று பிறந்த பெண் குழந்தைதான் 800 கோடியாவது குழந்தை. இந்தக் குழந்தையின் படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு கொண்டாடிக்கொண்டு இருக்கிறார்கள் பிலிப்பைன்ஸ் மக்கள். தங்கள் நாட்டு குழந்தை சரித்திரப் புகழ்பெற்ற மகிழ்ச்சி அவர்களுக்கு.

ஆனால் மக்கள் தொகை இப்படி அதிகரித்துக் கொண்டே போனால் இந்த உலகத்தால் சமாளிக்க முடியுமா என்று ஒரு பகுதியினர் கவலைப்படத் தொடங்கியுள்ளனர். இந்த 800 கோடியில் கடைசி 100 கோடி மக்கள் தொகையை கடந்த 11 ஆண்டுகளில் இந்த உலகம் கடந்திருக்கிறதே என்பதுதான் அவர்களின் கவலைக்கு காரணம். இதே வேகத்தில் போனால் 2030-ம் ஆண்டில் 850 கோடியாகவும், 2050-ல் 970 கோடியாகவும் உலகின் மக்கள் தொகை அதிகரிக்கும் என்று அறிவித்துள்ளது ஐநாவின் கிளை அமைப்பான World Population Prospects 2022.

சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் மக்கள் தொகைப் பெருக்கம் குறைந்துகொண்டு இருக்கும் நேரத்தில் இந்தியா, பாகிஸ்தான், காங்கோ, எகிப்து, எதியோப்பியா, நைஜீரியா, பிலிப்பைன்ஸ் மற்றும் டான்சானியா ஆகிய நாடுகளில் மக்கள் தொகை மேலும் பெருகும் என்றும் அடுத்த சில ஆண்டுகளில் உலகின் மக்கள் தொகை மேலும் அதிகரிப்பதற்கு இது முக்கிய காரணமாக இருக்கும் என்றும் இந்த அமைப்பு சொல்கிறது. இந்த அமைப்பு சொல்லும் மற்றொரு செய்தி 2023-ம் ஆண்டில் உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடு என்ற பெருமையை சீனாவிடம் இருந்து இந்தியா தட்டிப் பறிக்கும் என்பது.

United Nations Population Fund என்ற அமைப்பு வெளியிட்டுள்ள மற்றொரு கணக்கின்படி 19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உலகின் மக்கள்தொகை 160 கோடியாகத்தான் இருந்துள்ளது. கடந்த 2 நூற்றாண்டுகளில் இந்த மக்கள்தொகை பலநூறு கோடிகளைக் கடந்தது எப்படி என்ற மலைப்பு உங்களுக்கு ஏற்படலாம். இதற்கு முக்கிய காரணமாக 2 நூற்றாண்டுகளில் ஏற்பட்ட மருத்துவ கண்டுபிடிப்புகளையும், மனிதர்களின் சுமையைக் குறைக்கும் மாற்றங்களையும் சொல்கிறார்கள். இந்த மாற்றங்களாலும், கண்டுபிடிப்புகளாலும் மக்களின் வாழ்க்கை முறை எளிதாகி, அவர்கள் வாழும் காலம் அதிகரித்துள்ளதாக United Nations Population Fund அமைப்பு தெரிவித்துள்ளது.

அதேநேரத்தில் இந்த மக்கள் தொகையின் வளர்ச்சி இன்னும் சில ஆண்டுகளில் குறையத் தொடங்கும் என்று கூறப்படுகிறது. உலகளாவிய அளவில் பிறப்பு விகிதம் குறைந்து வருவதே இதற்கு காரணம்.

கடந்த 11 ஆண்டுகளில் மக்கள் தொகை 100 கோடி அதிகரித்துள்ளது. இதே நேரத்தில் அடுத்த 100 கோடியைக் கடக்க 15 ஆண்டுகளும் அதற்கடுத்த 100 கோடியைக் கடக்க 21 ஆண்டுகளும் தேவைப்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. உலகளாவிய அளவில் மலட்டுத்தன்மை அதிகரிப்பது, பிறப்புவிகிதம் குறைவது போன்றவை இதற்கு முக்கிய காரணங்களாக இருக்கும்.

மக்கள்தொகை அதிகரித்துள்ள அதே நேரத்தில் அவர்களிடையேயான பேதங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளார் ஐநா சபையில் பொதுச் செயலாளரான ஆண்டோனியோ குட்ரெஸ். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், “மக்கள் தொகை அதிகரித்துள்ள 800 கோடியை எட்டியுள்ள அதே நேரத்தில் அவர்களிடையேயான பிரிவினையும் அதிகரிக்கும். இருப்பவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் இடையேயான பேதங்கள் அதிகரிக்கும். ஏழை நாடுகளைவிட பணக்கார நாடுகளைச் சேர்ந்த மக்களின் ஆயுட்காலம் சுமார் 30 ஆண்டுகள் அதிகமாக இருக்கும். இதுபோன்ற வித்தியாசங்களால் பிரிவினைகள் மேலும் அதிகரிக்கும்” என்று கூறியுள்ளார்.

இதை ஆரம்பத்திலேயே கவனிக்காவிட்டால் உலகில் பிரச்சினைகள் அதிகமாக வாய்ப்புள்ளது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...