நிலச்சரிவு காரணமாக நாட்டின் மற்ற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டிருந்த வயநாடு பகுதிக்கு 2 நாட்களுக்குள் பெய்லி பாலம் அமைத்துக் கொடுத்திருக்கிறார்கள் ராணுவத்தின் மெட்ராஸ் சாப்பர்ஸ் குழுவினர். வயநாடு மக்களுக்கு புதிய நம்பிக்கையை அளித்த இந்த பாலத்தை கட்டியதில் முக்கிய பங்காற்றிவர் ஒரு பெண். அவரது பெயர் சீதா ஷெல்கே.
பெய்லி பாலம் என்றால் என்ன?
பெய்லி பாலம் என்பது முன்கூட்டியே தயாரித்து வைக்கப்பட்டிருக்கும் பாகங்களை கொண்டு உருவாக்கப்படும் ஒரு பாலம். இதுபோன்ற பாலங்கள் முதலில் 1940-41-ம் ஆண்டில் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டு இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்டன. டொனால்ட் பெய்லி என்பவர் முதன்முதலில் இந்த பாலத்தை உருவாக்கியதால், அதற்கு பெய்லி பாலம் என்று பெயர் வந்தது.
இந்த பாலத்தின் பாகங்களை முன்கூட்டியே தயாரித்து வைத்திருப்பார்கள். எங்காவது அவசரமாக பாலம் அமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டால், ராணுவத்தினர் இந்த பாகங்களை எடுத்துச் சென்று பாலம் அமைத்துக் கொடுப்பார்கள்.
அந்த வகையில் சூரல்மலை – முண்டக்கை இடையே சாலியாற்றின் மீது கட்டமைக்கப்பட்ட பெய்லி பாலம் 70 மீட்டர் நீளம் கொண்டது. இதற்காக ஆயத்த நிலையில் இருந்த பாகங்கள், விமானம் மற்றும் சாலை மார்க்கமாக வயநாடு கொண்டு வரப்பட்டன. அங்கிருந்து ராணுவ வாகனங்கள் மூலம் சூரல்மலைக்கு கொண்டு வரப்பட்டன. இவற்றை, சாலியாற்றின் குறுக்கே பொறியியல் முறைப்படி, நேர்த்தியாக ஒருங்கிணைத்து, பெய்லி பாலம் கட்டமைக்கப்பட்டுள்ளது.
மெட்ராஸ் சாப்பர்ஸ்
வயநாடு பகுதியில் இந்த பெய்லி பாலத்தை அமைப்பதில் முக்கிய பங்காற்றியவர்கள் மெட்ராஸ் சாப்பர்ஸ் என அழைக்கப்படும் ராணுவத்தின் மெட்ராஸ் இன்ஜினியரிங் படைப்பிரிவைச் சேர்ந்த 144 வீர்ர்கள்தான். மெட்ராஸ் சாப்பர்ஸ் என்பது இந்திய ராணுவத்தின் ஒரு பொறியாளர் குழு. இந்த குழுவை தம்பிகள் குழு என்றும் அழைக்கின்றனர். இக்குழு, ஆங்கிலேய ஆட்சியின் பழைய மெட்ராஸ் பிரசிடென்சி ராணுவத்தில் உருவாக்கப்பட்டது. இதன் தலைமையகம் தற்போது பெங்களூருவில் உள்ளது. தற்போது வயநாடு பகுதியில் பாலம் அமைத்துள்ள மெட்ராஸ் சாப்பர்ஸ் குழுவுக்கு தலைமை வகித்தவர் சீதா ஷெல்கே என்ற பெண்.
யார் இந்த சீதா ஷெல்கே?
மகாராஷ்டிராவின் அகமத் நகர் மாவட்டத்தில் உள்ள கடில்காவான் (Gadilgaon) என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சீதா ஷெல்கே. அவரது அப்பாவுக்கு 4 மகள்கள். இதில் சீதா 2-வது மகள். 10-ம் வகுப்பு படித்த காலத்தில் ராணுவ வீராங்கனை பற்றிய ஒரு செய்தியை பத்திரிகையில் படித்ததால் அவருக்கும் ராணுவத்தில் சேரும் ஆர்வம் ஏற்பட்டது.
சீதா ஷெல்கே, படிப்பிலும் கெட்டிக்காரராக இருந்துள்ளார். மெக்கானிக்கல் இஞ்ஜினீயரிங் படித்த பிறகு ராணுவத்தில் சேருவதற்கு முயற்சி செய்துள்ளார். முதல் 2 முறை நுழைவுத் தேர்வில் வெற்றிபெற தவறிய இவர், 3-வது முறை தேர்வில் வென்று 2012-ல் ராணுவத்தில் இணைந்துள்ளார். ஏற்கெனவே மெக்கானிக்கல் இஞ்ஜினீயரிங் முடித்த காரணத்தால், 2015-ம் ஆண்டில் அவருக்கு மெட்ராஸ் சாப்பர்ஸ் பிரிவில் பணி ஒதுக்கப்பட்டுள்ளது.
2015-ம் ஆண்டுமுதல் மெட்ராஸ் சாப்பர்ஸ் பிரிவில் பணியாற்றி வரும் சீதா, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நிலச்சரிவு ஏற்பட்டபோது அங்கு சாலையைச் சீரமைப்பதில் முக்கிய பங்காற்றியுள்ளார். இப்போது வயநாட்டில் சீதா ஷெல்கேவும் அவரது பிரிவினரும் இணைந்து 48 மணிநேரம் கடுமையாக உழைத்து இந்த பாலத்தை உருவாக்கி உள்ளனர். இந்த குழுவில் இடம்பெற்றுள்ள ஒரே பெண் சீதா ஷெல்கே என்பது குறிப்பிடத்தக்கது. இதுபற்றி செய்தியாளர்கள் சீதா ஷெல்கேவிடம் கேட்ட்தற்கு, “நாங்கள் அனைவரும் ராணுவ வீர்ர்கள். எங்களுக்குள் ஆண், பெண் என்ற பேதமெல்லாம் இல்லை. இதுபோன்ற சூழல்களை சமாளிக்க, எங்கள் ஒவ்வொருவருக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது” என்று பதிலளித்திருக்கிறார் சீதா.
வயநாட்டில் பெய்லி பாலத்தை அமைத்த்தைப் பற்றி செய்தியாளர்களிடம் பேசிய சீதா ஷெல்கே, “இங்கு பாலம் அமைப்பது கடும் சாவாலானதாக இருந்தது. முதல் நாள் காலை 6 மணிக்கு பணிகளை தொடங்கிய எங்க குழுவினர், உறங்கக்கூட செல்லாமல் இந்த பாலத்தை கட்டி முடித்துள்ளனர். ஒரு சிலர் இயற்கை உபாதைகளைக்கூட கழிக்க செல்லவில்லை. சேர்ந்தாற்போல் 3 நிமிடங்கள்கூட ஓய்வெடுக்கவில்லை. உள்ளூர் மக்களும், ராணுவத்தின் பிற பிரிவினரும்கூட எங்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தனர்” என்கிறார்.