இந்தியர்களின் சுற்றுலா மற்றும் பயணங்களைப் பற்றி மேக் மை டிரிப் நிறுவனம் நடத்தியுள்ள ஆய்வின் முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இந்தியாவைச் சேர்ந்த சுமார் 10 கோடி பயணிகளின் தரவுகளின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் தெரியவந்துள்ள சில முக்கிய விஷயங்கள்…
ஆண்டுக்கு 3 பயணம்:
இந்தியாவில் உள்ள பெரும்பாலான குடும்பங்கள் ஆண்டுக்கு 3 முறையாவது ஏதாவது ஒரு இடத்துக்கு பயணம் மேற்கொள்கின்றனர். கடந்த 2019-ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 2023-ம் ஆண்டில் இந்தியர்களின் பயணம் சுமார் 25 சதவீதம் அதிகரித்துள்ளது.
வார இறுதி நாட்களில் சுற்றுலா செல்லும் பெருவாரியான வட மாநில மக்களின் தேர்வாக உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள ஜிம் கார்பெட் தேசிய பூங்கா உள்ளது. தென்னிந்தியாவைப் பொறுத்தவரை வார இறுதியில் பயணம் மேற்கொள்ளும் மக்களின் முக்கிய தேர்வாக ஊட்டி மற்றும் மூணாறு பகுதிகள் உள்ளன.
அதிகரிக்கும் ஆன்மிக பயணங்கள்:
ஆன்மிக பயணம் மேற்கொள்ளும் இந்தியர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. கடந்த 2022-ம் ஆண்டோடு ஒப்பிடும்போது அயோத்திக்கான பயணத் தேடல்களின் எண்ணிக்கை 585 சதவீதம் அதிகரித்துள்ளதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. அயோத்திக்கு அடுத்ததாக 2022-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2023-ம் ஆண்டில் உஜ்ஜயினி நகரத்தை 359 சதவீதம் பேரும், பத்ரிநாத்தை 343 சதவீதம் பேரும் அதிகமாக இணையதளத்தில் தேடி இருப்பதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
சர்வதேச சுற்றுலா:
சர்வதேச சுற்றுலா செல்லும் இந்திய பயணிகளின் முதல் தேர்வாக துபாய், பாங்காக், சிங்கப்பூர் ஆகிய நகரங்கள் இருக்கின்றன. வெளிநாடு செல்லும் இந்திய சுற்றுலா பயணிகளில் சுமார் 30 சதவீதம் பேர் இந்த நகரங்ளுக்கு சுற்றுலா மேற்கொள்கிறார்கள். அதற்கு அடுத்த இடத்தில் லண்டன், டொரண்டோ மற்றும் நியூயார்க் நகரங்கள் இருக்கின்றன.
ஜன்னலோர இருக்கையை விரும்பும் பெண்கள்:
பேருந்து மற்றும் ரயில் பயணங்களின்போது பெண்கள் அதிகமாக ஜன்னலோர இருக்கையை விரும்புவதாகவும், ஆண்கள் ஜன்னலில் இருந்து தள்ளியுள்ள இருக்கையை விரும்புவதாகவும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. அதேபோல் இந்தியாவுக்குள் பயணம் செய்யும்போது சுமார் 1 வாரத்துக்கு முன்பே ஓட்டல் அறைகளை முன்பதிவு செய்வதாகவும், வெளிநாடுகளுக்கு செல்லும்போது 1 மாதத்துக்கு முன்பே ஓட்டல் அறைகளை முன்பதிவு செய்வதாகவும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
விமானப் பயணம்:
இந்தியாவுக்குள் விமானப் பயணம் மேற்கொள்வதாக இருந்தால் காலை 9 மணிமுதல் 6 மணிக்குள்ளாக செல்லும் விமானங்களையே பயணிகள் அதிகம் தேர்ந்தெடுக்கிறார்கள். விமானங்களில் அசைவ உணவுகளைவிட சைவ உணவுக்கே அதிக மவுசு இருக்கிறது. குறிப்பாக சீஸ், தக்காளி, வெள்ளரிக்காய் ஆகியவற்றை வைத்து செய்யும் பிரட் சாண்ட்விச்சை அதிகமானோர் விரும்பிச் சாப்பிடுகிறார்கள்.