சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் ஒன்றரை வயது குழந்தை கை அகற்றப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. குழந்தைக்கு கை அகற்றப்பட்டது ஏன்? எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை முன்னாள் மருத்துவர் சீனிவாசனிடம் கேட்டோம்.
டாக்டர் விளக்கத்துக்கு முன்னால் என்ன நடந்தது என்று பார்ப்போம்…
என்ன நடந்தது?
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த தம்பதி தஸ்தகீர் – அஜீஷா. இவர்களுக்கு ஒன்றரை வயதில் முகமது மகிரின் என்ற ஆண் குழந்தை. முகமது மகிரின் 32 வாரத்தில் பிறந்த குறை மாத குழந்தை என்பதால் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகள் இருந்துள்ளது. ஒன்றரை வயதானாலும் பிறந்தபோது இருந்த 1.5 கிலோ எடையே தற்போதும் உள்ளது. மேலும் நரம்பியல் கோளாறு, தலையில் ரத்தகசிவு, பலவீனமான இதயம் உட்பட பல உடல்நலப் பிரச்சினைகள் இருந்துள்ளது.
இதனால் பிறந்தது முதல் தொடர்ந்து சிவகங்கை அரசு மருத்துவமனை, பின்னர் மதுரை அரசு மருத்துவமனை, பின்னர் சென்னை ராஜீவகாந்தி அரசு மருத்துவமனை என சிகிச்சையிலேயே இருந்து வந்துள்ளது. இந்நிலையில் தலையில் நீர் கட்டியதால் கடந்த மாதம் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிறுவனுக்கு தலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அப்போது குழந்தையின் தலையில் பொருத்தப்பட்டிருந்த டியூப், கடந்த 25ஆம் தேதி இயற்கை உபாதை கழிக்கும்போது வெளியே வந்துவிட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த குழந்தையின் தாய் மீண்டும் ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு கொண்டுவந்தார். அப்போது குழந்தையின் உடல்நிலையை கண்காணித்த மருத்துவர்கள் உடனடியாக அன்று இரவே மீண்டும் அறுவை சிகிச்சை செய்தனர்.
இந்நிலையில், ஆரம்பத்தில் சிவப்பு நிறத்தில் இருந்த குழந்தையின் கை, பின்னர் கருப்பு நிறத்துக்கு மாறி அழுகியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, சனிக்கிழமை இரவு குழந்தையை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அந்த குழந்தையின் வலது கை அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.
தாய் குற்றச்சாட்டும் அமைச்சர் விளக்கமும்
இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாதிக்கப்பட்ட குழந்தையின் தாய் அஜீஷா, “கடந்த 29ஆம் தேதி எனது குழந்தைக்கு வலது கையில் டிரிப்ஸ் மூலம் மருந்து செலுத்தினர். அப்போது திடீரென குழந்தையின் கை நிறம் மாற தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்து செவிலியர்களிடம் தெரிவித்தேன். மருந்து செலுத்துவதால் ஏற்பட்ட நிறம் மாற்றம்தான், ஒரு பிரச்சினையும் இல்லையென கூறினர். ஆனால், சில மணி நேரத்திலேயே குழந்தையின் கை முழுவதுமாக நிறம் மாற தொடங்கியது.
இதனால் நரம்பியல் மருத்துவரிடம் கொண்டு சென்றோம். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தையின் வலது கையை உடனடியாக அகற்ற வேண்டும்; இல்லையென்றால் குழந்தையின் உயிருக்கு ஆபத்து என்று கூறி, எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
செவிலியர்களின் கவனக்குறைவே எனது குழந்தை கை அழுகியதற்கு காரணம். அதிக வீரியமான மருத்துகளை கொடுத்து கையை அழுக வைத்து விட்டனர்” என்று குற்றம்சாட்டியுள்ளார்.
முகமது மகிரின் கை அகற்றப்பட்டது சர்ச்சைக்குள்ளான நிலையில், இது குறித்து விளக்கம் அளித்துள்ள தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், ‘‘குழந்தை பிறக்கும் போதே 32 வாரத்தில் குறை பிரசவத்தில் குறைபாடுகளோடு பிறந்துள்ளது. எனவே, ஏகப்பட்ட பிரச்சினைகள் உள்ளன. ரத்த ஓட்டம் குறைவாக சென்றதால், கை தளர்ச்சி ஏற்பட்டு ரத்த உறைதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளித்துள்ளனர். இந்த தகவல் தெரிந்தவுடன் பெற்றோரை அழைத்து ராஜீவ் காந்தி மருத்துவமனையின் முதல்வர் தெளிவாக விளக்கி கூறியுள்ளார். அவர்களும் இதைக் கேட்டு எழும்பூர் மருத்துவமனைக்கு சென்று குழந்தையை அனுமதித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து கை அகற்றப்பட்டது” என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக மருத்துவக் குழு விசாரணைக்கும் அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
அமைச்சர் சொல்வது சரியா?
டாக்டர் சீனிவாசனிடம் கேட்டோம்.
“பொதுவாக குறைமாத பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு அமைச்சர் சொல்வது போல் ஏகப்பட்ட பிரச்சினைகள் இருக்கும். உதாரணமாக நன்றாக வேகாத இட்லியின் வெளிப்புறம் நன்றாக இருந்தாலும் உள்ளே மாவாக இருப்பது போல், குறைமாத பிரசவ குழந்தைகளின் உடல் உள் உறுப்புகள் முழுமையாக வளர்ச்சியடைந்து இருக்காது. இதனால், மூளை வளர்ச்சி குறைபாடு காரணமாக மூளையில் ரத்த கசிவு, நுரையீரல் முதிர்ச்சியடையாமை காரணமாக மூச்சுத் திணறல் மற்றும் சுவாசக் கோளாறு, இதயம் பலவீனமாக இருக்கும் என்பதால் இதய நோய்கள் மற்றும் இரத்த ஓட்டப் பாதிப்பு, புரோட்டீன் குறைபாடு, மஞ்சள் காமாலை, தொற்று நோய்கள் பாதிப்பு, நோய்கிருமித் தாக்கம், ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைதல், கால்சியம் குறைபாட்டால் எலும்பு பிரச்சினை, ஜீரணக் குறைபாடு போன்றவை ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
முகமது மகிரின் விவகாரத்திலும் பிறப்பு முதல் இதுபோல் ஏகப்பட்ட பிரச்சினைகள் இருந்துள்ளன. இதயம் பலவீனமாக இருப்பதால் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு, கை எடுக்கும் சூழ்நிலை உருவாகி இருக்கலாம்.
குறைமாத குழந்தைகளுக்கு உரிய சிகிச்சை அளிக்காவிட்டால் உயிரிழக்க நேரிடும். 5 வயதுக்குள் உயிரிழக்கும் குழந்தைகளில் குறைமாதத்தில் பிறந்த குழந்தைகளே அதிகம்.
குறை மாதத்தில் பிறந்து, காப்பாற்றப்படும் குழந்தைகளும்கூட, மூளை மற்றும் நுரையீரல் போன்ற பிரச்சினைகளோடும், கண் பார்வை மற்றும் செவித் திறன் குறைபாடுகளோடும்தான் இருப்பார்கள்.
குறைமாத குழந்தைகள் பிறக்க என்ன காரணம்?
குறைமாத குழந்தை பிறப்பு என்பது நம் ஊரில் மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ள பிரச்சினை. 20 முதல் 25% வரை குறைமாத குழந்தை பிறப்பு உள்ளது என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
குறைமாத பிரசவம் என்பது முழுமையான கர்ப்ப காலத்திற்கு முன்கூட்டியே பிரசவிக்கும் பிரசவம் ஆகும். பொதுவாக பிரசவ காலம் என்பது 40 வாரங்கள்; இதில் 40 வாரங்களுக்கு முன்னரே பிறக்கும் குழந்தைகள் குறைப் பிரசவக் குழந்தைகளாக கருதப்படுவர். 37 வாரங்களுக்கு முன்பு நடக்கும் பிரசவங்கள் குறைமாத பிரசவங்கள் ஆகும்.
இதில், 33 வாரங்களுக்கு உட்பட்டு பிறக்கும் குழந்தைளுக்கு பிரச்சினை அதிகம் இருக்கும். எனவே, இவர்களை தீவிரமாக கண்கானிக்க வேண்டியது அவசியம்.
பெண்களுக்கு குறைந்த வயதில் திருமணம் செய்வது; தாய்க்கு நீண்ட கால நோய்களான இதய பாதிப்பு, சிறு நீரக பாதிப்பு, நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், மரபணு குறைபாடு இருப்பது; தாய் உடல் எடை மற்றும் உயரம் குறைவாக இருப்பது; கர்ப்ப காலங்களில் அதிகமான ரத்தப்போக்கு ஏற்படுவது; அதிக வேலை மற்றும் மன உளைச்சல்; ஒரே பிரசவத்தில், ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் பிறப்பது; சிசுவை சுற்றியுள்ள பனிக்குடம் வெடிப்பது; தாயின் சீரற்ற உணவு பழக்கம்; போலிக் அமிலம், வைட்டமின் பி மற்றும் சி குறைவு; ரத்தசோகை, தைராய்டு பிரச்னை; கர்ப்ப காலத்தில் தாய்க்கு நோய் தொற்று ஏற்படுவது; செயற்கை முறை கருத்தரிப்பு, நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, கர்ப்பப்பை வாய் சிறியதாக இருப்பது, ஹார்மோன் சமநிலையற்ற தன்மை போன்ற பல்வேறு காரணங்களால் குறைமாதக் குழந்தைகள் பிறக்கின்றன.
குறைமாத பிரசவங்களை தடுப்பது எப்படி?
கர்ப்பம் உறுதியான நாளிலிருந்து முறையான மருத்துவ ஆலோசனையை பின்பற்றுவது முக்கியம். தாய் எடுத்துக்கொள்ளும் உணவில் இருந்து, உறக்கம் வரை சீராக இருக்க வேண்டும். குறிப்பாக தாயின் உடல் எடை 40 கிலோவிற்கு குறையாமல் இருப்பது நல்லது. உண்ணும் உணவில் இரும்புச் சத்து, வைட்டமின் சி, கால்சியம் போன்ற சத்துக்கள் இருக்குமாறும், கர்ப்பகால சர்க்கரை தாக்காதவாறும், ஹார்மோன் சமநிலையற்ற தன்மை உருவாகாதவாறும் பார்த்துக்கொள்ள வேண்டும். இதன்மூலம் குறைமாத குழந்தைப் பிறப்பை குறைக்கலாம்” என்கிறார் டாக்டர் சீனிவாசன்.